அண்மையில் எனது காதுகள் வழி சென்று மூளையில் இறங்கி, இதயத்தை இறுக்கிய சம்பவங்களில் ஒன்று சீதனம் தொடர்பான முரண்பாடு காரணமாக தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்த ஒரு இளம் பெண்ணின் சாவு.
பெண்கள் சீதனம் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக தவறான முடிவெடுத்து மாண்ட கதைகள் எமது நாட்டில் குறைவில்லாமல் படிக்கக் கிடைக்கும். அதுமட்டுமன்றி, படிக்க வராத , கவனத்துக்கு எட்டாத கதைகள், காவியங்கள் ஏராளம்.
அதுமட்டுமன்றி, பெண்ணடிமைத்தனத்துக்கான போராட்டங்கள் பாடல்களிலும், வாய்மொழிகளிலும், மகளிர் தினத்திலும் மட்டுமே உயிர்பெற்று, பின்னர் அதேவேகத்தில் மறைந் தும் விடுகின்றன. செயற்பாட்டு வடிவில் எதுவும் முன்னெ டுக்கக்கப்படுவதில்லை.
சீதனம் என்பது, தமிழர் தம் வாழ்க்கையின் புரையோடிப் போன கலாச்சார மரபு தான். அது எவ்வாறு எமது கலாசாரத்துக்குள் உள்ளெடுக்கப்பட்டதென்றால், ஒரு பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பும் போது தாங்கள் ஆசையாயும் பாசமாயும் வளர்த்த தமது பெண்ணுக்கு அன்பளிப்பு வழங்கும் நோக்குடன் சிலவற்றை பரிசளித்தார்கள்.
அன்பை பரிசளித்தார்கள், சில பொருள்களைப் பரிசளித்தார்கள். அதில் தாய் வீட்டுச் சீதனமாக அம்மி, குழவி, கட்டில், சமையல் பொருட்கள் , பாத்திரங்கள் எனத் தமது மகள் பிறிதொரு வீட்டில்( மணமகன்) வாழப் போகிறாளே என எண்ணி அவளுக்கான பொருள்களை அனுப்பி வைத்தார்கள், பின்னர் காலப்போக்கில் நகைகளைப் பரிசளித்தார்கள் , நிலங்களைப் பரிசளித்தார்கள், பணத்தைப் பரிசளித்தார்கள்.
இவையெல்லாவற்றையும் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் இயல்பு வரம்புக்குள் எட்டும்படியே செய்து வந்தார்கள், அவை மணமகன் கேட்டுக் கொண்டதன் பேரிலேயோ, நிபந்தனை விதித்தோ வழங்கப்பட்டதல்ல.
ஆனால், இன்று யாழ்ப்பாணத்தானின் நிலையென்ன? உலகுக்கு பண்பு, வரலாறு, வீரம், வாழ்வியல் எல்லாவற் றைப் போதித்த தமிழர்(யாழ்ப்பாணத்தார்) இப்போது பெண்ணடிமைத்தனம், ஒடுக்குமுறைகளைப் போதிக்க விளைகிறார்களா? என எண்ணத் தோன்றுகிறது.
அவ்வாறு இங்கு நடக்கும் கல்யாணச் சந்தையிலே சீதனப் பேரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கல்யாணச் சீதனம் என்ற சொல்லின் அர்த்தம் இழந்து, ஒரு பேரம் பேசும் சொல்லாக உருவெடுத்துள்ளது அல்லது சமூகத்தில் களை பெருக்கெடுத்துள்ளது.இதைக் களைந்தால் தான் சமூகம் துளிர்விட ஆரம்பிக்கும்.
இளம்பெண்ணின் சாவு சாதாரணமானது அல்ல
அண்மையில் ஒரு இளம் பெண் கல்யாணம் எல்லாம் பொருந்தி முற்றான பின்னரும், மணமகன் தரப்பினர் அதிக சீதனம் கேட்டபடியால் மனமுடைந்து தவறான முடிவு எடுத்துத் தமது உயிரைத் தாமே போக்கிக் கொண்டார்.
இந்தச் செய்தி யார் யாருக்கெல்லாம் தெரியும், அல்லது தெரிந்திருந்தும் சாதாரணமான விடயம் என கடந்து போவதால், இது தான் எமத சமூகத்தின் வழமையான இயல்பு என நிறுவ முயல்கிறோமா? தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்த அந்த யுவதி தாய் தந்தை இல்லாதவர், படித்து கொழும்பில் வேலை செய்கிறார்.
