(சுஐப் எம்.காசிம்)
கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்கொம் (INCOM -2016) என்ற தொனிப்பொருளிலான மாபெரும் கண்காட்சியை ஆகஸ்ட் 26 – 30 வரை நடாத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு, ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்கொம் கண்காட்சி தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின், சம்மாந்துறையில் இந்தக் கண்காட்சியை நடாத்துவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர்க் கைத்தொழிலுக்கு ஊக்கமளித்து இலங்கையின் உற்பத்தி பொருட்களையும், சேவைகளையும் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதே இதன் மற்றுமொரு நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு இந்தப் பிரதேசத்தில் போதியளவு உள்ளூர் வளங்களும், மனித வலுவும் இருப்பதால் இந்தக் கண்காட்சியில் அவற்றைப் பயன்படுத்தி, உள்ளூர்க் கைத்தொழிலாளர்களை ஊக்கப்படுத்த முடியுமென நாம் நம்புகின்றோம்.
அரசாங்கத்தின் 1௦ இலட்சம் வேலை வாய்ப்பு குறிக்கோளுக்கு வலு சேர்க்கும் வகையில், எதிர்வரும் வருடங்களில் கைத்தொழிற்துறையில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.
சம்மாந்துறையில் நடைபெறும் முதலாவது கண்காட்சிக்குப் பின்னர் அடுத்த கண்காட்சியை கேகாலை மாவட்டத்தில் டெடிகம தேர்தல் தொகுதியில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு அந்தந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய, சாதராண கைத்தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயம், மீன்பிடி, நெசவுக் கைத்தொழில், கைப்பணிப் பொருட்கள், மென் பொறியியல் ஆகிய கிராமிய கைத்தொழிற்துறைகளிலும், சிறிய, நடுத்தர தொழிற்துறைகளிலும் ஈடுபடுவோரை இந்தக் கண்காட்சியில் உள்வாங்கி, காலப்போக்கில் இந்தத் துறையில் புதிய தொழில்நுட்பம், நவீன கைத்தொழில் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இதனை மேலும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் பிராந்திய கைத்தொழிற்சாலைகளை உலகளாவிய சந்தையில் போட்டிபோடச் செய்ய முடியுமென நம்புகின்றோம்.
சம்மாந்துறையில் இடம்பெறும் கண்காட்சி வெறுமனே பொழுதுபோக்குக்காகவோ, மனத்திருப்திக்காகவோ ஏற்பாடு செய்யப்படும் ஒன்றல்ல. பிரதேசத்தில் உள்ள கைத்தொழிலை மேம்படுத்துவதற்காகவும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவுமே என நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.