வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இடைநிறுத்தப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றும், இன்றும் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.
நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து 454 சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனமானது கடந்த 6ஆம் திகதி வடமாகாண ஆளுநரால் இடைநிறுத்தப்பட்டது.
குறித்த நியமனம் தொடர்பில் 1923 சுகாதார தொண்டர்களையும், நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத் தேர்வில் மீள தோற்றுமாறும் வடமாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கமைவாகவே சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதில் 1500இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது கல்வித் தகுதியினையும், தாம் கடந்த காலத்தில் சேவையாற்றியமையையும் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, குறித்த நேர்முகத் தேர்வுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.