Breaking
Sun. Nov 24th, 2024
[எம்.ஐ.முபாறக் ]
தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கும் முயற்சிக்கு  இன்று தெற்கில் ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்கு தமிழர்கள் இனி கடுமையாகப் போராட வேண்டி வரும் என்றே தோன்றுகின்றது.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு  வழங்குவது நியாயமானது என ஒருபுறம் ஏற்றுக்கொண்டு மறுபுறம் அதை வழங்காமல் தடுப்பதற்கான கபட நாடகத்தை-இரட்டை நிலைப்பாட்டை தெற்கின் அரசியல் களத்தில் இன்று எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்த அரசியல் தீர்வைத் தடுப்பதற்கான காரணத்தை-நியாயத்தை தேடிக்கொண்டிருக்கும் பேரினவாதிகளுக்கு வட மாகாண சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம் வாய்ப்பாக அமைந்துள்ளது.அதை வைத்துக்கொண்டுதான் இன்று பேரினவாதிகள் காய் நகர்த்துகின்றனர்.

உருவாக்கப்படப் போகும் புதிய அரசமைப்பானது நாட்டை இரண்டாகப் பிரித்து தமிழீழத்தை அமைக்கப்போகும் ஒரு சூழ்ச்சி என-ஒரு பொறிமுறை என சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் பேரினவாதிகளின் பிரசாரங்களை வலுப்படுத்துவதாக வட மாகாண சபையின் தீர்மானம் அமைந்துள்ளதைக் காணலாம்.

ஒரு மாகாண சபையின் தீர்மானம் என்பது தேசியரீதியில் அவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல; பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று தெரிந்தும் கூட வட மாகாண சபையின் தீர்மானத்தை ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்போல்  சித்திரித்து- நாட்டு ஆபத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு பாரதூரமான தீர்மானமாகக் காட்டி பேரினவாதிகள் இப்போது தெற்கில் இனவாதப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதப் பிரசாரங்களின்போது எவ்வாறு அவற்றில் முழுக்க பொய்களை மாத்திரம் கலந்து சிங்களவர்களை இந்தப் பேரினவாதிகள் குழப்பினார்களோ அதேபோல்தான்,இந்தப் பிரசாரத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

அரசியல் தீர்வு தொடர்பான தமிழர்களின் கோரிக்கைகளை இந்த நாட்டுக்கு வெளிப்படுத்திய  ஓர் ஊடகச் செயற்பாடாகவே வட மாகாண சபையின் தீர்மானத்தை பார்க்க வேண்டியுள்ளது.பலமான ஊடகம் ஒன்றின் ஊடாகத் தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போது அவை எவ்வாறு அனைவரையும் சென்றடையுமோ அதேபோல்தான் வட மாகாண சபையையும் ஒரு பலமான ஊடகமாகப்  பயன்படுத்தி தமிழர்கள் அவர்களின் கோரிக்கைகளை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் கீழ் இந்த நாட்டின் முழுமையான அதிகாரங்கள் இருக்கின்றபோது மாகாண சபைகள் எந்தவொரு பிரேரணையை நிறைவேற்றினாலும் அவற்றால் எதையும் பண்ணிவிட முடியாது.அதேபோல்தான்,இந்த வட மாகாண சபையின் தீர்மானத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திபால நன்கு தெளிவடைந்தவராகக் காணப்படுகின்றார் என்றே தோன்றுகின்றது.வட மாகாண சபையின் தீர்மானமானது தமிழர்களின் கோரிக்கையின் வெளிப்பாடாக இருக்கின்றது.அவ்வாறு வெளியிடுவது அவர்களின் உரிமை.அந்தத் தீர்மானத்தால் எதையும் செய்துவிட முடியாது என்ற கருத்துப்பட ஜனாதிபதி  தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டதை அவதானிக்க முடிந்தது.

அதில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்ட ”சரியான தீர்வை வழங்கினால் சமஷ்டி என்ற பேச்சு எழாது”என்ற அவரின் கூற்றை ஒரு சிறந்த இராஜதந்திர நகர்வாகவே நாம் பார்க்க வேண்டும்.

சமஷ்டி என்ற பதம் ”தனித் தமிழீழம்”என்ற அர்த்தத்துடன் இன்று தெற்கால் பார்க்கப்படுகின்றது.இதனால்தான் இந்த சமஷ்டி இவ்வாறு கடும் தாக்குதலுக்கு உள்ளாகின்றது.

தமிழர்கள் குறிப்பிட்ட சில அதிகாரங்களைக் கேற்கின்றனர்.அவர்கள் கேற்கும் அந்த அதிகாரங்கள் சமஷ்டி என்ற ஆட்சி முறைமையின் கீழ் வருவதுதான் இந்தப் பிரச்சினைக்கே காரணம்.சமஷ்டி என்றால் என்ன;அதன் கீழ் வருகின்ற ஆட்சி முறைமை எப்படிப்பட்டது போன்ற விடயங்கள் எதுவுமே தெரியாமல் இன்று தெற்கு சமஷ்டியை எதிர்த்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலைமையை நாம் ஒரு புடவை கடையில் இருக்கின்ற ஆடைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.குறிப்பாக,ஒரு தரமான ஆடையை விடவும் அந்த ஆடையைக் தாங்கி இருக்கும்  பெட்டியின்-பொதியின் கவர்ச்சிமீதுதான் எமது கவனம் அதிகமாகப் பதிந்திருக்கும்.ஒரு தரமான ஆடை பொதியிடப்படாமல் வைக்கப்பட்டிருந்தால் அதை யாரும் நாடுவதில்லை.இதேவேளை,தரமற்ற ஆடை அந்தப் பெட்டிக்குள் இருந்தால் அதைத் தாங்கியுள்ள பெட்டியின் கவர்ச்சியை வைத்து நாம் அந்த ஆடையைத் தரமான ஆடையாகப் பார்க்கின்றோம்.

மொத்தத்தில் அந்தப் பொதியின்-பெட்டியின் கவர்ச்சியை வைத்துத்தான் அந்த ஆடையின் தரத்தைத் தீர்மானிக்கின்றோம்.ஆடையை வாங்கிக் கொண்டு வீடு செல்லும்வரைதான் அந்தப் பொதியன் கவர்ச்சி இருக்கும்.அந்தப் பொதியுடன் சேர்த்து நாம் ஆடையை அணிவதில்லை.ஆடையை மாத்திரம்தான் அணிகின்றோம்.அந்த ஆடை தரமில்லை-அழகில்லை என்று யாராவது சொன்னால் ஆடையின் பொதி அழகாக-தரமாக இருந்தது என்று சொல்லி ஆடையைத் தரமுயர்த்த முடியுமா?இது பகுத்தறிவாகுமா?

இதேபோல்தான் இந்த சமஷ்டியையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.சமஷ்டி என்பது ஆடையைத் தாங்கியுள்ள பொதியைப் போன்றதாகும்.அந்த சமஷ்டி என்ற பொதிக்குள் இருக்கின்ற அதிகாரமானது நாம் நிலையாக அணிந்து இருக்கும் ஆடையை போன்றதாகும்.இப்போது இந்தப் பொதி வேண்டுமா அல்லது அதற்குள் இருக்கின்ற ஆடை வேண்டுமா என்று கேட்டால் அனைவரும் ஆடை என்றே பதிலளிப்பர்.

அபேபோல்,சமஷ்டி என்கின்ற பொதி வேண்டுமா அல்லது அதற்குள் இருக்கின்ற அதிகாரங்கள் வேண்டுமா என்று கேட்டால் அதிகாரங்கள் என்றுதான் பதில் கிடைக்கும்.

இதைத்தான் ஜனாதிபதி இராஜதந்திரரீதியில் கூறி இருக்கின்றார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள  வேண்டும்.இன்று பிரச்சினையாக இருப்பது சமஷ்டி என்ற பொதிதான்.ஆகவே,அந்தப் பொதியை விட்டுவிட்டு அந்தப் பொதிக்குள் இருக்கின்ற அதிகாரங்களை மாத்திரம் கையில் எடுப்பதற்கான இராஜதந்திர நகர்வை மேற்கொள்வதே பொருத்தமான வழி முறையாக இருக்கும்.

அவ்வாறு அதிகாரங்களை எடுக்கும்போது பிரச்சினைகள் கிளம்பாது என்றில்லை.,ஆனால்,இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் கிடைத்திருக்கும் படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த பிரச்சினைகளை சமாளிக்கத் தயாராக வேண்டும்.

ஆகவே,இந்த விடயத்தில் அரசு தெரிவித்திருக்கும் கருத்துக்களின் உள்நோக்கத்தை-இராஜதந்திரத்தை உணர்ந்து அரசின் கூற்றை அமோதித்துப் போவதுதான் புத்திசாலித்தனமாகும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *