சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமாக அமெரிக்க ராஜதந்திர ரீதியிலான பகிஷ்கரிப்பை மேற்கொள்ளலாம் என தெரியவருகிறது.
இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர ரீதியிலான பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டால், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தப்பட்ட விழாவில் அமெரிக்க அதிகாரிகள் எவரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள். எனினும் அமெரிக்க விளையாட்டு வீர, வீராங்கனைகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதில் இது தடையாக அமையாது.
அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கு இடையிலான நேரடியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று சில தினங்களுக்கு பின்னர், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தளம் வழியாக கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் மூன்று மணி நேரம் நடந்துள்ளது. எனினும் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றி, இதன் போது பேசப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சாளர் ஜோன் சாக்கி தெரிவித்துள்ளார்.