Breaking
Mon. Nov 25th, 2024

(ஊடகப்பிரிவு)

இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன் யுன்னான் மாநிலமும் அதேபோன்று சீனாவும் சாதகமான நவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும், யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் ( Gao Shuxun ) தெரிவித்தார்.

யுன்னான் மாநில அரசாங்கத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களில் ஒருவரும், யுன்னான் அரசின் ஆலோசகர்களில் ஒருவருமான அவர், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, அவரது அமைச்சில் நேற்று (23) சந்தித்துப் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வருடம் இடம்பெறவுள்ள 05 வது சீன தென்னாசிய எக்ஸ்போ (CSAE) மற்றும் 25வது சீன குன்மிங் இறக்குமதி ஏற்றுமதி கண்காட்சி தொடர்பிலும் (CKIEF) அமைச்சருக்கும், தூதுக்குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றன.

ஜூன் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை குன்மிங்கில் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சிக்கான அழைப்பிதலையும், தூதுக்குழுவினர் அமைச்சரிடம் கையளித்தனர்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கான சீன தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளுக்கான மூன்றாவது செயலாளர் லீ சின் யூ வும் பங்கேற்றிருந்தார்.

தென்னாசிய மற்றும் இலங்கைக்கு மிகவும் அண்மையில் உள்ள சீன மாநிலமான யுன்னானுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், தற்போது 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதாக யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் இலங்கையுடன் விவசாய, உயிரியல் மருந்துப் பொருட்கள், உல்லாச பயணத்துறை ஆகியவை தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளில் யுன்னான் அரசாங்கம் ஆர்வங்காட்டி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் யுன்னான் மாநிலத்தில், 2016 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 235 பில்லியன் டொலராக இருந்தது. அத்துடன் யுன்னான் மாநிலம் விரைவான வளர்ச்சி பெரும் பொருளாதார இடமாகவும்.

குன்மிங்கை தொடர்புபடுத்தும் கேந்திர மையமாகவும் விளங்குகின்றது. அத்துடன், சீனாவில் உள்ள மாநிலங்களில் இலங்கைக்கு மிக அண்மையாக இருப்பதால், நான்கு மணி நேர விமான பயணத்தின் மூலம் இந்தப் பிரதேசத்தை அடைய முடியும்.
சீனாவின் புதிய திட்டமான “ஒரே வழி ஒரே பட்டுப் பாதை” இலக்கினை சாதகமாக்குவதற்கு யுன்னான் மாநிலம் பிரதானமான பாத்திரத்தை வகிக்கின்றது. இதன்மூலம் தென்கிழக்கு ஆசியாவின் பிரதான வாயில் ஒன்றை அடைவதற்கு “ஒரே வழி ஒரே பட்டுப்பாதை” திட்டம் உதவுகின்றது.

இதேவேளை, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் ஆர்வமாக இருக்கும் யுன்னான் மாநில ஆலோசகரை பாராட்டிய அமைச்சர் பதியுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“பரஸ்பர இரு நாடுகளுக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் நன்மை கிட்டும். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலும், வழிகாட்டலிலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான இறுதிக்கட்ட செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்.

குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை இதன் மூலம் இலங்கை பெற்றுக்கொள்ளும் என நாங்கள் நம்புவதோடு, உலகளாவிய வர்த்தக சந்தையில் இலங்கையின் ஈடுபாட்டை இது மேலும் அதிகரிக்குமெனவும் எண்ணுகின்றோம்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் நேரான பாதையில் பயணிக்கின்றது. யுன்னான் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்” என்று கூறினார் .

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *