கட்டுரைகள்பிரதான செய்திகள்

சமூக எடைக்குள் சமூக இடைவெளி, கொரோனா சுமக்கப்போகும் பெறுபேறுகள்!


சுஜப் எம். காசிம்-

தேர்தல் காலக் களைகட்டல்கள், குசுகுசுப்புகள், கெடுபிடிகள் இம்முறை பெரிதளவில் இல்லாதிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸை இல்லாதொழிக்கப் பின்பற்றப்படும் சமூக இடைவெளிகள், முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் புதியதொரு புரியாத மன இடைவெளிகளை ஏற்படுத்தியுள்ளன. சமூக இடைவெளிகளைப் பேணுமாறு அடிக்கடி விடுக்கப்படும் எச்சரிக்கைகள், மக்களிடையே மன இடைவெளிகளை உண்டுபண்ணி உறவாடல்களிலும் மன உளைச்சலை ஏற்படுத்தி, நாளாந்த நடவடிக்கைகளில் அச்ச உணர்வையும் தோற்றுவித்துள்ளது. இந்தப் புதிய சூழலிலிருந்து முற்றாக விடுபட்டு தேர்தலை நடத்த எடுக்கப்பட்ட எத்தனங்கள், எதிர்பார்ப்புக்கள் கை கூடவில்லை என்பது கவலைதான். என்ன செய்வது?

ஜனநாயக நம்பிக்கைகள், மக்களின் வாக்குரிமைகளை மதிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதால் கொரோனாவைப் புரிந்துகொண்டுள்ள, ஓரளவு அச்சம் தெளிந்த சூழலுக்குள் நாம் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம். பாராளுமன்றத்தையும் கலைத்து, இரண்டு தடவைகள் தேதி குறித்தும் இலகுவான சூழல் ஏற்படவில்லையே! எத்தனை மாதங்களுக்கு இவ்வாறு ஒத்தி வைத்துக்கொண்டே வருவது? பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதும் சாத்தியமற்றுப் போய்விட்டது. கொரோனா முடியும் வரை தேர்தலை நடத்தக் கூடாதென்ற வாதங்களில், எப்போதாவதென்ற ஒரு கால எல்லை குறிப்பிடப்படவும் இல்லை. இன்னும் இரண்டு வருடங்களுக்காவது கொரோனாவின் எச்சங்கள் எச்சரிக்கவே செய்யுமென்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

இவைகளிலிருந்து பெறப்பட்ட தீர்வுதான் தேர்தலுக்கான திகதி. ‘கடல் இருக்கும் வரைக்கும் அலைகள் இருக்கும். காடுகள் உள்ளவரை கொடிய மிருகங்கள் வாழும் அதற்காக அலைகள் ஓய்ந்த பின்னரா முத்துக் குளிப்பது? மீன்பிடிக்கச் செல்வது? சிங்கம்,புலிகள் இறந்த பின்னரா வேட்டையாடச் செல்வது?’ இது போன்றுதான் கொரோனா முடியும் வரை காத்திருப்பதா தேர்தலுக்கு? எனவே, எதிர்கொள்ள நேர்ந்துள்ள புதிய சூழலில் தேர்தல் நிலைமைகள் எவ்வாறிருக்கும்? இதில் எவ்வாறு நாம் நடந்து கொள்வது? இதில், கட்சிகள்தான் கட்டாயம் வாக்காளர்களை வழி நடத்த வேண்டும். இரண்டாம் பட்சமாகவே ஏனைய அறிவுரைகள், ஆலோசனைகள்.

பெரியளவில் பொதுக் கூட்டங்கள் இல்லாது போனால் சிறு, சிறு கூட்டங்கள் பல தேவைப்படலாம். இதற்கான செலவுகளிருக்க சிரமங்களே பெரும் தலையிடியாகப் போகின்றன. பதாதைகள், போஸ்டர்கள், விளம்பரச் செலவுகள் விண்ணைத் தொட்டு நிற்கும். இணையங்கள், சமூக வலைத் தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரையே சென்றடைந்தாலும் பெரிதாகக் கவர்ச்சி, வசீகரங்களை ஏற்படுத்தாது. கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், மக்கள் முன் நேரடியாகத் தோன்றி, கையசைத்து, கை கொடுத்து, தோளில் தலைவர்கள் சுமந்து செல்லப்பட்டு மேடைகளில் வைப்பதில்தான் வாக்காளர்களுக்குத் திருப்தி. பெருமிதம். மேலும், சில தாய்மார்கள், வயதான தந்தைமார்கள், பிரதேச முக்கியஸ்தர்களின் வீடுகளுக்குச் சென்று, அரசியல் தலைவர்கள் சுகம் விசாரிப்பது இருக்கிறதே, முழுக் கிராமத்திற்குமே இது பெரிய விளம்பரம். எனினும், இந்நிலைமைகள் இம்முறையிருக்குமோ தெரியாது.

வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதென்பது ஏற்கனவே ஏற்பட்டுள்ள மன உளைச்சல்கள், இடைவெளிகளால் வாக்காளர்களுக்குச் சாத்தியமற்றதே. இவ்விடத்தில்தான் வாக்குகளும் விலை பேசப்பட வாய்ப்புகள் உள்ளன. கொரோனாவுக்கு அஞ்சி வீடுகளில் இருப்போரை உற்சாகப்படுத்தவும், வாக்களிக்க வைக்கவும் நிறையப் பேரம் பேசல்கள் நடக்கலாம். வாகனங்களில் இவர்களை ஏற்றியிறக்குதல், சமூக இடைவெளிகளைப் பேணுவதில் எத்தனை சிரமங்கள் எழுமோ தெரியாதே!

உண்மையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பீதியிருக்கிறதே, குண்டுப் புரளியையும் விடக் கொடியதாகவுள்ளது. சமூகமே வளைத்து நின்று குண்டுதாரியை அல்லது பயங்கரவாதியைப் பிடிக்க முடியும். ஒழிக்க இயலும். சமூகமே கொரோனாப் பீதியால் புரள்கையில், யார், யாரைப் பிடிப்பது?எவர், எவரைச் சந்தேகிப்பது?

வீட்டுக்கு வரும் விருந்தாளி, அலுவலகம் வரும் வாடிக்கையாளர், வீதியால் வரும் நண்பர்களை அடையாளமே காண இயலாத விசித்திர நிலைமைகள். முகக் கவசமும் மனக் கிலேசமும் ஒருவரையொருவர் அச்சத்துடன் நோக்க நேரிட்டுள்ளது. யாரும் முகக் கவசமின்றி வீட்டுக்கு வந்தால் நமக்கு ஏற்படும் சங்கடம் சொல்லுந்தரமன்று. இந்தச் சுபாவங்கள், சூழ்நிலைகளில்தான் ஜனநாயகத்தை காப்பாற்றும் படலமும் வந்துள்ளது.

வழமையாக அறுநூறு கோடி ரூபா தேவைப்படும் பொதுத் தேர்தலுக்கு, இம்முறை தொள்ளாயிரம் கோடி ரூபா தேவைப்படுமென்கிறது செயலகம். இதில் சில குடும்பச் செலவுச் சிக்கனங்களையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பெண்களுக்கு facial முக அழகு படுத்தலுக்கான செலவுகள் குறைந்திருக்கும். யார் பார்வைக்கும் படாத முகத்தை அழகுபடுத்தி என்ன பயன்? காதலர்கள் தங்கள் அன்பை அவசரத்திற்கு வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இந்தக் கொடிய கொரோனா மூடிவிட்டதே! “யான் நோக்கும் காலை நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகரும்”. எங்கே, எப்போது எம் இளம் காதலர்கள் நோக்குவர்? இவைகள்தான் கொடிய கொரோனா எமக்கு ஏற்படுத்தியுள்ள விநோதச் சூழல்.

இதில் எறியப்படவுள்ள அரசியல் பந்துகள், எட்டப்படவுள்ள ஜனநாயக இலக்குகள் எப்படியிருக்கும்? ஐக்கிய தேசியக் கட்சி, அதிலிருந்து வெளியேறியுள்ள ஜனநாயக மக்கள் சக்தி, இதன் பங்காளிகளாகியுள்ள சிறுபான்மைத் தலைமைகளின் எதிர்பார்ப்புகள், எவரும் எதிர்வுகூறுவதைப் போலிருக்காதென்றே தோன்றுகின்றன. இந்த நேரத்தைப் பயன்படுத்தியாவது, தனித்துவ தலைமைகள் தனித்துக் களமிறங்கி இருக்கலாமென்பது பலரது விருப்பம். இவ்வாறான பலரது விருப்புக்கள் வெறுப்புக்களாகி விடாதவாறு, இத் தலைமைகள் எப்படி நடந்துகொள்ளப் போகின்றன?

இந்நிலையில் மக்கள் கூட்டம் கொத்துக் கொத்தாகச் செத்து மடிகையில், பதினொரு பேரையே இலங்கை இழந்திருக்கிறது. இது எதிரணிகளின் எறிகணைகளிலிருந்து அரசைப் பாதுகாத்திருக்கிறது. இப்படி பெரிய மவுசுள்ள ஒரு தேர்தலில், எதிர்த்து நின்று களமாட இத்தலைமைகள் எதனைச் செய்யும்? எவற்றில் சாதிக்கும்?

Related posts

சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக முடக்குவதற்கு அரசாங்கம்

wpengine

அரசாங்கம் என்னிடம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

wpengine

தமிழ் மக்களின் பிரச்சினையினை தீர்வுகாண புதிய பாராளுமன்றம் கூட்ட வேண்டும்

wpengine