சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட 10,588 பல்கலைக்கழக மாணவர்களுக்கமைய பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான கூடுதல் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ( 03) பிற்பகல் ஆலோசனை வழங்கினார்.
பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் 41,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சுதந்திரத்தின் பின்னர் முதல் முறையாக இம்முறை 10,588 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய வைத்திய பீடங்களில் மாத்திரம் 479 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அது நான்கு புதிய வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு சமமாகும் என்றும் தெரிவித்தார்.
எனினும், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆதரவினாலேயே இவை அனைத்தையும் நிர்வகிக்க முடிந்ததென்றும், பல்கலைக்கழக அமைப்பின் பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிக்க கூடுதலாக சுமார் 5 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காக இதுவரை வழங்கப்படும் நிதிக்கு மேலதிகமாக, இந்த கூடுதல் நிதியை கட்டம் கட்டமாக பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியிடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட முறையை பொது திரைசேறி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பல்பலைக்கழகத்தில் விரிவுரைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரிவுரையாளர்களதும், மாணவர்களதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க , பல்கலைக்கழகங்களை மூடுதல் எனும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இசெட் வெட்டுப்புள்ளி காரணமாக பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
அதற்கான தீர்வாக அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அவர்களை இணைத்துக் கொள்ள முடியும் என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தெரிவித்தார்.
அதற்கமைய இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.