கட்டுரைகள்பிரதான செய்திகள்

சாய்ந்தமருதின் மறுமலர்ச்சி எப்போது?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

யாராவது ஒரு விடயத்தைச் சாதிக்க நினைத்தால் அதில் இறுதி வரை உறுதியாக நின்று சந்தர்ப்பத்திற்கேற்ப காய்களை நகர்த்திச் செல்ல வேண்டும்.சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தைப் பெறுவதற்கு சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கம் எப்படியெல்லாம் காய்களை நகர்த்த வேண்டுமோ அத்தனை முயற்சிகளையும் செய்து வருகிறது (இவர்கள் தவிர்ந்து வேறு சிலரும் முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது).முஸ்லிம் அரசியல் வாதிகளின் இயலாமையினால் தான் அவர்களின் முயற்சிகள் இது வரை பெறுமானம் எதனையும் பெறாமல் இருக்கின்றதென்றாலும் பிழையாகாது.ஆனால்,அவர்களும் விடாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே வருகிறார்கள்.பல பகுதிகளில் பல போராட்டங்கள் தோற்றம்பெறுகின்ற போதும் காலம் செல்லச் செல்ல அதன் வீரியம் குறைந்து கொண்டு செல்வதே வழமை.இவர்கள் போராட்டத்தில் வீரியம் அதிகரித்துக்கொண்டு செல்வது இப் போராட்டத்தின் சிறப்பாகும்.

யாரும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் இக் கோரிக்கையை முன் வைத்த சாய்ந்தமருது மறு மலர்ச்சி இயக்கம் தங்களது அக் கோரிக்கையை பிரதமர் வாக்குறுதியளிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளமை பாராட்டத்தக்கதும், பலர் படிப்பினை பெறத்தக்கதுமாகும்.இத்தனை காலமும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை பார்த்த கோணமும் இனி அதனைப் பார்க்க வேண்டிய கோணமும் வேறுபட்டதாகும்.ஏனெனில்,சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கம் இக் கோரிக்கையை 2008ம் ஆண்டளவில் முன் வைத்த காலம் தொடக்கம் இற்றை வரை அதன் நன்மை தீமைகளை ஆராய்வதிலேயே பலரும் காலம் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.எனவே, இன்னும் இன்னும் அதன் நன்மை தீமைகள் பற்றி ஆராய்ந்து கொண்டிராது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து ஒரு சமூகத்தின் தனித்துவத்தின் உறுதிப்படுத்தும் மக்கள் கோரிக்கைக்கு அனைவரும் உதவுவதே பொருத்தாமனது.

இதுவரை முக்கிய அரசியல் வாதிகள் எவரும் இக் கோரிக்கைக்கெதிரான கருத்தை முன் வைக்கவில்லை.அப்படியானால் அனைவரும் இக் கோரிக்கை சரியானதென ஏற்றுக்கொள்கிறார்கள்.ஒரு சிலர் இக் கோரிக்கையை மறுக்கும் போது அம் மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால் மௌனம் காக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் அதனை வெளிப்படுத்த வேண்டுமே தவிர செய்து தருகிறோம் எனக் கூறி அம் மக்களை ஏமாற்ற நினைப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.பல இடங்களில் பல அரசியல் வாதிகள் இக் கோரிக்கையை தாங்கள் செய்து தருவதாக வாக்குறுதியளிக்கின்ற போதும் அவைகள் வாய் வார்த்தைகளோடு மாத்திரம் நின்று விடுவதாகவே இவ் விடயத்தில் சிறிதேனும் முன்னேற்றமில்லாமை கூறி நிற்கின்றது.மு.கா கடந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் இதனைச் செய்து தருவதாக கூறி இருந்தது.அது சாத்தியாமாக போது சாய்ந்தமருது மக்கள் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் முன்னெடுத்திருந்தனர்.இவைகள் பெரிதான துலங்கலைக் காட்டாத போதும் அரசியல் வாதிகளைக் கிறங்கடித்திருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வர்த்தமானிப் படுத்தும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது தேர்தலைக் காரணம் காட்டி அச் செயற்பாட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இது சரியா? பிழையா? என்ற வாதத்திற்கு அப்பால் தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் இதனைச் சாதிக்க முடியாதென்ற படிப்பினை இதில் பொதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.மிகக் குறுகிய காலத்தில் கிழக்கு மாகாண மக்கள் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவுள்ளனர்.தேர்தல் வந்துவிட்டால் இக் கோரிக்கையை வென்றெடுப்பது சட்ட ரீதியாக கடினமாகிவிடும் என்ற விடயமுமுள்ளது.இவ்விரு தேர்தல்களும் இடம்பெற்றால் அடுத்த தேர்தலொன்று வந்து அரசியல் வாதிகளின் கழுத்தைப் பிடித்து சாய்ந்தமருது மக்கள் இக் கோரிக்கையைச் சாதிக்க சில வருடங்கள் காத்துக்கொண்டிருக்க வேண்டி வரும்.அத்துடன் இவ் நீண்ட காலப்பகுதியில் இக் கோரிக்கை மழுங்கடிக்கப்படவும் வாய்ப்புள்ளது.இக் காலத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் வாய்கள் திறக்கப்படலே இக் கோரிக்கையைச் சாதிக்க பொருத்தமான காலமாகும்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைக்கும் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குமிடையில் நெருங்கிய தொடர்புள்ளது.குறிப்பாக கடந்த தேர்தலில் அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் தளமாக சாய்ந்தமருதையே பயன்படுத்தியது.சாய்ந்தமருது மக்கள் முற்றாக அ.இ.ம.காவின் பக்கம் திரும்பி விட்டார்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்தியே அனைத்து இடங்களிலும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தியது.இச் சாய்ந்தமருதில் காணப்பட்ட உள்ளூராட்சி மன்றக் கோசமும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வென்றெடுக்க மு.காவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ் மாகாண சபை உறுப்பினர்களின் உதவியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் தன்னந் தனியே பிரேரணையைச் சமர்ப்பித்து அதன் அனுமதியை வாங்கி வந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலின் வருகையும் உறுதுணையாக இருந்தது.இதனை அச் சந்தர்ப்பத்தில் மு.கா சாதாரணமாக எதிர்கொண்டிருந்தால் சாய்ந்தமருதின் நிலை மு.காவிற்கு சார்பாக அமைந்திருக்காது.இதனை அறிந்த மு.கா இச் சந்தர்ப்பத்தில் இதனை எதிர்கொள்ள பிரதமைரைக் கூட்டி வந்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற உறுதி மொழியை வழங்கி சாய்ந்தமருதில் தன்னை மீண்டும் நிலை நிறுத்தியது.அன்று மு.கா பிரதமைக் கூட்டி வந்து உறுதிமொழி வழங்கியிருக்காவிட்டால் சாய்ந்தமருதில் மு.காவின் செல்வாக்கு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கும்.அ.இ.ம.கா ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கவும் ஏதுவாக அமைந்திருக்கும்.உள்ளூராட்சி மன்றத்தின் அத்தனை பொறுப்புக்களும் அ.இ.ம.காவின் தலையில் விழுந்திருக்கும்.

எது எவ்வாறு இருப்பினும் மேலுள்ள விடயங்கள் கூறும் செய்தி இவ்விரு கட்சிகளும் கடந்த தேர்தலின் போது இவ்விடயத்தை பயன்படுத்தி தங்களது வாக்கு வங்கிகளை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்துள்ளது என்பதாகும்.எனவே,இக் கோரிக்கையை அம் மக்கள் சுவைக்க இவ்விரு கட்சியினரும் குரல் எழுப்புவது இவ்விரு கட்சியினர் மீதும் தலையாய கடமையாகும்.இப்போதுள்ள வினா தேர்தல் முடிந்த பிறகு இவ்விரு கட்சிகளும் என்ன செய்துள்ளதென்பதாகும்? இவ் விடயத்தைச் சாதிக்க தற்போதுள்ள பிரதமரின் வாக்குறுதி மாத்திரம் போதுமாகும்.இது தொடர்பில் அண்மையில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாத் பதியுதீனுக்கு ஒரு பகிரங்க மடலை தனதூர் சார்பாக அனுப்பிருந்தது.அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரைக்கும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பில் பாராளுமன்றில் விசேட கவன ஈர்ப்பை ஏற்படுத்துமாறு அமைச்சர் றிஷாத்தைக் கோருவதையே பிரதான கருப்பொருளாக கொண்டிருந்தது.அம் மடலில் பாராளுமன்றம் எனும் மக்கள் இறைமை கொண்ட உயர் சபையில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்படுவதன் மூலம் இது தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலான உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியுமெனக் குறிப்பிட்டு அவர்கள் குரல் எழுப்பக் கோரும் நோக்கத்தையும் தெளிவு படுத்தியிருந்தனர்.இது தொடர்பில் அவர்கள் அரசியல் வாதிகளை குரலெழுபக் கோரும் நோக்கம் சரியானது என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

