(மொஹமட் பாதுஷா)
தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது.
வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது.
இங்கே இருக்கின்ற பிரச்சினை, சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் கொடுக்கப்படவில்லை என்பதோ, கல்முனை வெற்றி பெற்றிருக்கின்றது என்பதோ அல்ல.
மாறாக, இவ்விரு ஊர்களுமே பிழையாகக் கையாளப்பட்டு, பகிரங்கமாகப் ஏமாற்றப்பட்டிருக்கின்றன என்பதுதான். அதாவது, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் முதற்கொண்டு, நாட்டின் பிரதமரே நேரில் வந்து, சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபை தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்கள்.
அதேநேரத்தில், “நான்கு சபைகளாகப் பிரிப்பது” என்றே, தமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டதாக, அனைத்துப் பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்கள் சம்மேளம், கல்முனை மக்கள் சார்பாகக் கூறுகின்றது.
அப்படியாயின், சாய்ந்தமருதுக்கு வழங்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோன்று, கல்முனைக்கு வழங்கப்பட்ட உத்தரவாதமும் காப்பாற்றப்படவில்லை என்பதே கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயங்களாகும். இதுதான், முஸ்லிம் அரசியலின் நிலையும் கையாலாகாத்தனமும் ஆகும்.
கல்முனை மக்களும் சாய்ந்தமருது மக்களும் எதிர் எதிரானவர்கள் அல்ல. பிரதேச அடிப்படையில் பிரிந்திருக்கின்றார்களே தவிர, அவர்களிடையே வேற்றுமை, பிரிவினை உணர்வுகள் இருந்ததில்லை.
ஆனால், எல்லா ஊர்களையும் போல, கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் வர்த்தகப் போட்டி இருந்து வந்தது. கல்முனை மாநகரைத் தங்களது கைக்குள் வைத்திருக்க, கல்முனை உள்ளளூர் அரசியல்வாதிகள் விரும்பியிருந்த நிலையில், கல்முனை மாநகர சபையின் ஆட்சி, சாய்ந்தமருது மக்கள் மனங்களில் சில கேள்விகளை எழுப்பியது.
“தமது பிரதேச வருமானத்தை, சாய்ந்தமருதுக்கே செலவளித்தோம்” என்று கல்முனை அரசியல்வாதிகள் இப்போது சொன்னாலும், குப்பை சேகரிப்புத் தொடக்கம், பல விடயங்களில் மாநகராட்சியின் வினைத்திறனற்ற செயற்பாடுகளை, சாய்ந்தமருது மக்கள் ‘மாற்றாந்தாய் மனப்பாங்கு’ என்றுதான் கணிப்பிட்டிருந்தனர் என்பதை மறுக்க முடியாது.
இப்படியாக, சாய்ந்தமருது மக்களிடையே இருந்து வந்த உணர்வை, கொஞ்சம் சமூக நலனுக்காகவும் கொஞ்சம் அரசியலுக்காகவும் முதலில் கையில் எடுத்தவர் அவ்வூரைச் சேர்ந்த முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் ஆவார்.
மேயர் பதவியில் இருந்து, அவர் இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்ட போது, இந்தக் கோரிக்கை வலுப்பெற்றது. அதற்குப் பிறகு அவ்வழியில், மாகாண சபை உறுப்பினராக இருந்த ஜெமில் நகர்ந்தார் எனலாம்.
மறுபுறத்தில், கல்முனையில் இருந்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தும், இருபக்கமும் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
தனி உள்ளூராட்சி சபை என்பது, அரசியல்வாதிகளின் கோரிக்கையாக வெளித்தெரிந்தாலும் கூட, இதில் முழுமையான நியாயங்கள் இருப்பதையும், இப்பிரதேசம் ஓர் உள்ளூராட்சி சபைக்கான அடிப்படை நிபந்தனைகளைக் கொண்டிருப்பதையும் யாரும் மறுக்கவியலாது.
அதேபோன்று, கல்முனையில் இருந்து சாய்ந்தமருது தனியே பிரிக்கப்படுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துகள், பாதகநிலைமைகள் குறித்து, கல்முனை மக்கள் முன்வைக்கின்ற கருத்துகளும் புறக்கணிக்கக் கூடியவை அல்ல.
