இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
´ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் தான் செல்லும்´ என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கி நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களை வழங்குவது பற்றி பேச்சு நடத்தினாலும் சமஷ்டி முறைக்கு ஒருபோதும் தமது கட்சி ஒத்துழைப்பு அளிக்காது என்றும் மஹிந்த சமரசிங்க கூறினார்.
´மாகாண சபைகள் தேவையானால் தீர்மானங்களை நிறைவேற்றி இங்கு அனுப்ப முடியும். ஆனால், எமது தரப்பிலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் கிடைக்காது´ என்றார் மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக உள்ள மஹிந்த சமரசிங்க.
வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கும் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என்றும் சமரசிங்க கூறினார்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பில், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை கொண்டுவருவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாணசபை தீர்மானம் ஒன்றை அண்மையில் நிறைவேற்றியிருந்தது.
´நாட்டைப் பிரிக்காமல், தனித்து வாழும் அதே நேரம் அனைத்து மக்களுடனும் இணைந்து வாழவே´ தமிழர்கள் ஆசைப்படுவதாகவும், அதை மையப்படுத்தியே தமது தரப்பால் புதிய அரசியல் சாசனத்துக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.