அந்த யுவதியின் அக்காவே யுவதிக்குத் திருமணம் பேசி வைத்திருந்தார். சீதனம் தொடர்பான பேச்சுக்கள் முன்னரே இடம்பெற்று அவளும் தனது புது வாழ்க்கை பற்றி எத்தனையோ கனவுகளுடன் பொழுதுகளை இன்பமாய் கடந்திருப்பாள், புடவை நகைகள் வாங்கி தனது திருமண வாழ்க்கை குறித்து அவளது மனம் எவ்வளவு தூரம் புளகாங்கிதம் அடைந்திருக்கும்.
இது இவ்வாறிருக்க மணமகன் தரப்பினர் ஏற்கனவே இணங்கிக் கொண்டதை விட மேலதிகமாக சீதனப்பணம் கேட்கவே அவள் மனமுடந்து விட்டாள், பெற்றோரை இழந்த அவளுக்கு அவளது அக்கா தானே கடன் பட்டு சீதனம் தரச் சம்மதித்தாள். இப்போது அதற்கு அதிக சீதனம் கேட்டால் அக்கா என்ன பண்ணுவாள்? எனக்காக சிரமப்படுவாள் , நான் அவளுக்கு பாரமாய் இருக்ககூடாது என்றுதானே அவள் தவறாக முடிவெடுத்து தனது உயிரைத் தானே பறித்திருக்கிறாள்.
அவள் தனது எதிர்கால வாழ்க்கை குறித்து என்னவெல்லாம் கனவு கண்டிருப்பாள், அவளின் வாழ்க்கையை பறித்தது எது? மேலதிகமாகக் கோரிய ஓரிரு இலட்சங்கள் மாத்திரமா? அல்லது எமது சமூகமா?எவ்வளவு தொகை என்பது கணக்கிலில்லை. என்ன என்பது தான் கதை..
ஒரு பெண்பிள்ளையைப் பெற்று அவளை வளர்த்துப் படிக்க வைப்பித்து, அவள் வயதுக்கு வந்த வேளை கவனிப்பு, பிரத்தியேக கவனிப்பு , எவ்வளவோ இடங்கள் ஏத்தி இறக்கி பெற்றோர் படிப்பித்து ஆளாக்கி விட்ட பிறகும் அவளை கரை சேர்க்க ஏன் இந்த சமூகம் தடையாக இருக்கிறது என புரியவில்லை.
ஆண்களை வலிமையாய் படைத்தது பெண்ணைக் காக்கவே என்பது மறைந்து, இன்று பெண் கன்னி கழியவும் சீதன சந்தையில் தகப்பன் காசு கொடுக்க வேண்டிய செயலை எப்படி நாம் விபரிக்க? ஆண் என்பவன் யார்? அவனது வலு என்ன? அவன் எவ்வாறு செயற்பட வேண்டும்? உழைத்து ஒரு பெண்ணுக்குச் சாப்பாடு போட்டு அவளின் வாழ்க்கையைப் பொறுப்பெடுக்காத எந்த ஒரு ஆணும் தன்னை ஒரு குடும்பத் தலைவன் என்று கூறிக்கொள்ள முடியுமா?
மாப்பிள்ளைகளின் இன்றைய விலை நிலவரம்
இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளைக்கான ‘ரேட்’டைத் தெரிந்து கொள்வது பயனுடையது.
1. வேலை வெட்டியில்லாத மாப்பிள்ளை – 8 லட்சம் பணம், நகை 15பவுண், வீடு 1
2. கூலி வேலை மாப்பிள்ளை – 10 லட்சம் பணம் , நகை 15 பவுண், வீடு 1
3. தனியார் துறை சிறு சுய கடை மாப்பிள்ளை – 15 லட்சம் பணம் , நகை 20 பவுண், வீடு 1, வீட்டுப் பாத்திரம்
4.தனியார் துறை மாப்பிள்ளை – 18–20 லட்சம் பணம் , நகை 25 பவுண், வீடு– 1, மோட்டார் சைக்கிள்– 1
5.அரச சிற்றூழியர் –18–20 லட்சம் பணம் , நகை 20/25 பவுண், வீடு 1
6.அரச வேலை மாப்பிள்ளை – 30 லட்சம் பணம் , நகை –30 பவுண், வீடு –1 , வளவு – 1, மோட்டார் சைக்கிள் / கார்
7.டாக்டர் மாப்பிள்ளை – 80–100 லட்சம் பணம் , நகை 30 பவுண், வீடு யாழ்ப்பாணத்தில் 1, கொழும்பில் வீடு –1 , கார் – 1
8.இஞ்சினியர் மாப்பிள்ளை – 80–100 லட்சம் பணம் , நகை 30 பவுண், வீடு யாழ்ப்பாணத்தில் 1, கொழும்பில் வீடு 1, கார் 1.
என இன்னும் பட்டியல் நீளலாம், இது நகைச்சுவைத் தரவு என நீங்கள் மனதுக்குள் சிரித்தால் உங்களைப்போல முட்டாள் வேறு எவரும் இருக்க முடியாது. இவ்வாறு அமைகிறது தற்போதைய மாப்பிள்ளைச் சந்தை நிலவரம்.
இது இவ்வாறிருக்க பெண்ணைப்பெற்றவர்கள் பெண்ணை படிப்பிக்கவே எல்லாச் சொத்தும் அழிந்து விட, திருமணத்துக்காக வெளிநாட்டு உறவுகளிடம் பல்லுக்காட்ட விளைகிறார்கள், ஓடாய்த் தேய்கிறார்கள்.ஆண்கள் பிள்ளைகளை பெறுவதில் மட்டும் தங்கள் ஆண்மைகளை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மைச்சம்பவங்களை ஆதாரமாக தர முனைகிறேன்
ஆதாரம் – 1
எனது சக நண்பன் ஒருவன். அரச வேலை பார்க்கிறான், கை நிறையச் சம்பளம், அவனுக்கொரு தங்கை,அவளோ மருத்துவம் படிக்கிறாள், நாளை அவள் ஒரு மருத்துவர், அவனது பெற்றோர் பிள்ளைகளை ஆளாக்கவே சொத்துக்களை செலவழித்து விட்டனர். அதுதான் சரியும் கூட
எனினும் நண்பன் அவளுக்குச் சீதனம் சேர்க்கவே தன் வேலையைத் துறந்து விட்டு வெளிநாட்டுக்கு உழைக்க செல்ல ஆயத்தமாகிறான்.நான் கண்டித்தேன்.
‘‘நல்ல வேலை ஏன் விடுகிறாய்? உன் தங்கை டொக்ரர் தானே? பிறகென்ன குறை? விடு கவலையை’’ என்றேன். அவனது பதிலோ ‘‘இல்லை அவளுக்கு சீதனம் எதிர்பார்பார்ப்பார்கள் வீடு வாங்க வேண்டும், நகை சேர்க்க வேண்டும், சீதனம் சேர்க்க வேண்டும் ஆகவே நான் வெளிநாடு சென்றாகத்தான் வேண்டும்’’ என்றான்.
டொக்ரர் பெண் அவள். அவளது அண்ணனே இவ்வளவு தூரம் கவலை கொள்கிறான் என்றால் பல தங்கைகள் அக்காக்களை கொண்ட தம்பிகள் அண்ணன்மார், தந்தைமார் எவ்வளவு சிந்திப்பார்கள்.எவ்வளவு ஓடாய்த் தேய்ந்து உழைப்பார்கள், இவர்களின் குருதியைத்தானே மாப்பிள்ளை சீதனமாக உறுஞ்சுகிறான், அவ்வாறானவர்கள் வெட்கம் கெட்டவர்கள் என்று எடை போடுங்கள்.
ஆதாரம் 2
பல தெரிந்த நண்பர்களும் தெரியாத நண்பர்களும் சீதன மோகத்துக்காக தாம் உயிராய்க் காதலித்த காதலிமாரை கைவிட்டு பிரிவதைப் பார்த்திருக்கிறேன். நீங்களும் இதுபோன்ற சம்பவங்களைஅறிந்திருக்கலாம்.
இது எமது சமூகத்தின் கோளாறா? அல்லது சமூகத்தை கட்டியெழுப்புவர்களின் கோளாறா என்ற வினா தொக்கு நிற்கும் போது இது சமூகத்தை கட்டியெழுப்புபவர்களின் கோளாறே என உறுதியாக கூறலாம்.
ஏனெனில் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தம் பிரதேசத்தில் சாதிய ஒடுக்கு முறை அல்லது இவ்வாறான சீதன ஒடுக்குமுறைகளோ இல்லாது இருந்ததை எவராலும் மறுக்கமுடியாது.
எனவே தற்போது சமூகத்தை வழி நடத்தும் ஆணிவேர்களில் பிழையிருக்கிறது.இன்று சீதனக் கொடுமையால் உயிர் துறக்கும் பெண்களைவிட திருமணம் ஆன பின்பும் சீதனம் கேட்டு அடிவாங்கும் / அவஸ்தைப்படும் பெண்களே அதிகம்.