அந்தவகையில், முன்னதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த
ஏ.எல்.எம். அதாவுல்லா, கல்முனை மாநகர சபையில் இருந்து, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமாக நான்கு புதிய நகர சபைகளை உருவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார்.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் தயாராகி இருந்தது. கடைசிநேரத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கடும் அழுத்தங்களைக் கொடுத்து, அதைத் தடுத்ததாக, அதாவுல்லா பகிரங்கமாகக் கூறினார்.
அதன்பிறகு, கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரத்தை, வாக்குச் சேகரிப்பதற்கான ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தின.
அதுதான் இன்று ஏற்பட்டிருக்கின்ற இத்தனை நிலைமைகளுக்கும் அடிப்படைக் காரணமாகும். முஸ்லிம் காங்கிரஸினால் அழைத்து வரப்பட்ட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்முனையில் வைத்துத்தான், சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
மக்கள் காங்கிரஸால் அழைத்து வரப்பட்ட, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, சாய்ந்தருதில் வைத்து, இதே வாக்குறுதியை வழங்கினார்.
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை பெற்றுக் கொடுக்க, கடந்த மாதம் வரை, இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தன.
இதில், சாய்ந்தமருது அரசியலுக்குச் சாதகமான கட்சி, அதிக முயற்சிகளையும் கல்முனை அரசியலுக்குச் சாதகமான கட்சி சற்று ‘விலாங்குமீன்’ போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது.
எவ்வாறாயினும், இரு முஸ்லிம் கட்சிகளும், சாய்ந்தமருதுக்கு ஒரு நகர சபையைப் பெறுவதில், ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்ததை மறப்பதற்கில்லை.
இந்தநிலையில், சாய்ந்தமருதுக்குப் புதிய பிரதேச சபை உருவாகும் நிலையொன்று ஏற்பட்டதுடன், அதற்கு மக்கள் காங்கிரஸின் முயற்சியே காரணம் என்ற கதைகளும் வெளியாகியிருந்தன.
எனவே, இது மு.கா கட்சியின் முயற்சியாலேயே உருவாகின்றது என்று காட்டிக் கொள்ளும் தோரணையில், பிரதியமைச்சர் வெளியிட்ட அறிக்கை, கல்முனையில் கொதிநிலையை உருவாக்கியது மட்டுமன்றி, இவ்விவகாரத்தில் புதியதொரு திருப்பத்துக்கும் வித்திட்டது எனலாம்.
தமது ஊரைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தம்முடைய ஆதரவைப் பெற்ற மு.காவும் எவ்வாறு இந்தப் பிரிப்புக்கு துணை போகலாம்? என்று கல்முனை மக்கள் கொதித்தெழுந்தனர்.
எனவே, தமதூர் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக, பிரதியமைச்சரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தும் கல்முனைக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்தனர்.
இதன் பின்னர், இவ்விவகாரம் பூதாகரமாகியது. முன்னொரு காலத்தில் கரைவாகு தெற்காக இருந்த சாய்ந்தமருது பிரதேசத்தை, கல்முனையுடன் இணைக்கின்றபோது, அதற்காக எதிர்க்காத சாய்ந்தமருது மக்கள், தமது பிரதேசத்தைத் தனியாகப் பிரித்து, உள்ளூராட்சி சபையைத் தந்தே தீர வேண்டும் என்ற கோரிக்கையை, உரத்த குரலில் முன்வைத்தனர்.
கல்முனை பட்டின சபையில், தமிழர் ஒருவரைப் பிரதித் தவிசாளராக அமர்த்தி அழகுபார்த்த கல்முனை மக்கள், சாய்ந்தமருதைத் தனியாகப் பிரிக்கக் கூடாது என்று குறுக்கே நின்றனர்; நிற்கின்றனர். இது பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது.
கல்முனையில் இருந்து, சில அரசியல்வாதிகளும் சாய்ந்தமருதைச் சேர்ந்த சிலரும் கொழும்பிலிருந்து ஒரு சிலரும் இதற்குப் பின்னால் நின்று, ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர் என்பது இரகசியமல்ல.
சாய்ந்தமருது மக்கள் விடாப்பிடியாக நிற்க, கல்முனை மக்கள் பிரதிநிதிகளோ, தனியாகப் பிரிக்கவே கூடாது என்று பிடிவாதம் பிடித்தனர்.
“எங்களுக்கென்று தனியான அபிலாஷைகள், அரசியல் சுயநிர்ணயம், தேவைப்பாடுகள் உள்ளன. எனவே, எமக்கு முன்பிருந்தது போன்று, தனியான ஓர் உள்ளூராட்சி சபையைத் தர வேண்டும்” என்று சாய்ந்தமருது மக்கள் கோரிநின்றனர்; நிற்கின்றனர். இதற்கப்பால் எந்த விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாரில்லை என்பது அவர்களது நிலைப்பாடாகும்.
மறுபுறத்தில், இவ்வாறு பிரிக்கப்படுவது குறித்து, கல்முனை மக்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். “இவ்வாறு, பிரிக்க வேண்டுமென்றால், பழையபடி நான்காகப் பிரிக்கட்டும்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
கல்முனை மாநகர சபைக்குள், தமிழ்ப் பிரதேசங்களும் அப்படியே உள்ளடங்கியிருக்கத் தக்கதாக, அதிக வாக்காளர்களைக் கொண்ட ஊரான சாய்ந்தமருது பிரிந்து செல்லுமாயின், கல்முனையின் இனங்களுக்கு இடையிலான விகிதாசாரப் பங்கில் மாற்றம் ஏற்படும் என்று கருதுகின்றனர். இதனால் ஆட்சியதிகாரம் பலமிழந்து போகுமென அவர்கள் அஞ்சுகின்றனர்.
கல்முனையில் பிரதமர் வாக்குறுதியளித்த போது, அதற்குப் பின்னர் இத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ‘தனியே பிரிக்கப்படக் கூடாது’ என்ற கோதாவில், கருத்துகளை முன்வைக்கத் தவறிய கல்முனை அரசியல்வாதிகள், ‘இப்போது தனியே சாய்ந்தமருது மட்டும் பிரிக்கப்படக் கூடாது, நான்காகவே பிரிக்கப்பட வேண்டும்’ என்று கடந்த சில நாட்களாகக் கூறி வருவதற்கு, மேற்படி அச்சமே காரணமாகும்.
ஒப்பீட்டளவில் இந்தக் கோரிக்கை, மிக அண்மைக் காலத்திலேயே, பொது வெளியில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதை முன்னரே சொல்லியிருக்க வேண்டும். எல்லாம் கைக்கூடி வரும் நேரத்தில், நான்கு சபைகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் பின்னாலுள்ள நோக்கத்தைச் சாய்ந்தமருது மக்கள் வேறுவிதமாகவே நோக்குகின்றனர்.
இவ்வாறு, இந்த விவகாரத்தில் இரு ஊர்களும், அதற்குப் பின்னாலுள்ள அரசியல்வாதிகளும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கல்முனையில் பலமாகவிருக்கும் அரசியல்வாதிகளின் முயற்சியால், பிரதான முஸ்லிம் கட்சி ஒன்றின் ஊடாக, அரச உயர்மட்டத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் கசிந்தன.
இதனால், சாய்ந்தமருது மக்கள் வெகுஜனப் போராட்டத்தில் குதித்தனர். கடந்த திங்கட் கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு கடையடைப்பும், சத்தியாக்கிரகமும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்காரணமாக, வர்த்தமானி அறிவித்தலில், சாய்ந்தமருதையும் ஒரு புதிய உள்ளூராட்சி சபையாக அறிவிக்கப்பட்டு விடுவதைத் தடுப்பதற்காக, கல்முனை மக்களும் இதற்கு எதிராக எழுந்து நிற்க வேண்டியேற்பட்டது.
எனவே, கல்முனையிலும் பேரணிகள், நான்காக பிரிக்கக் கோரும் பிரசாரங்கள் இடம்பெற்றதுடன், சாய்ந்தமருது கடையடைப்பின் கடைசித் தினமான கடந்த முதலாம் திகதி, கல்முனையிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இவ்வாறு, சாய்ந்தமருதைத் தனியாகப் பிரிப்பதில், அங்கு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட இழுபறியாலும், பின்னர் நான்காகப் பிரிப்பதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் மறைமுகமாக ஆட்சேபனை தெரிவித்தமையாலும், இவை எல்லாவற்றையும் மீறி, சாய்ந்தமருதைப் புதிய உள்ளூராட்சி சபையாக வர்த்தமானியில் உள்ளடக்க முடியாத நிலைக்கு, அமைச்சர் பைசர் முஸ்தபா தள்ளப்பட்டார்.
