ஒன்றிணைந்த சுகாதார பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், சகல மாணவர்களின் பங்குபற்றலுடன் நாளை (24) பாரிய ஆர்ப்பாட் டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் வைத்தியசாலைகளின் மட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கறுப்புப்பட்டி அணிவிக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘ஒன்றிணைந்த சுகாதாரத்துறைக்கு இணைத்துக் கொள்ளவுள்ள சுகாதார பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கமோ சுகாதார அமைச்சோ இதுவரையில் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை. விசேடமாக சுகாதார அமைச்சின் செயலாளர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். அமைச்சரின் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் கிடைப்பதில்லை. கவனமின்மையின் காரணமாகவே இந்தப் பிரச்சினை தீர்வின்றி நீடித்து வருகிறது.
2021ஆம் ஆண்டிலிருந்து இந்த ஒன்றி ணைந்த சுகாதார பட்டதாரிகள் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படாமல் இருக்கிறார்கள். இது சுகாதார அமைச்சின் தவறின் காரணமாக இடம்பெற்றுள்ளது.
அதற்காக தனியான பரீட்சைகளும் நடத்த வேண்டும். ஆனால் இன்றும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு அதிகாரிகளையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தப் பிரச்சினைக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்டிருந்தது.
ஆனால், புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சுக்கு நேரமில்லாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கான பொறுப்பை நளிந்த ஜயதிஸ்ஸவே ஏற்க வேண்டும்.
எனவே, இந்தப் பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பில் ஒரு மாதத்துக்கு மேல் கோரிக்கை முன்வைத்து வருகிறோம். ஆனால் பதில் இல்லை. இதற்கு அப்பால் இந்தத் துறை சார்ந்தவர்கள் தொடர்பில் பலவந்தமாக பரீட்சை நடத்த திட்டமிட் டுள்ளார்கள்.
ஆனால், தனியார்த் துறை மாணவர்களை தவிர வேறு எந்தப் பட்டதாரிகளும் பரீட்சைக்கு தோற்றமாட்டார்கள்.
எனவே, எதிர்வரும் இரு நாட்களில் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்காவிட்டால் சகல மாணவர்களின் பங்குபற்றலுடன் 24ஆம் திகதி பெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள் ளோம். அதற்கு ஆதரவளிக்கும் வகையில் வைத்தியசாலைகளின் மட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருப்புப் பட்டி அணிவிக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்போம்’’ என்றார்.