பிரதான செய்திகள்

சம்பந்தன் அவர்களே! முஸ்லிம் தலைவர்களின் பலவீனத்தைக்கொண்டு இலக்கை அடையப் பார்க்கிறீர்கள்.

(ஒலுவில் ஜெலில்)

அண்மையில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா திடீரென முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை காட்டியது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் முஸ்லிம் மக்களை அரவணைத்து செல்ல பார்க்கிறாரா? இல்லை அரவணைப்பதுபோல் பாசாங்கு காட்டி முதுகில் குத்த நினைக்கிறாரா என்று சந்தேகம் தோணுகிறது.

வட,கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அதில் நடு நிலையான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுகொள்ள தயார் என்று கூறியுள்ளார். இதை கேட்கும் போது ஏதோ திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு அரசியல் தந்திரமாகவும் நினைக்க தோன்றுகிறது. இல்லா விட்டால் முஸ்லிம் சமூகத்தில் இருப்பவர்கள் சிந்திக்கமாட்டார்கள் அதனால் நமது அனுபவத்தை வைத்து ஏமாத்தி ஆசை காட்டி நினைத்ததை சாதித்துவிடலாம் என்று நினைத்தாரோ ஐயா தெரியவில்லை.

இத்தனை வருடங்களும் இந்த முஸ்லிம் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று ஆயுதம் ஏந்திய புலிகள் உடமைகளை அழித்தார்கள், நிலங்களை சூறையாடினார்கள், ஏன் உயிரைக்கூட எடுத்தார்கள் இப்படியல்லாம் கூத்து காட்டிவிட்டு கடைசியில் இருந்த இடம் கூட தெரியாமல் அழிந்துவிட்டார்கள் இறைவனின் நாட்டத்தினால்.

அன்று புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்று இந்த நாட்டில் ஒரு நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் சொந்த இடத்துக்கு செல்லுகிறார்கள். அவர்களைக்கூட இருக்க முடியாமல் தடுத்துக் கொண்டு வீணான வதந்திகளைப் பரப்பி அவர்களைக்கொத்திக் கொத்தி துரத்திக் கொண்டிருக்கிறார்கள். சில அரசியல் வாதிகளும் அவர்களுடன் சேர்ந்துள்ள கூலிப்படைகளும் இக்கைங்கரியங்களில் இறங்கியுள்ளார்கள்.

அதைக்கூட கண்டித்து தடுத்து நிறுத்த இதுவரை எந்த முயற்சியும் எடுக்காமலும் அறிக்கை கூட விடாமலும் இருந்து கொண்டிருந்தீர்கள், இத்தனை காலமும். இவ்வளவுக்கும் உங்கள் கட்டுப்பாட்டில்தான் முழு வடக்கும் இருந்தும் நீங்கள் வாய்மூடி மெளனியாக இருந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் நடவடிக்கையை பார்க்கும் போது

“பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுவது ” போல்தான் தெரிகிறது.

எத்தனை மேடைகளில் பேசினாலும் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் சகோதர்கள் என்பதை செயல் முறையில் வெளிக் காட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை நீங்கள் எடுத்ததாக தெரியவில்லை. இனிமேலும் எடுப்பீர்கள் என்பதுகூட சந்தேகம்தான்.

ஐயா, நீங்கள் பழுத்த அனுபவசாலி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். உங்களுக்கு நன்றாகவே தெரியும் முஸ்லிம் அரசியல் வாதிகளை எப்படி ஆசை காட்டி ஏமாற்றி தமது தேவைகளை, இலக்கை அடையலாம் என்பதில் நீங்கள் கில்லாடி ஐயா.

அந்த வகையில் புதிய அரசாங்கம் வந்ததில் இருந்து உங்கள் மக்களின் தேவைகளை பெறுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்து பெற்றுக்கொடுத்து வருகிறீர்கள். அரசாங்கம் கூட உங்கள் தேவைகளை நிறைவேற்றுகிறது. அது உங்களின் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் எப்படியாவது இந்த நல்லாட்சி மாறுவதற்குள் அல்லது தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோவதற்குள் தமது இலக்கை அடைந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பதவி ஆசைகளைக் காட்டி ஏமாற்றப் பாக்கிறார் ஐயா என்பதுதான் உண்மையாக தெரிந்தாலும்

நமது முஸ்லிம் தலைமைகளும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஏமாந்தாலும் ஏமாறலாம். அதே தலைமைகள் மக்கள் மத்தியில் வந்து வடக்கு கிழக்கு இணைப்பினால் எந்த பாதிப்புமில்லை நமக்கு முதலமைச்சர் தருவதாக செல்லி உள்ளார்கள்தானே என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அதைக் கேட்டு உறுப்பினர்கள் கையை தூக்கி அல்லாஹுஅக்பர் என்றாலும் கூட அதற்கும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உண்மையிலேயே இந்த வடகிழக்கு இணைந்தால் முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை. மாறாக தீமைகள்தான் அதிகம் என்பதை நாம் விளங்கிகொள்ள வேண்டும். அதுமட்டுமா தமிழர்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்க வேண்டியும் வரலாம்.

