Breaking
Sun. Nov 24th, 2024

கடந்த மே மாதம் 7 வயது சிறுவனொருவன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டான்.

அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என கோரியும் இன்று முற்பகல் களுவாஞ்சிக்குடி நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலை தரப்பினரால் உரியவாறு சிகிச்சை வழங்கப்படாமையே சிறுவனின் மரணத்திற்கான காரணம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்கு அருகிலிருந்து களுவாஞ்சிக்குடி நகரம் வரை மக்கள் பேரணியில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி நகரத்தை சென்றடைந்த பின்னர் பேரணியில் ஈடுபட்டிருந்த சிறுவனின் பெற்றோரால், பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ஆகியோரிடம் மஹஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஜீ. சுகுணனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் எவ்வித குறைபாடுகளும் நிலவவில்லை என்பதை மரணமடைந்த சிறுவனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

உரிய முதற்கட்ட சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காகவே சிறுவனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் மேலும் கூறினார்.

ஆயினும், சிறுவனின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு வினவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *