பிரதான செய்திகள்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரச்சினை! இன்று ஹர்த்தால்

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றத்தை சபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் இப்பிரதேசங்கள் முழுமையாக செயலிழந்துள்ளன.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், ஜம்மியத்துல் உலமா சபை, வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்த செயலணியின் அழைப்பின் பேரில் இந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. சாய்ந்தமருது பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், ஸாஹிரா தேசிய கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் எவையும் இயங்கவில்லை.

இந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டம் காரணமாக சாய்ந்தமருது ஊடான கல்முனை- அம்பாறை, கல்முனை- அக்கரைப்பற்று பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. எனினும் தனிப்பட்ட போக்குவரத்துகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படவில்லை. சாய்ந்தமருது நகரமெங்கும் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த ஹர்த்தாலை முன்னிட்டு சாய்ந்தமருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
அத்துடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் பொருட்டு பொது மக்கள் நோன்பு வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலிலும் நேற்று அதிகாலை நோன்பு நோற்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபையை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி மக்கள் எழுச்சி பொதுக் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

Related posts

மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

wpengine

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும் 13, 14 ஆம் திகதி

wpengine

மகளுக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகளை வழங்க புடின் திட்டமிட்டம்.

wpengine