ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் 2015 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 30ஃ01 தீர்மானமானது – பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொள்ளாது – ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பின் கீழான ஒரு உள்ளகவிசாரணைப் பொறிமுறையினை நிறுவி – இத் தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசு தனது சுயவிருப்பில் ஏற்றுக்கொண்டிருந்தது.
நீதியான பொறுப்புக்கூறல் விடயத்தில் – அத் தீர்மானத்தில் மிகப்பாரிய குறைபாடுகள் இருந்தமையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இத் தீர்;மானத்தை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ஆயினும் ஸ்ரீலங்கா அரசு அத்தீர்மானத்தில் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட்டிருந்தது.
இருப்பினும் ஸ்ரீலங்காவில்; இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை பேரவை 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றிய 30ஃ01 தீர்மானத்தில் – தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா அரசு விலகியுள்ளதோடு ஐ.நாவின் தீர்மானத்தையும் உதாசீனம் செய்துள்ளது.
இத்தீர்மானம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்ட பின்னரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி உட்பட அரச உயர்பீடத்தினர் இத்தீர்மானத்தின் கடப்பாடுகளை வெளிப்படையாகவே நிராகரித்திருந்தனர். தமிழ் மக்களின் நோக்கில் இத் தீர்மானம் பலவீனமாக இருந்தும்கூட- இத்தீர்மானத்தில் கைச்சாத்திட்டமைக்காக அப்போதைய ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக 2017 மார்ச் மாதம் மேலதிகமாக வழங்கப்பட்ட இரண்டு வருட காலஅவகாசத்தின் முதல் அரைப்பகுதியில் ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக்கூறல் உட்பட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றவில்லை என்பதுடன் பொறுப்புக் கூறலை ஒருபொழுதும் மேற்கொள்ளப்போவதில்லை என்பதனை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற சித்திரவதைகள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகத் தொடரும் குற்றச்சாட்டுக்கள், காணிகள்விடுவிக்கப்படாமை, மீள்குடியேற அனுமதிக்கப்படாமை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், அச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்படாமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கான பொறுப்புக்கூறல்கள் போன்றவற்றில் ஸ்ரீலங்கா அரசு தொடர்ச்சியாக உதாசீனம் செய்து வருகின்றது.
அத்தோடு இலங்கையின் வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் தொடர்வதும் அதன் விளைவாக தொடர்ச்சின கடுமையான இராணுவக்கண்காணிப்பு நிலவுவதும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை சவாலுக்குள்ளாக்குவதோடு எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் அர்த்தமற்றதாக்குகின்றது.
தமிழினத்துக்கு விரோதமான பாரிய இன அழிப்புக்கு பின்னர் தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களும் உள்ளகரீதியான விசாரணைகளைச் செய்வதற்கான அரசியல் விருப்பத்தினைக் கூட குறைந்தபட்சமேனும் கொண்டிருக்கவில்லை என்பது தற்போது வெளிப்படையாகியிருக்கிறது.
தன்னால் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை அமுல்ப்படுத்தக்கூடிய அதிகாரம் துரதிஸ்டவசமாக ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையிடம் இல்லை.
இந்நிலையில் – ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு உறுதிப்படுத்துவதற்காக அதன்மீது சர்வதேச சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையிலான தெரிவுகள் மற்றும் மாற்றுவழிகளை ஆராயவேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சைட் அல் ஹ{சைனும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.மனித உரிமை பேரவை – சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறைகளில் ஈடுபட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரமற்ற சபை என்பதாலேயே ஸ்ரீலங்கா அரசாங்கமானது தொடர்ச்சியாக அசமந்தப்போக்கினைக் கடைப்பிடிக்கின்றது.
எனவே – ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தில் எஞ்சியுள்ள ஒரு வருடத்தை தொடர்ந்தும் வழங்கி காலத்தை வீணடிக்காது – ஸ்ரீலங்கா விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் கோருகின்றோம்.
இதனை வலியுறுத்தும் வகையில் – சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு – மேற்படிக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை கோரும் கையழுத்துப் போராட்டத்தினைத் தமிழர் தாயகமெங்கும் நடத்தவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வானது – நாளை திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக ஆரம்பமாகவுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிதேடும் போராட்டத்துக்கு – அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழு
தொடர்புகளுக்கு –
0777246222