இரு ஊர்களுக்கும் இடையில், இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளபட்ட சுமார் 20 வரையான பேச்சுவார்த்தைகளும் தோல்வி கண்டன.
இவ்வாறிருக்கையில், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் அமைச்சர் பைஸர் முஸ்தபா, புதன்கிழமை (01) ஒப்பமிட்டிருந்தார்.
எனவே, தமக்கு உள்ளூராட்சி சபை இப்போது கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட சாய்ந்தமருது செயற்பாட்டாளர்கள், இறுதிக்கட்ட நடவடிக்கையாக ஹக்கீம், ரிஷாட், ஹரீஸ் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கொடும்பாவியை எரித்து, தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர்.
அதன்பிறகு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையின் தலைமையில் ஒன்பது பிரகடனங்கள் வாசிக்கப்பட்டன. இத்தோடு, கடையடைப்பு போராட்டமும் முடிவுக்கு வந்தது.
இப்பிரகடனத்தில் பிரதானமான விடயம், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அறிவிக்கப்படும் வரையில், சாய்ந்தமருது, மாளிகைக்காடு எல்லைக்குள், எல்லா அரசியல் கட்சிகளினதும் செயற்பாட்டுக்கு தடைவிதிப்பதும், இவ்விரு ஊர்களும் அதுவரை தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிடுவதுமாகும்.
இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய, கல்முனை பள்ளிவாசல்கள் பொதுநிறுவனங்களின் சம்மேளனமானது, “சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், ஏககாலத்தில் கல்முனை மாநகராட்சிக்குள் இருக்கும் பிரதேசங்கள் முன்பிருந்ததுபோல், சபைகளாகப் பிரிக்கப்பட வேண்டும். தனியே சாய்ந்தமருதை மட்டும் பிரிப்பதால், பல பாதகங்கள் உருவாகும்.
எனவே, ஒன்றாகச் சேர்ந்தோம்; ஒன்றாகப் பிரிவோம்” என்று கூறி, தமது பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தளவில், கல்முனை – சாய்ந்தமருது முறுகல் நிலை, சற்று ஓய்வடைந்துள்ளது.
இரு பக்கங்களிலும் நியாயங்கள் இருக்கின்றன. ஆனால், சாய்ந்தமருது பிரதேச சபையைக் கோரிய வேளையிலேயே, ‘பிரிக்க வேண்டுமென்றால், நான்காகப் பிரிக்க வேண்டும்’ என்று கல்முனை அரசியல்வாதிகள் ஆரம்பத்திலிருந்தே கோரி வந்திருந்தால் இந்தளவுக்கு சிக்கல் வந்திருக்காது.
அல்லது,‘சாய்ந்தமருதுக்கு தருவது கடினம்’ என்று அப்போதே சொல்லியிருக்கலாம். கல்முனை மக்கள் சொல்வதில் நியாயங்கள் நிறையவே இருந்தாலும், சாய்ந்தமருது பிரதேசத்துக்கு ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டிருக்கின்றது.
சத்தம்போடாமல் அமைச்சர் மனோ கணேசன் போராடி, நுவரெலியாவில் நான்கு பிரதேச சபைகளை உருவாக்கியிருக்கின்றார். ஆனால், இத்தனை ஆர்ப்பரிப்புகள், பந்தாக்களோடு சாந்தமருதுக்கு வாக்குறுதியளித்த முஸ்லிம் தலைமைகள் அதைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
அந்தவகையில், சாய்ந்தமருது கடுமையாக ஏமாற்றப்பட்டிருக்கின்றது. மறுபுறத்தில் ‘நான்காகப் பிரிப்போம்’ என்று கல்முனை மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தால், அதை நிறைவேற்றாமல் விட்டதன் மூலம், கல்முனை மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.
இந்த ஏமாற்று அரசியலால், இரு ஊர்களுக்கும் ஏற்பட்டுள்ள வலியின் பாரதூரத்தை, அடுத்த தேர்தலில் அரசியல்வாதிகள் அனுபவிப்பார்கள்.