பிரதான செய்திகள்

சமூக கடப்பாடுகளின் சமகால நிலைப்பாடுகள்

சுஐப் எம் காசிம்

“உன்னைச் சொல்லி குற்றமில்லை. என்னைச் சொல்லிக் குற்றமில்லை” என்ற அரசியல் நிலைப்பாடுகளை பௌத்த சிங்கள சகோதரர்களின் அரசியல் தீர்மானங்கள் ஏற்படுத்திவிட்டது. சிறுபான்மைச் சமூகங்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றித்தாலும் எதையும் சாதிக்க முடியாதென்பதையே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் கற்பித்துள்ள பாடமாகும்.

2019 இன் இந்தப்பாடங்கள் ராஜபக்‌ஷக்களையும் தனித்துவ தலைமைகளையும் மேலும் துருவப்படுத்தி கோணல் களாக்கியுள்ளன. இதனால் யார், யாரை நொந்து கொள்வதென்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லையே! என அரசு தரப்பும், ராஜபக்‌ஷக்கவினரின் நிரந்தர எதிரிகளாக்கிவிட்டனரே! எனச் சிறுபான்மை தலைமைகளும் தலைகளைச் சொறிவதும் இதனால்தான்.

2015 இல் ராஜபக்‌ஷக்களுக்கு ஏற்படவிருந்த வெற்றியை முஸ்லிம் தலைமைகள், தடுத்து நிறுத்தியதால் வந்த துருவங்களே இவை. அமைச்சுப் பதவிகள், அபிவிருத்திகள், உள்ளிட்ட எத்தனையோ விடயங்களை அனுபவித்த அரசாங்கத்தை கடைசி நேரத்தில் கைவிடுவதா? இந்த நேரத்திலா? முஸ்லிம்கள் மடைதிறந்த வௌ்ளம் போன்று வேறு பக்கம் பாய்ந்தோடுவது. முஸ்லிம் தலைமைகள் அந்த நேரத்தில் (2015) தடுமாறியமையும் இதற்காகத்தான். எனினும் சமூக எதிர்ப்புக்கள், அழுத்தங்களால் மாற்று நிலைப்பாட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழிகள் இந்த தனித்துவ தலைமைகளுக்கு இருக்கவில்லை. இதனால் வௌ்ளத்தில் அள்ளுண்டு செல்லும் ஈசல்களாக்கப்பட்டன இந்த தலைமைகள். இந்த வடுக்கள் இன்றுவரைக்கும் ராஜபக்‌ஷக்கள், முஸ்லிம் தனித்துவ தலைமைகளுக்கிடையிலான இடைவௌிகளை அதிகரித்துக் கொண்டு செல்வதுதான், இன்றுள்ள கவலை. இக்கவலைகள் இவ்விரு தரப்புக்களிடமும் இல்லாமல் இருக்காது. தங்களைத் தாங்கள் சுயஅளவீடு செய்தே இந்த இடைவௌிகளை நீக்க முடியும்.

பள்ளிவாசல் உடைப்பு, பர்தா விவகாரம், ஹராம், ஹலால், முஸ்லிம் திருமணச் சட்டம் போன்ற மதவிரோதச் சிந்தனைகளும் நிறைவேற்று அதிகாரத் தில் நிலைக்கும் 18 ஆவது திருத்தம், தனியலகு,தனியான நிர்வாகம், தீர்மானிக்கும் சக்தி, சிறுபான்மை தனித்துவ அடையாளங்களை நிராகரிக்கும் ஆணவங்களும்தான் இவர்களைப் பகைவர்களாக்கின. சமூக உரிமைகளைக் கோரினால் அடிப்படைவாதிகளெனவும் அதிகாரத்தில் நிலைக்க ஆரம்பித்தால் குடும்ப ஆதிக்கமெனவும் ஒருவரையொருவர் சமரடிக்கும் நிலை மாறவேண்டும்.

“கொடியசைந்தா காற்று வந்தது, காற்று வந்தா கொடியை அசைத்தது” என்ற இந்தப்பிரச்சினையைப் பொறுமையாக இருந்திருந்தால் தீர்த்திருக்கலாம், தீர்க்கலாம். என்ன செய்வது? 2015 இல் சமூகத்திலெழுந்த கொதிப்புக்கள், பொறுமைக்கு இடமளிக்காது தலைமைகளின் கடிவாளத் தை, கட்டவிழ்த்துவிட்டதே! இந்தக் கொதிப்பும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான தகிப்பும் 2019 இலும் எதிரொலித்து, வரவுள்ள பொதுத்தேர்தலிலும் களமாடவுள்ளன.

