Breaking
Mon. Nov 25th, 2024

ஊடகத்துடன் புதிதாக இணைந்திருக்கின்ற சமூக ஊடகங்கள் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு இருப்பது அவசியமாகும். சமூக ஊடகங்கள் இன்று சமூகத்தின் மத்தியிலே பெரும் செல்வாக்கை ப் பெற்றிருக்கின்றன. இதை எப்படி நாங்கள் பயன்படுத்துவது என்பது பற்றி குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் விழிப்பாக இருப்பது அவசியமாகும் என்று முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என். எம். அமீன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சமூக ஊடகங்களிலே எமக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எதனையும் பதிவு செய்யலாம். அது சுதந்திமான ஒன்றுதான். ஆனால் இதனை எல்லோரும் பார்க்கிறார்கள். எல்லோரும் வாசிக்கிறார்கள். சில நேரங்களில் இதனால் ஏற்படுகின்ற விளைவுகள் மிகவும் பாரதூரமானது.

அண்மையிலே இந்த நாட்டிலே ஒரு சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு தொடர்பாக அவருடைய பேட்டி தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துகள் உண்மையில் அச்சத்தை ஊட்டுவதாக இருக்கின்றன. நாங்கள் தமிழில் எழுதினால் அது யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்று சிலர் நினைக்கின்றார்கள். இன்று இந்த நாட்டிலே பெரும்பாலானோருக்குத் தமிழ் தெரியும். தேவை ஏற்பட்டால் எவரிடமும் சென்று மொழி பெயர்த்துப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே நாங்கள் மிக அவதானமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

சில நேரங்களில் சில விடயங்களை படங்களோடு பிரசுரிக்கின்றோம். அந்த படங்கள் சில விடயங்களுக்குச் சாட்சியாக அமைகின்றன. ஆகவே இந்த விடயங்களிலே குறிப்பாக இளைய தலைமுறையையாகிய எங்களுடைய சகோதர சகோதரிகள் கவனமாக இருப்பது மிக முக்கியமாகும். ஏனென்றால் இது பாரிய கலவரங்களைக் கூட உருவாக்கலாம். நாங்கள் சில விடயங்களை மறைத்து வாசிக்க வேண்டி இருக்கின்றது. அதனை நாங்கள் பெரிதுபடுத்தினால் ஏற்படப் போகின்ற விளைவு மிகப் பாரதூரமாக இருக்கும்.

எனவே குறிப்பாக இந்த நாட்டினுடைய இளைய தலைமுறையினராகிய நீங்கள், பயன்படுத்துகின்ற சமூக ஊடகங்களை மிகக் கவனமாக மிக நிதானமாக, நீங்கள் எதை எழுதுகிறீர்கள், எந்த வசனத்தைப் பாவித்து எழுதுகிறீர்கள் என்பது பற்றி சற்று இரண்டாவது முறை சிந்தித்து செயற்பட்டால் மிக நன்றாக இருக்கும். அது சமூகத்தின் இருப்புக்கு பயன்படக் கூடியதாக இருக்கும்.

அண்மையிலே மஹியங்கனையில் நடைபெற்ற துரதிஸ்ட்ட சம்பவமான கொடி விவகாரம் இன்று சமூக ஊடகங்களிலே ஏட்டிக்குப் போட்டியாக போய்க் கொண்டிருக்கிறது. இது வீணான பிரச்சினையை உருவாக்கக் கூடும். நாங்கள் நாட்டின் சில பகுதிகளிலே பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் நாட்டின் குக்கிராமங்களிலே வாழ்கின்ற மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே பெரும்பான்மையாக வாழுகின்ற சில முஸ்லிம் சகோதரர்கள் குறிப்பிட்டிருந்த பின்னூட்டல்களை அண்மையிலே நான் வாசித்த போது எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அவர்கள் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு இதன் பாரதூரம் புரிவதில்லை.

இந்த நாட்டிலே பரவலாக கிழக்கு மாகாணத்துக்கு வெளியே மூன்றில் இரண்டு பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு ஊடகத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும். இது எங்களுடைய தாய் நாடு. ஆகவே தாய் நாட்டின் நன்மைக்காக, சமூக நன்மைகளுக்காக, இந்த ஊடகங்களைப் பயன்படுத்துவது மிக முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *