சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவது தொடர்பில் தீர்க்கமான முடிவை அறிவிப்பதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் ஹர்த்தால் கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது என சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற சிவில் சமூக பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்படா விட்டால் அத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடமளிக்காமல் பொதுவான சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒரே கொள்கையின் கீழ் சாய்ந்தமருது மக்கள் என்ற ரீதியில் ஒற்றுமையுடனும் பள்ளிவாசல் தலைமைத்துவத்தின் கட்டுக்கோப்பை மீறாத வகையிலும் உள்ளூராட்சி சபைக்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு உறுதி பூணுவதாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சாய்ந்தமருது உலமா சபையினால் பையத் (சத்திய உறுதி) செய்து வைக்கப்பட்டனர்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மரைக்காயர்கள், சிவில் மற்றும் இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.