ரத்னதேரர், விஜேதாச ராஜபக்‌ஷ, கம்மம்பில போன்றோரை ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்டுப்படுத்துவதும் , புர்கா, ஷரீஆ, திருமணச் சட்டம்,தனியலகு, அதிகாரப் பகிர்வு என்பவை தொடர்பில் முஸ்லிம் தரப்பு சாவதனமாகக்கையாள்வதிலுமே இவர்களை மீண்டும் ஐக்கியப்படுத்தும்.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமூகங்களை உரசும், உணர்ச்சியூட்டும், ஆக்ரோஷப்படுத்தும் பிரச்சாரங்களை, கைவிட்டால் இரு தரப்பு இலக்குகளும் வெற்றி கொள்ளப்படலாம்.

இவ்விடயத்தில் தமிழ் தலைமைகளை ராஜபக்‌ஷக்கள் கண்டு கொள்ளவில்லை. ஆளுந்தரப்பு அரசியலை விலக்கிக் கொண்ட தமிழர்கள் வெற்றி, தோல்வியைப் பொருட்படுத்தாது எதிர்ப்பு அரசியலையே செய்கின்றனர். எனினும் இந்தப் போக்குகள் வெற்றிக்கு வித்திடுமா? என்று புலிகளின் தோல்விகள் எழுப்பியுள்ள சந்தேகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டும். இருந்தபோதும் என்ன விலை கொடுத்தாலும் உரிமையைப் பெறுவதில் இவர்களுக்குள்ள உறுதிப்பாடுகள் சோரம்போகாத அரசியலுக்கு எடுத்துக்காட்டுத்தான். ஒருபுறம் இவர்களது மறைமுகக்கரங்கள் பின்கதவுகள் வழியாகப் பெற்றுக் கொள்ளும் கையூட்டுக்களும் கதைகளாக வௌிவராமல் இல்லை.

என்றாலும் முஸ்லிம் தலைமைகளின் தடுமாற்ற நிலைப்பாடுகளே சகலருக்கும் கழுத்தறுப்புக்களாகக் காட்டப்படுகின்றன. இதில் ஒரு விடயம் பொதுவான மனப்பரப்பில் புரிந்துணர்வுக்காக விடப்பட வேண்டி உள்ளது. ஆளுந்தரப்புக்களுடன் இணைந்து அரசியல் செய்யும் முஸ்லிம் தலைமைகள் எந்த இலட்சியத்துக்கு போராடப்போகின்றன?. அரசுடன் இருந்தால் அரசை ஆதரிப்பது, எதிர்க் கட்சியில் இருந்தால் அரசை எதிர்ப்பது. இதுவா இவர்களின் சமூகமயமாக்கல்கள்? 2013 இல் ஜெனிவாவில் ராஜபக்‌ஷக்களின் அரசைக் காப்பாற்றுவதில் இவர்கள் வகித்த பங்கு, மட்டுமல்ல 2004ல் முன்வைக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பில் இத்தலைமைகள் கோரிய பங்குகளும் தமிழர் தரப்பு அரசியலுடன் நாங்கள் இல்லை என்பதன் வௌிப்பாடுகளா? அரசியல் உரிமைகளுக்காக தமிழர்கள் எம்மை எதிர்த்தார்கள், முஸ்லிம்கள் எதற்காக எதிர்க்கிறார்கள் என்ற ராஜபக்‌ஷக்களின் கேள்விக்கு இவர்களிடமுள்ள பதிலென்ன?

“தோற்றாயிற்று. ஐக்கிய தேசிய கட்சியில் இருப்போம்”. என இப்போது கூறும் இவர்கள் 2015 இல் தோற்றாலும் பரவாயில்லை ராஜபக்‌ஷக்களுடன் இருப்போமென சிந்தித்திருக்கலாமே.

எனவே இனிவரும் காலங்களிலாவது சமூகத்தை வழிநடாத்தும் கடிவாளத்தை இக்கட்சிகள் கைவிட்டுவிடாமல் காய்களை நகர்த்த வேண்டும். சிலவேளை தர்மக் கடப்பாடுகளைப் புறந்தள்ளி மக்கள் சென்றாலும் தேசிய அரசியலின் நாடித்துடிப்புக்களை அறிவதிலும் அளவிடுவதிலும் மிகத் தீட்சண்யம் இத்தலைமைகளுக்கு அவசியம். இதுதான் மர்ஹும் அஷ்ரஃபின் வழியைப் பின்பற்றுவதாகக் கூறும் தலைமைகளை உண்மைப்படுத்தும்.

Related posts

தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு நாமும் ஒர் வகையில் காரணம்

wpengine

டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine

30ஆம் திகதி மன்னாரில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்மேள கூட்டம்! தலைவர் அழைப்பு

wpengine