சுயநல சக்திகளின் தூண்டுதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள் இரையாகி விடக் கூடாது என்று அந்த மாநிலத்தின் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் 70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஹபூபா முஃப்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது:
துப்பாக்கியைப் பயன்படுத்துவதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது. ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் ஒன்றும் கெட்டவர்கள் அல்ல; அதேபோல், இந்தியாவும் கெட்ட நாடு அல்ல. ஜவாஹர்லால் நேரு முதல் தற்போது நமது நாட்டின் தலைவராக இருப்பவர் வரையிலும், அரசியல் கட்சிகளும் தவறுகள் இழைத்துள்ளன.
முந்தைய மத்திய அரசுகள் செய்த தவறுகளால், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சில நடவடிக்கைகளை எடுத்தார். அதை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி முடிக்க வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பற்றி எரிய வேண்டும் என்றும், அழகான காஷ்மீரை மற்றொரு சிரியாவாகவும், ஆப்கானிஸ்தானாகவும் மாற்ற வேண்டும் என்றும் சில சுயநல சக்திகள் விரும்புகின்றன. அவர்களது தூண்டுதலால் இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக் கூடாது.
ஜம்மு-காஷ்மீரில் தற்போதுதான் முதல்முறையாக என்கவுன்ட்டர் நடக்கவில்லை (பர்ஹான் வானி சம்பவத்தை குறிப்பிட்டார்) கடந்த காலங்களிலும் என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடந்துள்ளன. அதைப் போல்தான் தற்போதும் நடந்துள்ளது. இதில் எனது அரசு என்ன தவறு இழைத்துள்ளது?
சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. அவர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும்தான் செல்ல வேண்டும். பெரிய பிரச்னைகளுக்கு சிறுவர்களால் தீர்வுகாண முடியாது. சிறுவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பதை அவர்களது பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் மெஹபூபா முஃப்தி.
கீழே விழுந்த தேசியக்கொடி:
முன்னதாக, மெஹபூபா முஃப்தி தேசியக் கொடியை ஏற்றியபோது, திடீரென அது கொடிக் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தது. இதைத் தொடர்ந்து, மெஹபா மூஃப்தி மரியாதை செலுத்தும் வரையிலும், கொடியை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கைகளில் வைத்திருந்தனர்.
மெஹபூபா முஃப்தி, அணிவகுப்பு மரியாதை ஏற்கச் சென்றதும், கம்பத்தில் கொடியை அதிகாரிகள் பறக்கவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒமர் அப்துல்லா விமர்சனம்:
இந்நிலையில், முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மெஹபூபா முஃப்தி, சுதந்திர தின உரையில் பொறுப்பேற்காததை விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறுகையில், “2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலும் (ஒமர் முதல்வராக இருந்த காலம்) நடந்தவை அனைத்துக்கும் எனது தவறே காரணம் என்றால், கடந்த 4 மாதங்களில் நடந்தவற்றுக்கு மெஹபூபாவின் தவறு காரணமில்லையா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.