(அஸ்லம் எஸ்.மௌலானா)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்களும் வாக்குறுத்தியளித்ததன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவரும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைக்கான பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்றத்தை விரைவில் உருவாக்கித் தருவோம் என கடந்த பல வருடங்களாக அரசியல் தலைமைகளினால் வாக்குறுதியளிக்கப்பட்டு வந்த போதிலும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமும் அப்போதைய உள்ளூராட்சி அமைச்சராக பதவி வகித்த தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியவும் உறுதியளித்திருந்தனர்.
அதேபோன்று கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது கல்முனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கித்தரப்படும் என வாக்குறுத்தியளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரும் உறுதியளித்திருந்தனர்.
இந்த உறுதிமொழிகளை நம்பி, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் பல்வேறு தடவைகள் இந்த அரசியல் தலைமைகளை கொழும்பு சென்று சந்தித்து, அழுத்தம் கொடுத்து வந்தனர். அதன்போதெல்லாம் உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கியிருக்கின்ற வேளையில் வேறு காரணங்களைக்கூறி, இக்கோரிக்கை மழுங்கடிப்பு செய்யப்பட்டிருப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இதனால் விரக்தியடைந்துள்ள சாய்ந்தமருது மக்கள் கடந்த இரு வாரங்களாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது பிரதேச, சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
கல்முனையில் இருந்து சாய்ந்தமருது பிரிந்து விட்டால் கல்முனை மாநகருக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறுவது முற்றிலும் பிழையான வாதமாகும். இது மக்களை தவறாக வழி நடாத்தி, பீதியை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகும். சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படும்போது அது எந்த வகையிலும் கல்முனை மாநகருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை புள்ளிவிபர ரீதியாக நிச்சயித்துக் கூற முடியும்.
ஆகையினால் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் தொடர்ந்தும் விளையாடாமல் அரசியல் தலைமைகள் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, சாய்ந்தமருது பிரதேசத்தில் எழுந்துள்ள அசாதாரண நிலையை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்” என்று அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி குறிப்பிட்டுள்ளார்.