(ARA.Fareel)
நாட்டில் இனவாதத்தைப் பரப்பும் வகையிலான சிங்ஹ லே அமைப்பின் ‘சிங்ஹலே’ ஸ்டிக்கர்களை பொது போக்குவரத்து சேவையில் ஒட்டிக் கொள்ள வேண்டாமென அறிவுறுத்தியுள்ள தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சு தேசிய ஒருமைப்பாட்டு பாட்டினையும் இன நல்லிணக்கத்தையும் உருவாக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அடுத்த மாத நடுப்பகுதியில் இந்தப் புதிய ஸ்டிக்கர்கள் பொது போக்குவரத்துச் சேவைகளான பஸ் மற்றும் புகையிரதங்களிலும் ஒட்டப்படவுள்ளன. மற்றும் முச்சக்கர வண்டிகள், வாகனங்களிலும் இந்த ஸ்டிக்கர்களை மக்கள் ஒட்டிக்கொள்ள வேண்டுமென அமைச்சு கோரிக்கை விடுக்கவுள்ளது.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
‘தற்போது பஸ்களிலும் ஏனைய வாகனங்களிலும் சிங்ஹலே எனும் அமைப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பது முஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்களின் மத்தியில் ஒருவித அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.
தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினையும் வளர்ப்பதற்கு முயற்சித்து வருகையில் சிங்ஹலே ஸ்டிக்கர் மூலம் அதற்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
நாம் அனைவரும் ஒரே இரத்தத்தையே கொண்டுள்ளோம். எமது அனைவரினதும் இரத்தம் சிகப்பு நிறமானதாகும்.
இந்த சுலோகங்களுடன் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று சிங்ஹலே அமைப்பினரால் குழப்பப்பட்டுள்ளது. இது தவறானதாகும். விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன நல்லிணக்கத்தையே வலியுறுத்தினார்கள்.
இதற்கு விரோதமாக சிங்ஹலே அமைப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகும். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சின் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஸ்டிக்கர்களுக்கு பொது மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும். இன, மத, மொழி வேறுபாடுகளின்றி மக்கள் இதனை ஆதரிக்க வேண்டும்.
அடிப்படை உரிமைகளை மதிக்கும் சட்ட விதிகள், சமத்துவம் மற்றும் பன்மைத்துவத்தினைப் பாதுகாத்து சகல பிரஜைகளும் தமது இனம், சமயம், மொழி, சாதி, வயது, பால், பாலினம், பிறப்பிடம் மற்றும் அரசியல் கொள்கைகள் என்பவற்றினை வேற்றுமையாகக் கொள்ளாது கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சின் திட்டப் பணியாகும் என்றார்.