Breaking
Sat. Nov 23rd, 2024

பொரளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நடந்த முறைகேடான சிறுநீரக அறுவைச் சிகிச்சை குறித்து சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் கடிதமொன்றையும்  அனுப்பியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது” முஹம்மட் ஹம்தி எனும் குழந்தைக்கு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட சிறுநீரக அறுவைச் சிகிச்சையின்போது இடம்பெற்ற கொடூரத்தை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். சிறுவனின் செயலிழந்த இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்குப் பதிலாக, திறம்படச் செயற்பட்ட வலது பக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருக்கிறது. இதனால், முஹம்மட் ஹம்தி என்ற மூன்று வயதுக் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால், அறுவைச் சிகிச்சையில் நடந்த தவறை மறைக்கும் வகையிலேயே மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், இச் சிகிச்சைக்குப் பின்னால் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக பலத்த சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தவறுதலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டுத் திருடப்பட்டதா? என்பதை அறிவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அவயங்கள் அபகரிப்பு மற்றும் சிறுநீரக மோசடியுடன் தொடர்புடைய மோசடிப் பேர்வழிகளின் கரங்கள் இதற்குப் பின்னாலிருந்திருக்கலாம். எனவே, இதுகுறித்த பின்னணிகளை அறிவதற்கு சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணைகளை நடத்துமாறு நான் கோருகிறேன்.

மருத்துவத்துறையை மாபியாக்களின் செல்வாக்கிற்குள் கொண்டுவரும் இவ்வாறான மறைமுக முயற்சிகளை நிறுத்துவதற்கு இவ்விசாரணைகள் உதவட்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில், இவ் விசாரணைகள் அமைவது அசியம். தங்களது நேர்மையான தலைமைத்துவம் இதைச் செய்யுமெனவும் நான் நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்”

01.மருத்துவ நிபுணர்கள், தடயவியல் திறமையாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட குழுவினரின் தலைமையில் விசாரணை நடத்தப்படல்.

02.முஹம்மட் ஹம்தியின் சிறுநீரக அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டிருந்த அறுவைச் சிகிச்சையாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களை விசாரணைக்குட்படுத்தல்.

03.சிறுவனின் சிறுநீரக மோசடியுடன் தொடர்புற்றிருந்த சகல வாஞ்சகர்களையும் சட்டத்தின் வெளிச்சத்துக்கு கொண்டுவருதல்.

04.குழந்தையின் சிறுநீரக சிகிச்சை சம்பந்தமான தகவல்களை வழங்குவோரின் அல்லது வழங்க முன்வருவோரின் இரகசியங்களைப் பாதுகாத்தல்.

05.அறுவைச் சிகிச்சைகளின்போது அவயங்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் வகையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தல்..”

என்பவற்றை வலியுறுத்தியே அசாத் சாலி இக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

A B

By A B

Related Post