இச் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுக்க மு.காவின் ஆளுகைக்குட்பட்ட கல்முனை மாநகர சபையின் அனுமதியை தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னாள் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த போது கோரிய போதும் இது வரை அதன் அனுமதி வழங்கப்படாத விடயம் பல கதைகளை கூறி நிற்கின்றது.மாநகர சபையின் ஒப்புதலை தாமே முன்னின்று பெற்றுத்தருவதாக கொடுத்த மு கா தலைவரின் வாக்குறுதி இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதற்குள் மாநகர சபையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த நான்கு மாநகர சபை உருப்பினர்களுமுள்ளனர்.அடிக்கடி இது தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றும் பிரதி மேயரும் சாய்ந்தமருதைச் சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மாகாண சபையில் இது தொடர்பான பிரேரணையை கொண்டு போன போது மு.காவினர் எதிர்த்து நின்ற கதைகளுமுள்ளன.இவைகளினால் தான் மறுமலர்ச்சி இயக்கம் இது விடயத்தில் மு.கா மீது பூரண அதிருப்தியுற்று அவர்கள் வாக்குறுதி வாங்கி வந்த விடயத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை அமைச்சர் றிஷாத்தினூடாக சாதிக்க விளைகிறதென நினைக்கின்றேன்.தன்னகத்தே இருந்த மாகாண சபை உறுப்பினரெனும் அந்தஸ்தை இழந்து அ.இ.ம.காவை ஆதரித்த அந்த மக்களுக்கு அமைச்சர் றிஷாத் இக் குரல் கொடுப்பைச் செய்வது கடமையும் கூட.இதனை அ.இ.ம.கா முன்னின்று செய்யுமாக இருந்தால் மு காவின் சாய்ந்தமருது அரசியல் வேரோடு பிடுங்கப்பட்டு அம்பாரைக்கப்பால் தூக்கி வீசப்படுமென்பதில் ஐயமில்லை.

இந்த நிலையில் அமைச்சர் றிஷாத் இது தொடர்பில் பாராளுமன்றில் வினா எழுப்புவாராகவிருந்தால் அதற்கு பதிலளிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிர்ப்பந்திக்கப்படுவார்.அப்போது நிச்சயமாக தனது கனவான் வாக்குறுதியில் எத்தகைய தடை வரினும் அதனை நிறைவேற்ற திடசர்ந்தர்ப்பம் கொள்ள வாய்ப்புள்ளது.அதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராக இருந்து இவ் விடயத்தைக் கையாண்ட கரு ஜெயசூரிய தற்போது சபாநாயராக இருப்பதால் இது தொடர்பில் பாராளுமன்ற குரல் எழுப்புகைகள் சிறந்த பெறுமானத்தையும் பெறும்.அரசியல் வாதிகளின் குரல் எழுப்புகையை காத்து நிற்கும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் குழந்தையின் பிரசவத்திற்கு பாராளுமன்றில் குரல் எழுப்பப்படுமா?

குறிப்பு: இக் கட்டுரை இன்று புதன் கிழமை 01-06-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

Related posts

கையில் கொடுத்தோம் தெருவில் நிற்கின்றோம்! உறவினர்கள் வவுனியாவில் போராட்டம் 

wpengine

காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாள்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு (படங்கள்)

wpengine

வாழைச்சேனையில் பாதுகாப்பற்ற கடவை! முச்சக்கரவண்டி விபத்து

wpengine