அதைவிடச் சீதனம் இல்லாததனால் திருமண வயதையும் தாண்டிய முதிர் கன்னிகள் இப்போதும் எமது சமூகத்திடையே இருப்பது எமது கண்களுக்குப் புலப்படவில்லையா? அல்லது அவர்கள் மீது இந்த சமூகம் பார்வைச் செலுத்தவில்லையா?சீதனம் கேட்போரை அணுகிக் கேட்டால் உண்மை வெளிக்கும்.
சொல்வார்கள் “மகனுக்கு வாங்கினால் தானே மகளுக்கு கொடுக்கலாம்” ஆக வாங்கினால் கொடுக்கலாம் என்ற ‘கொன்செப்றை’ மாத்தி “வாங்கத்தேவையில்லை; ஆகவே கொடுக்கவும் தேவையில்லை” என்ற நிலைப் பாட்டை ஏன் எங்கள் சமூகம் இன்னமும் இனம்காணவில்லை?அன்றும் சரி இன்றும் சரி ஆண்பிள்ளையைத் தான் முதலாவதாக பெற்றெடுத்து விட்டு பின்னர் பெண்பிள்ளை பெற எல்லாருமே ஆசைப்படுகிறார்கள்.
தொடர்ச்சியாக பெண்பிள்ளைகளை பெற்றவர்கள் கூட எங்கே உழைக்கவும் சீதனம் கொடுக்கவும் எனக்கொரு ஆண்மகன் மீட்பனாக வேண்டும் என்று வேண்டுதல் செய்து ஆண் மக்களை அடைந்தவர்களும் உண்டு.
இந்தச் சமூகம் ஒருவனுக்கொருத்தி என்ற வரைமுறையை வைத்ததன் அர்த்தம் அவளோடு அளவான சொத்தோடு இன்பமாய் வாழ்தல் என்ற எடுகோளை முன்னிறுத்தித்தான்.இன்று பல பெற்றோர்கள் எங்கள் மகள் யாரையாவது காதலித்தால் ஒரு மாதிரி சீதனம் இல்லாமல் முடித்துக் கொடுத்திடலாம் என்று எண்ணத்தக்க நிலை. ஆனால் வெளியே யாரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
எமது கலாசாரம் பிழையென நான் வாதிடவில்லை, எமது மரபுகள் தவறென நான் வாதிடவில்லை, எமது இனத்தின் மரபுகள் ஏதோ நன்மைக்காகவே உருவாக்கப்பட்டன. சீதனம் என்ற பொருளுடமையும் நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது.ஆனால் எமது இனத்தின் கூர்ப்பு வழி வந்தவர்கள் அதனை விகாரத்துக்கு இட்டுச் சென்றதே இன்று விவகாரமாக மாறியுள்ளது.
ஆண் என்பவன் தன்னை நம்பி கரம்பிடிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை தனது உழைப்பில் நிறைவேற்றி வாழ வைக்க வேண்டும்.இன்றைய எமது தமிழ்ப் பெண்கள் ஆண்களை விட அக்கறையாக, திறமையாகப் படிக்கிறார்கள், நல்ல வேலை செய்கிறார்கள்,கை நிறையச் சம்பாதிக்கிறார்கள் ஆண்களைவிட பெண்கள் அதிவேகமாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டு விட்டார்கள், அவர்களே அவர்களுக்கான சீதனத்தை சேர்த்துக்கொள்கிறார்கள், லோன் போட்டு வீடு கட்டி சீதனம் கொடுக்கிறார்கள், இதில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இங்கே காண்கிறோம்.
காலக்கொடுமை என்னவென்றால் இவ்வாறான் பெண்களிடமும் அதிக சீதனம் கறக்க எமது மாப்பிள்ளைமார் தரப்பு முயல்வதுதான்.பெண்களின் அசுர வேக வளர்ச்சியால் இன்னும் சில தசாப்தங்களில் பெண்களுக்கு சீதனம் கொடுத்து ஆண்கள் திருமணம் செய்யும் காலம் வரும் என்பதில் வியப்பில்லை.
அதுதான் நேர்த்தியும் கூட. நான் சீதனம் வாங்குவது தவறு என வாதிட வரவில்லை. ‘‘தந்தால் வாங்கு, கேட்டு வாங்காதே”
K.மதுசுதன்