(பிர்தொஸ் முஹம்மட்)
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகரும் அதிபருமான அல்ஹாஜ் எம்.பி அலியார் (தேவ்பந்தி) காலமான செய்தி கேட்டு, தான் அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்; தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
குறிப்பாக 1980களில் இருந்து கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில் அலியார் ஹஸ்ரத் ஒரு சமாதான தூதுவராக தொழிற்பட்டார். குறிப்பாக 1985 முதல் 1990 வரை நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஒவ்வொரு படுகொலை சம்பவத்திலும் அங்கு இனவன்முறைகள் நிகழ்ந்துவிடாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இவருககே இருந்தது. அதுமட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் இன சமநிலை குழம்பக்கூடிய எல்லா இடங்களிலும் அலியார் ஹஸ்ரத் பிரசன்னமாகி சமாதானத்தை நிலைநாட்டுவதில் முன்னின்று பாடுபட்டார்.
இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில் முஸ்லிம்களை தங்கள் எதிரியாக கருதிய அவர்களின் ஜவான்கள் மத்தியில் அவர்களின் மொழியிலேயே உரையாடி முஸ்லிம்களின் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து அவர்களை தெளிவுபடுத்தினார். இந்திய அமைதிப்படையின் பிரிகேடியர் டூகல், கேர்னல் ஸிபர், மேஜர் ஷர்மா, மேஜர் குர்டீர் சிங் முதலிய கிழக்கிலங்கையின் தளபதிகளுடன் உறவைப்பேணி முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அன்றைய அரசியல்வாதிகளை விடவும் உயர்ந்த தரத்தில் மக்களுக்கு உதவினார்.
தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் மிகுந்த நன்மதிப்பை பெற்றிருந்த ஹஸ்ரத், கட்சி ஸ்தாபித்த காலங்களில் அவரின் மதிப்பார்ந்த ஆலோசகராகவும் தொழிற்பட்டார். முக்கியமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது தலைவர் ஹஸ்ரத்தின் ஆலோசனையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வதில் பின்னிற்பதே இல்லை. மர்ஹூம் யூ.எல்.எம். முகைடீன் முதலிய அனைத்து தரப்பினரும் ஹஸ்ரத்தின் ஆலோசனையின் அடிப்படையியேயே முக்கிய தீர்மானங்களை எடுத்தனர்.