பிரதான செய்திகள்

சிறுபான்மை மீது நடாத்தப்படும் மிலேச்சனமான தாக்குதல்! அமைச்சர் றிஷாட் கண்டனம் (வீடியோ)

(ஊடகப் பிரிவு)

பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

ஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19 – 20 சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

குருநாகல் மல்லாவிப்பிட்டி பள்ளிவாசல், பாணந்துறை நகரப் பள்ளி, வெல்லம்பிட்டிய கோகிலவத்தை பள்ளி ஆகியவற்றையும் இனவாதிகள் தாக்கியுள்ளனர். அது மட்டுமன்றி 150 வருடம் வரை பழமை வாய்ந்த முஸ்லிம்களின் கிராமமான அழிஞ்சிப் பொத்தானை, பள்ளிய கொடவில் மதகுருவொருவர் பொலிசாரும் பார்த்திருக்க அவர்களின் மீது அடாவடித்தனங்களை மேற்கொண்டு அந்த மக்களின் வீடுகளை அடித்து நொருக்கி, அவர்களை சொந்த இடத்திலிருந்து விரட்டி வெளியேற்றியுள்ளனர்.

அதே போன்று 300 வருடம் பழமை வாய்ந்த தோப்பூரிலுள்ள கிராமத்தில் கொழும்பிலுருந்து சென்ற மதகுருவொருவர் அந்த மக்களை அச்சுறுத்தி அவர்களை அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்கள் மீது நடாத்தப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளினால் மக்கள் நல்லாட்சியின் மீதான நம்பிக்கையை வலுவாக இழந்து வருகின்றது.

இந்த உயர் சபையில் பேசிய அமைச்சர் மனோ கணேசன்,எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிமல் ரத்நாயக்க எம் பி ஆகியோர்களின் உரைகளை கூர்மையாக அவதானித்தால் சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ வேண்டியதன் அவசியத்தையே அவர்கள் வலியுறுத்துவது தெளிவாகிறது.

இந்த நாட்டிலே பயங்கரவாதத்தை ஒழித்த புலனாய்வுப் பிரிவொன்று இருப்பதாக கூறப்படுகின்றது. பாதாள உலக கோஷ்டியின் தலைவனை அந்தப் புலனாய்வுப் பிரிவே கைது செய்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்கள் தொடர்பில் ஒருவரைத்தானும் இவர்களால் கைது செய்ய முடியாமல் இருக்கின்றதே.

மதகுருவொருவொருவரே இந்த அடாவடித்தனங்களை முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். இந்த உயர் சபையிலே அவருடைய பெயரைக் கூற நான் கூற விரும்பவில்லை.

அந்த மதகுரு கைது செய்யப்படக் கூடுமென்ற அச்சத்தில், அவருடன் சேர்ந்த திருடர்களும் காவாலிகளும் முஸ்லிம் சமுதாயத்தை எத்தனை பாடுபடுத்துகின்றனர்?

பொலிஸ் தலைமையகத்திற்கு வந்து முறைப்பாடொன்றை செய்து விட்டு வெளியே வந்து வீர வசனம் பேசிச் சென்ற அவரை கைது செய்யாமல் விட்டுவிட்டு, அதற்கடுத்த நாள் குருநாகலையில் “நாங்கள் வருகிறோம், நீங்கள் தயாராகுங்கள்” என முற்கூட்டியே அறிவித்து விட்டு பொலிஸார் பெரிய நாடகமொன்றை நடத்தியதாகவே எமக்குப் புலப்படுகின்றது. அந்த நாடகத்தின் பின்னர் அந்த தேரரை கைது செய்யக் கூடாதென்று அவரைச் சார்ந்த திருடர்கள் அளுத்கமையில் ஊர்வலம் சென்ற போது அதற்கும் பொலிஸார் பாதுகாப்பு வழங்கும் நிலையே இந்த நாட்டில் இன்னும் இருக்கின்றது. அதுமட்டுமன்றி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமென்றெல்லாம் இவர்கள் நடிப்புக் காட்டுகின்றனர்.

இவர்கள் தங்களை ஒரு சண்டியர்களாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்கா கூறியது போல இவர்கள் ஒரு கோழைகளே. உண்மையில் வீரர்கள் போன்று தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தக் கோழைகள் இந்த நாட்டில் இரத்த ஆற்றை மீண்டும் ஓடச் செய்வதற்கு துடியாய்த் துடிக்கின்றனர்.

நல்லாட்சியை கொண்டுவந்ததன் நோக்கத்தை இவர்கள் இல்லாமல் செய்து இந்த நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற சதி நோக்கத்தில் செயற்படுகின்றனர்.

”பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் சட்டத்தை முறையாகக் கையிலெடுத்து இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் இங்கு கூறினார்.

அதே போன்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்காவின் பேச்சும் எமக்கு நம்பிக்கை தருகின்றது. சட்டமும் ஒழுங்கும் முறையாகக் கடைபிடிக்கப் பட வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி. இந்த நிலையில் மீண்டுமொரு கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்படும் இந்த இனவாத தேரரை உடன் கைது செய்யுமாறு நாம் வேண்டுகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

Related posts

Braking News முஸ்லிம் பகுதியில் கருப்புக்கொடி

wpengine

12 புதிய கொவிட் தொற்றாளர்கள்; வவுனியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Editor

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை

wpengine