கொழும்பு குணசிங்கபுரவில் அமைந்துள்ள ஏ.ஈ.குணசிங்க வித்தியாலயம் மறுசீரமைக்கப்பட்டு 2017ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்ப்பதற்கு உகந்த நிலையில்மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலை ஒரு கோடி ரூபாய்கள் செலவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பாடசாலையை மறுசீரமைப்பதற்கான நிதியை முஸ்லிம் தனவந்தர்கள் பலர் வழங்கியிருந்தனர்.
கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி, கைரியா மகளிர் கல்லூரி போன்றவற்றிற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கான சந்திப்பு ஒன்று இந்த பாடசாலையில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் ஏ.ஈ. குணசிங்க வித்தியாலயத்தில் தமது பிள்ளைகளை சேர்ப்பதற்கு தமது விருப்பத்தை மனப்பூர்வமாக தெரிவிததுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ அவர்கள் பிரதம மந்திரியாக இருந்த 1979 காலப்பிரிவில் இந்த பாடசாலை உருவாக்கப்பட்டது.
2017ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், மேல்மாகாண சபை அங்கத்தவர் அர்ஷாத் நிஸாம்தீன், கொழும்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஜயந்த விக்கிரமநாயக்க, முன்னாள் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். அலவி, ஏ.ஈ. குணசிங்க பாடசாலை அதிபர் திருமதி ஆர்.எம்.யூ. ரத்நாயக்க ஆகியோர் உரையாற்றினர்.