Breaking
Thu. Nov 21st, 2024
(வை எல் எஸ் ஹமீட்)
சண்முகா பாடசாலை விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயா “ முஸ்லிம் ஆசாரியைகளும் சாரி அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம் இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் ஒழுக்க விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ளார்.
வேலைக்காகவும் வேறு கட்டாயத் தேவைகளுக்காகவும் வெளியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் இன்றைய நவநாகரீக உலகின் சவால்களுக்கு மத்தியில் தன் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பேணுவதற்காக தேர்வுசெய்த ஆடையே “ அபாயா” ஆகும். அதற்குப் பதிலாக “ சாரி” அணிந்துகொண்டுதான் முஸ்லிம் பெண்களும் குறித்த பாடசாலைக்கு வரவேண்டும்; என்று கூறியதன்மூலம் எந்த ஆடை, வேலைக்கும் செல்லும் தமது கண்ணியத்தைப் பூரணமாகப் பேணும் என அவர்கள் முடிவு செய்து தெரிவுசெய்தார்களோ அந்த ஆடையை அணிந்துகொண்டு வரவேண்டாம்; எனக்கூறுவதன் மூலம் அப்பெண்களின் கண்ணியத்தை கேவலப்படுத்தியுள்ளார்.

மட்டுமல்லாமல் பழுத்த அரசியல்வாதியாகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துகொண்டு அப்பெண்களின் அடிப்படை உரிமையை மறுத்ததோடு உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் சவாலுக்குட்படுத்தியுள்ளார். ஒரு பெண் என்ன ஆடை அணியவேண்டுமெனக் கூறுவதற்கு சம்பந்தனுக்கு என்ன உரிமை இருக்கின்றது; என்றும் அவர் சிந்திக்கவேண்டும்.

பெண்கள் “ சாரி” தான் அணிந்துகொண்டு வரவேண்டும்; என்று முடிவையும் கூறிவிட்டு சில விடயங்களைப் பேசித்தான் தீர்க்க வேண்டுமென அவர் கூறுவதாயின் அவர் கூறிய முடிவுக்குப்பின் அதேவிடயம் தொடர்பாக பேசுவதற்கு என்ன இருக்கின்றது? என்பதை சம்பந்தன் கூறவேண்டும்.

திரு சம்பந்தன் ஐயாவும் இந்துக் கல்லூரி அதிபரும் ஆர்ப்பாட்டக் காரர்களும் இன்னும் பலரும் ஒரு விடயத்தைப் புரியாமல் இருட்டில் தடவிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலைப்பாடு எவ்வாறானதென்றால் ஏதோ திருமலை சண்முகா இந்துக் கல்லூரிக்கு இம்முஸ்லிம் ஆசிரியைகள் செல்வதற்கு ஏதோ தேவை இருப்பதுபோலவும் அவ்வாறு அவர்கள் வரவிரும்பினால் தமது மரபுகளுக்குக் கட்டுப்பட்டே வரவேண்டும்; என்பது போலவுமே அவர்களின் நிலைப்பாடு இருக்கின்றது.

அவர்கள் புரிந்துகொள்ளத் தவறுவது, இந்தப் பாடசாலைக்கு செல்லவேண்டிய எதுவித தேவைகளும் அவர்களுக்கில்லை. அவர்கள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது “ கல்வியமைச்சின் தேசிய இடமாற்றக் கொள்கைக்கு” அமைவாகவாகும். அந்த இடமாற்றக் கொள்கையில் சம்பந்தன் ஐயா கூறுகின்ற, ஒவ்வொரு பாடசாலையின் மரபுகளைப் பேணுமுகமாக “ ஜாதி, மதம், கலாசாரம், ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைப் பேணுவதற்குரிய ஆடை” இவைகள் எல்லாம் பரிசீலிக்கப்பட்டு அவை அம்மரபுகளுக்கு அமைவாக இருந்தால் மாத்திரமே அப்பாடசாலைக்கு நியமிக்கப்பட வேண்டும்; என்று எந்த விதியும் இல்லை; என்பதாகும்.

இது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல; சம்பந்தன் ஐயாவுக்கும் தெரியாமல் இருந்திருக்கிறதே! அரசின் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக செய்யப்படுகின்ற இடமாற்றத்தை ஏற்று அவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் செல்லத்தவறினால் அவர்களது தொழில் பாதிக்கப்படும். இதில் அவர்களது குற்றமென்ன இருக்கின்றது?

குறித்த பாடசாலை எவ்வாறு தோற்றம்பெற்ற போதும் அது ஒரு அரச பாடசாலையாகும். அரச பாடசாலைக்கு அரச உத்தரவுக்கு அமைய இடமாற்றம் பெற்று வருகின்ற ஒரு ஆசிரியை அவரது அடிப்படை உரிமையை இழக்கவேண்டும்; என்று நீங்கள் கூறுவது எந்தவிதத்தில் நியாயம். எதற்காக அவர் தன் ஒழுக்கத்தின் அணிகலன் எனத்தேர்வு செய்த ஆடையை விட்டுக்கொடுக்க வேண்டும்.

இன்று பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் அபாயா அணிகிறார்கள்; என்பது எல்லோருக்கும் தெரியும். அவ்வாறிருந்தும் பாடசாலை மரபு என்ற பெயரில் ஒரு சமூகத்தின் ஆடைக் கலாச்சாரத்தில் கைவைப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

முதலாவது அதிபர் அப்பெண்களை அபாயா அணிந்துவர வேண்டாம்; என்றது உரிமை மீறல்; அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தது அடுத்த உரிமை மீறல்; எல்லாவற்றிற்குமேல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு சம்பந்தன் ஐயா இவ்வாறு கூறுவது மிகப்பெரிய உரிமை மீறலும் கேவலப்படுத்தலுமாகும்.

பாடசாலைகளின் மரபு, கலாச்சாரம்; என்றால் என்ன? என்பது ஒரு புறமிருக்க அவ்வாறு ஒரு ‘ மரபு’ குறித்த பாடசாலையில் இருந்தால் அதை கல்வியமைச்சில் கூறி அதற்கேற்ற விதத்தில் ஆசிரியர்களை நியமிக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு வருகின்றபோது முஸ்லிம் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டால் அதைவிட அவர்களுக்கு மகிழ்ச்சியேது? ஆனால் அரசின் இடமாற்றக் கொள்கை நீங்கள் கூறுகின்ற மரபை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இது உங்களுக்கும் கல்வியமைச்சிக்கும் இடையில் உள்ள பிரச்சினையை இரு சமூகங்களுக் கிடையிலான பிரச்சினையாக சில இனவாதிகளும் இனவாத ஊடகங்களும் மாற்றத் துணைபோகின்றபோது எதிர்க்கட்சித் தலைவரான நீங்களும் அதற்கு ஆதரவு வழங்குவது எந்த வகையில் நியாயம்?

எனவே, எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் நீதீயாகவும் நிதானமாகவும் கருத்து வெளியிட வேண்டும்; திருமலை உங்கள் தொகுதி, அங்கு உங்கள் வாக்குகள் இருக்கின்றன; என்பதற்காக இன்னுமொரு சமூகத்தின் உரிமையுடன் விளையாடுவதோ அதன் ஒழுக்க விழுமியத்தை கேவலப்படுத்துவதோ உங்களுக்கு முறையான செயலல்ல; என்பதைப் புரிந்துகொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *