Breaking
Sun. Nov 24th, 2024

-சுஐப் எம்.காசிம்-

“குறுநில மன்னர்களைக் குடியோடு அழித்தல்” என்ற அரசியற் சொற்றொடர் ஒன்றை ஈரானின் செயற்பாடு ஞாபகமூட்டியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை மத்திய கிழக்கின் பக்கம்
பார்க்க வைக்கும் முயற்சிதான் அது.
சர்வதேச எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றை (ஹோர்மூஸ் நீரிணை) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உலக சந்தையில் எரிபொருள் விலையைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர ஈரான் முயற்சித்துள்ளது. இதற்காகத்தான் ஹோர்மூஸ் நீரிணையில் வந்து கொண்டிருந்த கப்பலை ஈரான் கடத்தியிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

உலகின் எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் முப்பது வீதமானவை, இந்த ஹோர்மூஸ் நீரிணையூடாகவே பயணிக்கின்றன. இந்தக் கடற்பாதையால் மாதமொன்றுக்கு சுமார் ஐம்பது இலட்சம் கியூபிக் எண்ணெய் எரிபொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அரபு நாடுகளின் எண்ணெய் வளங்களை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றிச் செல்லும் பிரதான பாதையும் இதுதான். மட்டுமல்ல இதர நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் போக்குவரத்துத்துக்கான பாதையிலும் இது பிரதானம் வகிக்கிறது.

இந்து சமுத்திரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, ஏனைய ஆசிய நாடுகளை அடக்கியாள்வதற்கு சீனாவும், இந்தியாவும் விரும்பவில்லையா? அப்படியொரு விருப்பத்தில்தான் ஈரானும் இந்த ஹோர்மூஸ் நீரிணையை நினைத்தவாறு கையாளக் களத்தில் இறங்கியிருக்கிறது. இது, வளைகுடா நாடுகளின் வயிறுகளில் வெடிகுண்டுகளைக் கட்டியிருக்கும். களம் யாருக்குக் கரிக்கும், யாரை வீழ்த்தும் என்பதெல்லாம் பிறகு வரவுள்ள விடயம். இப்போதைக்கு இந்தப் போக்குவரத்து,எ திரி நாடுகளுக்கு ஆபத்திலுள்ளதை மாத்திரம் ஈரான் எடுத்துக் காட்டுவதாகவே நம்பப்படுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமாகப் புரளும் இந்த ஹோர்மூஸ் கப்பற் பாதை, இந்த நாட்டிடம் (ஈரான்) இருப்பதை அமெரிக்க சார்பிலான நாடுகள் விரும்பப்போவதில்லை. இதனால் அடுத்த கட்ட நகர்வுகள், இப்பிராந்தியத்தில் பதற்றத்தை வெடிக்க வைக்கும் அல்லது பேச்சுவார்த்தைகளை ஆரம்பமாக்கும். எல்லோரும் விரும்புவதைப்போன்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக வேண்டும் என்பதுதான் எமது பிரார்த்தனையாகவுள்ளது. மாறாகப் போர் வெடித்துவிட்டால், பாதிக்கப்போவது எரிவாயு மற்றும் எண்ணெய்த் தேவையுள்ள நாடுகள்தான். எல்லாமே, இயந்திரமயமாகியுள்ள இந்தக் காலத்தில், இப்படியான போர் எல்லோருக்கும் பாதிப்புத்தான். இந்தக் கொரோனாவுக்குள் இப்படியும் இழப்பு ஏற்பட வேண்டுமா?

இதற்கிடையில், ஹோர்மூஸ் நீரிணை ஈரானின் ஆதிக்கத்துக்குள் வந்தால், சர்வதேசளவிலான எண்ணெய்க் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படுமென பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பொருளாதாரப் பலத்தை தகர்க்கும் இராணுவ உபாயத்தில் ஈரான், இவ்வாறான செயல்களில் இறங்குவது அவ்வளவு ஆரோக்கியமானதுமல்ல. இதற்காகத்தான், இவ்வாறு எந்தக் கப்பலையும் கடத்தவில்லை என ஈரான் நிராகரித்திருக்கிறது.

எனினும், யுரேனியம் செறிவூட்டல் விடயத்தில், ஈரானின் நிலைப்பாடுகளை ஏற்க மறுக்கும் மேலைத்தேய நாடுகளின் பிடிவாதம் மற்றும் பலங்களைத் தகர்ப்பதற்கு இவ்வாறான பிராந்தியக் கடற்பலம் ஈரானின் தேவை என்பதை நிராகரிக்கவும் முடியாது.

இந்த ஹோர்மூஸ் நீரிணையில் வந்து கொண்டிருந்த இஸ்ரேலின் பாரிய கப்பலொன்றும் நேற்று (04) கடத்தப்பட்டிருக்கிறது. ஈரானின் ஒத்துழைப்புடன் இந்தக் கப்பல் கடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் மேற்குலகின் சந்தேகம். இதிலிருந்த கோடிக்கணக்கில் பெறுமதியான “பிற்றுமன்” கனிமப்பொருட்கள் எல்லாம், ஈரானையும் அதன் ஆதரவணிகளையும் பலப்படுத்துமென பெண்டகன் கவலை தெரிவித்துள்ளது. ஷியா அமைப்புக்கள், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹுதி இனப் போராட்டங்களைப் பலப்படுத்தும் வகையில், ஈரான் இந்நிதிகளைக் கையாளலாமென்ற கவலையும் எழாமலில்லை.

இத்தோடு மட்டும் நின்றுவிடவா போகின்றது இந்தக் கவலை. இத்தனை காலமாக இழுபறியிலிருந்து வரும் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் விடயத்தில், மேலைத்தேய நாடுகளுக்கு எதையும் செய்ய முடியாமலல்லவா போகும். மேலைத்தேயம் சொல்வதற்கு அடி பணிய மறுக்கும் ஈரானுக்கு இனியிந்த நீரிணை பெரும்பிடிதான். “நீங்கள் அங்கே அடித்தால், நாங்கள் இங்கே (நீரிணை) பிடிப்போம்” என்பதைப் போன்றுதான் ஈரான் நடந்திருக்கிறது. ஆனால், எத்தனை நாட்களுக்கு இந்தக் கடற்பிடியை ஈரான் வைத்திருக்கப்போகிறதோ தெரியாது. மத்திய கிழக்கின் வான்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் யுக்திகளுள்ள ஈரான், கடற்பரப்பையும் கொண்டு வந்தால் மத்தியகிழக்கு விவகாரம், சர்வதேச விவகாரம் வரை எதிரொலிக்கும்.

இதற்கிடையில், ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்த இப்ராஹிம் ரைஸி, கடந்த வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த எட்டு வருட ஹஸன்ரூஹானின் ஆட்சியை விட, இவரது நிர்வாகம் கடும்போக்குடன் செயற்படுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *