மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில், வரலாற்றில் முதல் முறையாக மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
மகளிர் தின கொண்டாட்டத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பெண்களும், பங்குபற்ற உள்ளதாக அந்நாட்டு கலாச்சார மையம் தகவல் பகிர்ந்துள்ளது.
மேலும் குறித்த நிகழ்வில் பங்குகொள்ளும் மன்னர் குடும்பத்தினர் சார்பில், இளவரசி அல்-ஜவ்ஹரா பிண்ட் பஹத், கல்வித் துறையில் பெண்களின் பங்கு குறித்து பேசவுள்ளதாகவும், அத்தோடு கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சவூதி பெண்களின் சாதனைகள், பெண்களின் வளர்ச்சி பங்கு குறித்த கருத்தாடல்களுடன், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மகளிர் தினத்தை கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சுதந்திரத்தை வலியுறுத்தி அந்நாட்டு அரசு மீது, கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மேலும் பாலின சமன்பாடு தொடர்பான 2015ஆம் ஆண்டு சர்வதேச அறிக்கையில் சவூதி 145 நாடுகளின் தரவுகளில் 134 ஆவது இடத்தை பெற்றிருந்தது.
உலகிலேயே சவூதி அரேபியாவில் மாத்திரமே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பொது நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த தடைகளை நீக்கக் கூறி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் கலாச்சாரம் மற்றும் பொருளாதார விடயங்களில் சீர்த்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசானது முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் குறித்த சீர்திருத்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அந்நாட்டு புனிதம் கெட்டுவிடும் எனவும், மத எதிர்ப்பு சிந்தனைகள் வளருமெனவும் அந்நாட்டு இஸ்லாமிய இயக்கங்கள் கூறிவந்த நிலையில் தற்போது முதலாவது மகளிர் தின கொண்டாட்டங்களை, அந்நாட்டு அரசே ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.