Breaking
Sun. Nov 24th, 2024

இந்த நாட்டில் எம் பாதுகாப்பு, எம் பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என தேவால்ஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார். 

அண்மையில் 15 வயது சிறுமியொருவர் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி விற்கப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

இவ்வாறானதொரு அநியாயம் இடம்பெற்றிருக்குமானால், அடுத்த ஒரு சில மணி நேரத்திற்குள் அதனுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

முக்கியமாக சிறுவர்கள் மற்றும் மகளிர் உரிமைகளுக்காக இயங்கும் நிறுவனங்கள் விரைவாக தலையிட்டு சட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

நாட்டில் ஒரு சிறுமி கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி இப்படி ஒரு அநியாம் நடந்துள்ளதென்றால் முழு நாடும் கண்ணீர் சிந்தவேண்டும். முழு நாடும் கவலை பட வேண்டும்.

எம் நாட்டில் உள்ள தாய்மார் பொறுமை காத்தது போதும், வீதிக்கு இறங்கி இதற்காக குரல் கொடுங்கள்.

எங்கள் பிள்ளைகளை இவ்வாறான நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம், நாங்கள் பாதுகாப்பான ஆட்சியொன்றை எதிர்பார்க்கின்றோம், எங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை அமைத்து தாருங்கள் என்று நாட்டை ஆளுபவர்களிடம் கேளுங்கள்.

சிறுமியை இன்று அனைத்து சமூக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி அனைவருக்கும் விற்கும் நிலைமைக்கு மாறியுள்ளது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் நம் நாட்டில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பாக பேசுவதை நிறுத்தி விட்டு இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செயது அவர்களுக்கு தண்டனை வழங்கி தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால் அதை செய்யாமல் இந்த விடயத்தை அரசியல் பந்தாக்கி ஒருவருக்கு ஒருவர் பந்தாடிக் கொண்டு இதை அவர் செய்தார், இதை இவர் செய்தார் என பெயர் பட்டியலை வெளியிடுகின்றோம்.

அது மட்டுமல்லாமல் முக்கியமாக அரசுக்கு எதிராக பேசுபவர்களும் இந்த சிறுமியின் விடயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என அச்சுறுத்தல் விடுத்து வாயை கூட முயற்சிக்கின்றார்கள்.

அப்படியெல்லாம் செய்து எங்கள் வாயை மூட நினைக்காதீர்கள். அது நடக்காது. அப்படி முயற்சி செய்பவர்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும்.

அரசுக்கெதிராக பேசுபவர்களுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்தி அச்சமூட்டி, சேறு பூசி, வாயை மூடவோ, பேசுவதை நிறுத்தவோ முடியாது.

கடந்த காலங்களில் இதே போன்று பல துஷ்பிரயோகம் செயது படுகொலை செய்த பல சம்பவங்கள் இடம்பெற்றதை நாம் அறிவோம்.

சதெளமி என்ற சிறுமி துஷ்பிரயோகம் செய்து கொல்லப்பட்டார், அதே போல யாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற மாணவி கூட்டு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வாறு பல சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. ஆகவே நம் நாட்டில் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நாட்டில் எம் பாதுகாப்பு, எம் பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அப்படியில்லையென்றால் இந்த நாட்டில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று கொண்டே தான் இருக்கும்.

பிள்ளைகள் இணையத்திலும், ஊடகங்களிலும் விற்கப்படுவார்கள், அவர்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிடும். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *