இந்த வருடம் ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுத்துறையின் செயற்பாடு தொடர்பாக மத்திய வங்கி இன்று விடுத்த அறிக்கையில் சீனி இறக்குமதி தொடர்பிலான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் சீனி இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை 187 வீதத்தால் அதிகரித்துள்ளது.
பொதுவாக ஒரு மாதத்திற்குள் சீனி இறக்குமதிக்காக சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவை ஏற்க வேண்டியேற்படும் அதேவேளை, ஜனவரி மாதம் 57.5 மில்லியன் அமெரிக்க டொலர் சீனி இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செலவை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வரும் பின்புலத்தில், இந்தளவிற்கு பாரியதொரு தொகை செலவிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அரச நிதி பேரவைக்கு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்த நிதி அமைச்சு, 15.9 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சீனி இறக்குமதியின் போது விதிக்கப்பட்ட வரிச்சலுகையால் அரசாங்கத்திற்கு 1,595 கோடி ரூபாவிற்கும் அதிகத் தொகை நட்டத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பிரமிட் வில்மா தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சஜாஸ் மவுசுன், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தர , நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 9 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியை தடுக்க முடியாமல் போனமை, பொறுப்பற்று செயற்பட்டமைக்காக நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்கள், நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக குறித்த மனுவினூடாக மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள நட்டத்தை மீள அறவிடுவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் 50 கோடி ரூபா நட்ட ஈட்டை அறிவிடுமாறும் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.