சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக நீதிமன்றம் மாற வேண்டும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒரு நாடு, ஒரு சட்டத்ததுக்கான தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில், அரசாங்கம் முன்னணியில் இருப்பதாகவும், அவர் கூறினார்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ், நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் புதிய கட்டிடத்துககான அடிக்கல்லை இன்று (25) நாட்டிய பின்னர் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், சட்ட தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் பிரச்சினைகளை திறம்பட தீர்ப்பதற்கும், நீதிமன்றம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய நாம் அனைவரும் வழக்கற்றுப் போன முறைகளிலிருந்து விலகி அணுகுமுறையையே மாற்ற வேண்டுமென்றார்.
காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பதிலாக கட்டப்படும் புதிய நீதிமன்ற வளாகம், 06 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்கான செலவு 16,500 மில்லியன் ரூபாயாகுமென்றார்.
‘நீதிமன்றம் என்பது ஒரு நாட்டின் அடிப்படை தேவை. அதை நோக்கிய ஒரு வரலாற்று ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
‘அரசியல் ரீதியாக நாம் எவ்வாறான எண்ணப்பாட்டை கொண்டிருந்தாலும், இறையாண்மை நாட்டு மக்களிடமேயே உள்ளது. எனவே, நாம் முன்வைக்கும் கொள்கைகளும் சீர்திருத்தங்களும் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
‘வரலாற்றில் ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நாங்கள் பணியாற்றினோம். தனிப்பட்ட குறுக்கீடு மூலம் நாங்கள் ஒருபோதும் சட்டத்தை வளைக்க முயற்சிக்கவில்லை.
‘எனவே, மக்களின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு திருத்தத்துக்கு நாங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளோம்’ எனவும், பிரதமர் கூறினார்.
‘நம் நாட்டு மக்கள் இன்னும் காலாவதியான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து புதிதாக சொல்ல தேவையில்லை. இந்த அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிப்பது நமது பொறுப்பு.
‘தற்போதுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவை சமரசக் குழுவால் தீர்க்கப்பட முடியுமானால் அவை அதற்குள் தீர்க்கப்பட வேண்டும்.
‘மேலும், வழக்கு விசாரணைகளின் தாமதம் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னதாகவே இறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
‘இந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, இன்று தொடங்கும் நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும்’ எனவும், அவர் தெரிவித்தார்.
‘இன்று ஆரம்பிக்கப்படும் இந்த புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு இணையாக நாடு முழுவதும் 100 புதிய நீதிமன்ற அறைகளை நிறுவ நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். நீதித்துறையின் உட்கட்டமைப்பு இந்த முறையில் உருவாக்கப்படும்போது, வழக்குகளை விரைவுபடுத்தலாம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் இது ஒரு வரலாற்று நடவடிக்கையின் ஆரம்பம்.
‘வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணைகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. அந்த வசதி சில சிறைகளுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் முழு நீதி அமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எங்கள் குறிக்கோள். எதிர்வரும் பெப்ரவரி முதல் அந்தப் பணியைத் தொடங்க அமைச்சர் ஆர்வமாக உள்ளார். இது நீதித்துறையின் செயல்திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
‘கடந்த காலத்தை நோக்கும்போது 40 ஆண்டுகளின் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்’ எனவும், பிரதமர் கூறினார்.