நமது சமூகத்துக்கு ஏதும் பிரச்சினை வந்தால் அதற்கு அரசியல் ரீதியாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக இவர்களிடம் மண்டியிட வேண்டி வரும் என்பதையும் ஒவ்வொருவரும் மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

அதுமட்டுமா அன்று எதற்காக ஆயுதம் ஏந்தி புலிகள் போராடினார்களோ அந்த இலக்கை வடகிழக்கு இணைப்பின் மூலம் அடைந்து கொள்வார்கள். அதற்காக வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் மிகவும் சூழ்ச்சிகரமான முறையிலே திட்டமிட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு இணைப்பு மூலம் நம் சமூகத்தை மூன்றாவது சிறுபான்மை மக்களாக கூட பார்க்க மாட்டார்கள் என்பதும் நாம் மறக்ககூடாது.

வடக்கு கிழக்கு இணைந்த பிறகு சட்ட ரீதியாக தேர்தல் நடத்தினால் (மாகாண சபை)அதிகமான உறுப்பினர்கள் தமிழர்கள்தான் வருவார்கள். அதன் பிறகு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவது என்பது கானல் நீர் ஆகிவிடும்.

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு என்று இருக்கிற ஒரு அடையாளம் இந்த கிழக்கு மாகாணம்தான் என்பது நாம் அறிந்த உண்மை.

நாம் தற்போது எப்படி வாழ்ந்துகொண்டு இருக்கிறோமோ அதே போல் இருந்து கொண்டு தேவைகளை மத்திய அரசிடம் கொண்டு சென்று கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அது குறைவாக இருந்தாலும் சரி நிறைவாக இருந்தாலும் சரி இப்போது இருப்பது போல் இருப்பதுதான் நமக்கு மட்டுமல்ல எதிர்கால சமுதாயமும் நிம்மதியாக தலை நிமிர்ந்து வாழும் வழியாகும்.

” அடுத்தவர்களின் பல்லை விட நமது முரசு மேலானது “

அதை விடுத்து பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு கிழக்கை தாரை வார்த்து (த.தே.கூ )க்கு கொடுத்து விட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு அங்குமிங்கும் தூங்கித் திரியாமல் நமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து சிறந்த, சமுதாயத்துக்கு பயன்படக்கூடிய முடிவாக எடுத்து மக்களை தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்து நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல உங்களின் கடமையும் கூட என்பதை மறக்கவேண்டாம் என்பதை எத்திவைக்கிறேன்.

மாறாக சமுதாயத்தைப் பற்றி சிந்திக்காமல் தன்கட்சியும் தலைமையும்தான் முக்கியம் என்று அவர்கள் கொடுக்கும் வாழைப்பழத்தை விழுங்கினால் அதற்குள் பெரிய ஊசி இருக்கும் என்பதை விழுங்கிய பிறகுதான் அறிந்து கொள்வீர்கள் அந்த ஊசி உங்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும். இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
அத்தோடு முடிந்து விடபோவதில்லை கிழக்கில் பெரிய கலவரம் உருவாகுவதையும் உங்களால் தடுக்கவும் முடியாது.

மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா அவர்களே நீங்கள் முஸ்லிம் தலைவர்களின் பலவீனத்தைக் கண்டு கொண்டு கிள்ளுக் கீரையாக அவர்களைப் பயன்படுத்தி தனது இலக்கை அடையப் பார்க்கிறீர்கள். அது உங்கள் அரசியல் அனுபவமாக இருக்கலாம்.

ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் மடையர்களாக்க எத்தனிக்க வேண்டாம். ஏன் என்றால் நீங்கள் இருப்பதே கூட்டமைப்பின் தலைவராக நீங்கள் மட்டும் சொல்லி அந்த முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு கொடுக்க விரும்பினாலும் உங்களுடன் இருக்கும் உறுப்பினர்கள் நிச்சயம் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் பல சாட்சிகளாக உள்ளன.

ஆகவே நீங்கள் முஸ்லிம் மக்களை  மதிப்பவர்களாக இருந்தால் வடக்கில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் நிம்மதியாக வாழ உதவி செய்யுங்கள் . உதவ முடியாவிட்டாலும் பிரச்சினை இல்லை. உதவுவதாக நடித்து உபத்திரவம் செய்யாதீர்கள். அதுவே நீங்கள் செய்யும் உதவி.

அதன் பிறகு வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விடயத்தை பேசுங்கள் அதைவிடுத்து சும்மா நேரத்தை வீணாக்காதீர்கள்.

Related posts

ரஞ்சனின் வெற்றிடத்தை நிரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்!

Editor

ஜனாதிபதி மனம் வைத்தால் எதிர்க்கட்சிகளின் இந்த சதிகளை முறியடிக்கும்

wpengine

திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம். ஓர் பார்வை.

wpengine