பிரதான செய்திகள்

சம்மாந்துறை வைத்தியசாலை மு.காவின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்டதா?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

நேற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை “ஏ” தரத்துக்கு உயர்த்தப்பட்டதை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வு பூரணமாக மு.கா சாதித்த சாதனை போன்று மக்களிடையே காட்டப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில வைத்தியசாலைகள் “ஏ” தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தன. இதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை உள்ளடக்கப்படவில்லை.

இதனை அறிந்த சம்மாந்துறை மக்கள் சம்மாந்துறை அரசியல் வாதிகளின் இயலாமையை உச்ச அளவில் தூற்றினர். இதனை அறிந்த சம்மாந்துறை அரசியல் வாதிகள் அனைவரும் சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்த முயற்சி செய்தனர். அமைச்சர் றிஷாத் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொடர்பு கொண்டார். சம்மாந்துறை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஹசனலி தனக்கு இயலுமான முயற்சிகளை முன்னெடுத்தார். இதனிடையே மு.காவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் ஆகியோர் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமினூடாக முயற்சி செய்தனர். சில நாட்கள் கழித்து சம்மாந்துறை வைத்தியசாலை “ஏ” தரத்துக்கு தரமுயத்தப்பட்ட செய்தி வந்தது.

சம்மாந்துறையை சேர்ந்த பலருடைய முயற்சிக்கு கிடைத்த குழந்தைதான் சம்மாந்துறை வைத்தியசாலையின் தர முயர்த்தலே தவிர தனி ஒரு கட்சியினுடையதோ அல்லது தனி நபரினுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதே உண்மை. இதனை சில விடயங்களை ஆராய்வதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

சம்மாந்துறையை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தன்னுடைய வேண்டுகோளின் பெயரிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தர முயர்த்தப்பட்டதென தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் மாஹிரை புறக்கணித்து அது தனது சேவை போன்று தனது முகநூலில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த செயற்பாடானது இவர்களுக்கே இதனை யார் செய்தது என்பதில் தெளிவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள், தானே செய்தேன் என நினைப்பதைப் போன்று தான், பலருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியை மு.கா பெயர் சூட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது.

இவ் வைத்தியசாலை தரமுயர்த்தலில் பலருடைய முயற்சிகள் இருந்த விடயம் மு.காவுக்கு நன்றாகவே தெரியும். அண்மையில் சம்மாந்துறை ஐ.தே.கவின் அமைப்பாளர் ஹசனலி அமைச்சர் கிரியல்லையை கூட்டி வந்து, இது தொடர்பில் சம்மாந்துரையிலேயே பேச வைத்திருந்தமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. இதனை தங்களுடைய சேவையாக காட்ட சில வித்தைகள் காட்டியாக வேண்டும். அதற்கு மு.காவைச் சேர்ந்த பைசால் காசீம் சுகாதார பிரதி அமைச்சராக இருப்பது சாதகமாக அமைந்திருந்தது. அவர் குறித்த தரமுயர்த்தல் கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம் கையளிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இப் புகைப்படத்தில் மு.காவின் முக்கியஸ்தர்கள் சிலரும் இருந்தனர் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது). இருந்தாலும் அப் புகைப்படத்தில் சம்மாந்துறை மக்கள் சார்பாக சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்த தானே வேண்டுகோள் விடுத்தேன் என்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாகிர் இருக்கவில்லை. இந்த புகைப்படத்தை ஆழமாக சிந்திக்காதவர்கள் இதனை மு.காவின் சேவையாக பார்த்திருக்கலாம்.

சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்தும் கடிதம் கிழக்கு மாகாண சுகாதார செயலகத்துக்கு அனுப்பப்பட வேண்டுமே தவிர, அது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம் வழங்க வேண்டிய அவசியமில்லை. இதுவே அவர்கள் ஊடக மாயையை ஏற்படுத்த செய்த விடயம் என்பதை தெளிவாக்குகிறது. இதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரை புறக்கணித்து தனது முயற்சியினாலேயே சம்மாந்துறை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் முகநூலில் பகிர்ந்த விடயம் மு.காவினாலேயே நையாண்டிக்குட்படுத்தப்பட்டிருந்தது. இதனை மு.காவின் ஊடகத்தில் பணியாற்றும் சிலரும் பா.உ மன்சூரின் சேவையாக காட்ட முற்பட்டிருந்தனர். இதனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் நன்றாக சிந்தித்துகொள்ள வேண்டும்.

இந்த தரமுயர்த்தல் கதைகள் வருவதற்கு சில நாட்கள் முன்பே இது தொடர்பில் அமைச்சர் கிரியல்லையை கூட்டி வந்து, சம்மாந்துறையிலேயே மக்கள் முன் பேச வைத்த சம்மாந்துறையின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஹசனலி, சம்மாந்துறை வைத்தியசாலை தரமுயர்த்தப்படவில்லை என அறிந்ததும் சும்மா இருந்திருப்பாரா? பிரதி அமைச்சர் எனும் பலமான அதிகாரம் தன்னிடம் இருந்தும் ஆரம்பத்திலேயே தரமுயர்த்த முயற்சிக்காது பொடு போக்காக செயற்பட்ட மு.கா, மக்கள் அழுத்தம் வழங்கிய பிறகு உளச் சுத்தியோடு முயற்சித்திருக்குமா? என்ற வினாக்களை எழுப்பி சிந்தித்துப் பாருங்கள், இது மு.காவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள்.

Related posts

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பை காட்டிய! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

wpengine

இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது-சித்தார்த்தன்

wpengine

முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டி

wpengine