பிரதான செய்திகள்

சிறந்த கல்வி முறைமையை கட்டமைக்க அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும். -ஜனாதிபதி-

அடுத்த 5 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரிகளை உருவாக்கும் திட்டத்தின் ஸ்தாபகரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய பாடசாலைகளுக்கான 1,729 நியமனங்களும் மேல் மாகாணத்திற்கான 626 நியமனங்களும் வழங்கப்பட்டன. அதனை அடுத்து ஏனைய 8 மாகாணங்களுக்குமான நியமனங்களும் வழங்கப்பட்டதோடு மொத்தமாக இன்றைய தினத்தில் 7,342 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்குள் 2050 ஆம் ஆண்டிற்கு பொருத்தமான கல்வி முறையை உருவாக்குவதற்கான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கான முதன்மைக் காரணி மனித வளம் என வலியுறுத்திய ஜனாதிபதி மனித வளத்தை தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்துள்ளது என்றார்.

தற்போது நாட்டிற்குள் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்டாமல் இருக்க வேண்டும் எனில் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அதற்கு ஏற்றவாறு கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நியமனங்களை பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கொவிட் பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 வருடங்கள் மேலதிகமாக கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருந்திருந்தீர்கள். உங்களுக்கு கற்பித்த பீடாதிபதிகளுக்கும் விரிவுரையாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

1985 களில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோதே கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது கல்வியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களாகின்றன. இந்த 38 வருடங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அன்று கையடக்கத் தொலைபேசிகள் இருக்கவில்லை. சிறிதளவு கனிணிகள் மாத்திரமே இருந்தன. அவை அனைத்தும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் மாத்திரமே தயாரிக்கப்பட்டன. இன்று அந்த நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அந்த உற்பத்திகள் சீனா அல்லது இந்தியாவிலேயே இடம்பெறுகின்றன.

அந்த இரு நாடுகளிலுமே கனிணி உற்பத்தி துறைசார் நிபுணத்துவம் காணப்படுகின்றன. அவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு அறிவியலும் இணைந்துள்ளது.

இன்று நாம் 21 வது நூற்றாண்டில் இருக்கின்றோம். ஆனால் எம்மிடம் 20 ஆம் நூற்றாண்டின் கல்வி முறைமையே உள்ளது. அதனால் 21 ஆவது நூற்றாண்டிற்கு அவசியமான கல்வி முறைமையை கட்டமைப்பதற்காக அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு நான் தயார்

wpengine

எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்கைப் பெறப் போவதில்லை.

wpengine

இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)

wpengine