நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தலிலேயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் அண்மையில் வடமாகாண முதலமைச்சரின் வீட்டிற்கு முன்னாலுள்ள வீதி ஒடுக்கமானது. அதில் நூறு பேரிருந்தாலும் பாரிய ஜனப்பிரளயம் போன்றே தென்படும்.
அதனைக் கண்டு தனக்கு மக்கள் சக்தியிருக்கிறது என முதலமைச்சர் நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைப்பாராகவிருந்தால் மாகாண சபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்மக்களின் உரிமைகளை வலியுறுத்தியும், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பினரை எதிர்த்து எழுக தமிழ்ப் பேரணியொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற அந்த எழுக தமிழ்ப் பேரணியில் எத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்பது சுமந்திரனுக்குத் தெரியும்.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கெதிராக சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க உடனடியாகவே முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்பாகக் கூடிய இளைஞர் கூட்டத்தையும்,
இரண்டாம் நாளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் வெற்றிகரமாகக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்ததும் சுமந்திரன் போன்றவர்களுக்கு ஏற்றுக் கொள்வது கடினமாகத்தானிருக்கும்.
ஏனெனில், முதலமைச்சருக்கு ஆதரவான மக்கள் எழுச்சி அவர்களை மிரட்டியுள்ளது என்பது தான் உண்மை.
இதனால் தான் வடமாகாண முதலமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். வடமாகாண சபையைக் கலைத்து விட்டு அடுத்த தேர்தல் நடாத்த வேண்டும் என்றெல்லாம் சுமந்திரன் கூறுகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களிலேயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும்.
அவ்வாறு சுமந்திரன் வெற்றியடைந்த பின்னர் குறிப்பிட்டால் அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தமிருக்கும்.
எமது மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் சகல உரிமைகளையும் விற்றுப் பிழைப்பவர்கள் என்று பெயரெடுத்த சுமந்திரன் போன்றவர்கள் வடமாகாண மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற முதலமைச்சருக்கு எதிராகச் சவால் விடுவது அர்த்தமற்ற, சிறுபிள்ளைத்தனமான செயல் எனவும் கடுமையாகச் சாடினார்.