பீஹார், மாநிலத்தின் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முகமது சோஹன், 25, இவர், நுரேஷா காதுன், 20, என்ற பெண்ணை காதலித்து வந்தார். தங்கள் காதல் விவகாரம், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பயந்த இவர்கள், டில்லிக்கு ஓட்டம் பிடித்தனர்.
பின், சமீபத்தில், தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திரும்பினர். அவர்களின் காதலை ஏற்ற முஸ்லிம் பெரியவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் ஆலோசனைப்படி, இருவருக்கும், சிவன் கோவில் வளாகத்தில், இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் நடந்த இந்த திருமணத்தில், ஹிந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த, நுாற்றுக் கணக்கானோர் பங்கேற்று, புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.
திருமணம் நடக்க முக்கிய காரணமாக இருந்த, பஞ்சாயத்து தலைவர், சுதிர் குமார் சிங், ”இது, சிவன் கோவில் வளாகத்தில் நடந்த முஸ்லிம் திருமணம். மதங்கள் இடையே வெறுப்புணர்வை வளர்க்க நினைப்பவர்களுக்கு, அன்பை போதிக்கும் செய்தியாக, இந்த திருமண நிகழ்வு அமைந்துள்ளது,” என்றார்.