யாழ்.மத்திய கல்லூரி பிரதான வாக்களிப்பு நிலைத்தில் இறுதி தேர்தல் முடிவுகள் அதிகாலை வரையில் தாமதமாக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்பதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- விருப்பு வாக்கு சர்ச்சைகள் தற்போது வரையில் நீடிக்கின்ற நிலையில் வாக்கு எண்ணும் தினமன்று மத்திய கல்லூரியில் நடந்தது என்ன?
பதில்:- காலையில் இருந்தே யாழ்.மத்திய கல்லூரியில் காத்திருந்தோம். மாலை 6 மணியளவில் உத்தியோகப்பற்றற்ற முடிவுகள் பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது மாலை 7 மணியளவில் நான் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசியபோது எல்லாம் முடிந்து விட்டது நாம் கைமுறை மூலமான எண்ணிக்கையை இறுதி செய்கிறோம் அது தான் தாமதம் எனக் கூறினார். அத்தோடு உங்களுக்கு முடிவுகள் தெரியும் தானே எனவும் கூறினார்.
இரவு 9 மணியளவில் கிளிநொச்சியில் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டோம். பின் மானிப்பாயில் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக கேள்விப்பட்டோம். அவ்வேளையில் மீண்டும் சென்று உரிய அதிகாரிகளிடம் மீள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றதா என்று கேட்டேன். அதற்கு அவர் அப்படி எங்கும் மீள்வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை எனக் கூறினார்.
பின் அதே அதிகாரியிடம் முடிவுகளை அறிவிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று மீண்டும் வினவியபோது நாம் முடிவை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி எடுக்க வேண்டும் எனக்கூறினார் அது தான் தாமதமாகின்றது என்றும் பதிலளித்தார். அதற்கடுத்து நள்ளிரவு 12 மணியாகியிருந்தது. அச்சமயத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் வருகை தந்தார். அப்போது வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் தொடர்பிலான நிலைமைகள் குறித்து சில தவகல்கள் வெளிவரவும் சிறு குழப்பம் உண்டானது. அவரும் ஊடகங்கள் முன்பதாக தான் அறிந்தபடி வேட்பாளர் நிலைகள் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்.
சற்று நேரத்தின் பின் விருப்பு வாக்கு கணக்கீட்டின் படி எனது நிலை நான்காவது எனக் கேள்விப்படடேன். பின் அதிகாலை 2 மணியிருக்கும் சுமந்திரன் தனது விசேட அதிரடிப்படையினர் புடைசூழ அங்கு வந்திறங்கினார் . இதன்போது களேபரம் உருவாகியது. அதன்போது விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களை தாக்க ஆரம்பித்தபோது அவர்கள் நாம் அமர்ந்திருந்த கொட்டகை வழியாக ஓடிவந்தனர்.
அவர்களை துரத்தி வந்த விசேட அதிரடிப்படையினர் நாம் அமர்ந்திருந்த கொட்டகையில் இருந்த எனது மருமகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டபோது அவர் தடுமாறிப் போனார். இதனால் நானும் சற்று கோபம் அடைந்தேன். எனது மருமகளும் என்னோடு இருந்தவர்களும் ‘உடனே நாம் வெளியேறுவோம் இல்லாவிட்டால் ஆபத்து’ என சத்தமிட்டனர். அதை தொடர்ந்து நாம் வெளியேற முடிவு செய்தோம்.
வெளியேறும்போது வாக்கு எண்ணும் அரங்கினுள் சென்றேன். பொறுப்பு வாய்ந்த அதே அதிகாரியிடம் முடிவுகளை அறிவிப்பதில் இவ்வளவு தாமதம் ஏன்? இவ்வளவு நேரம் ஏன் எடுக்கின்றது என்று கேட்டபோது இன்னும் கொஞ்சநேரத்தில் அறிவிப்போம் எனக் கூறினார். அப்போது அரங்கினுள் பாராளுமன்ற உறுப்பினர் தனது உதவியாளருடன் அமர்ந்திருந்ததை கண்டேன். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினேன்.
கேள்வி:- அப்படியாயின் வாக்குகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றீர்களா?
பதில்:- இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் பல இருக்கின்றன. சிலர் கடந்த கால அனுபவங்களையும் பகிர்ந்திருந்தனர். எது எவ்வாறிருந்தாலும், வாக்குகளை எண்ணும் பணியில் தம்மை அர்ப்பணித்த அலுவலர்கள் யாரையும் நான் குறைகூறவும் இல்லை. அவர்கள் நேர்மைத் தன்மையில் நான் சந்தேகம் வெளியிடவும் இல்லை.
அவர்கள் தம் பணிகளை மாலையில் முடித்த பின் முடிவுகளை அறிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்பதே மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது. சில இலட்சம் வாக்குகளை கணக்கிட ஏன் இவ்வளவு தாமதம்? பல இலட்சம் வாக்காளர்களை கொண்ட ஏனைய மாவட்டங்கள் முடிவுகளை வெளியிட, இங்கு மட்டும் ஏன் நீண்ட தாமதம்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கொரோனா காரணமாக தேர்தல் முடிவுகளை நேரகாலத்துடன் அறிவிக்கும்படி கூறியும் மறுநாள் அதிகாலை வரை யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் இழுத்தடிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?
கேள்வி:- அரசியலுக்கு புதிததாக இருக்கும் உங்களுக்கு வாக்கு எண்ணும் முறைகள் பற்றிய போதிய அனுபவம் இல்லையெனக் கூறப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்;- எனக்கு அனுபவம் இல்லை, பரிச்சயம் இல்லை என்று பரிகாசமான கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்டிருந்தார். சித்தார்த்தன் அவர்களும் வேட்பாளர் நிலைகள் பற்றி சில கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அப்படியாயின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களுக்கும் தேர்தல் வாக்கெண்ணும் முறைமைகளில் அனுபவம் இல்லாதவர் என்று கூறுகின்றாரா?
கேள்வி: தேர்தல் முடிவுகளின் பின்னர் உங்களுக்கு கட்சி பேதமின்றி சில உறுப்பினர்கள் ஆதரவுக்கரம் நீட்டியமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- நிச்சயமாக அது அவர்களின் ஒரு மனிதபிமான செயற்பாடு, கட்சி பேதம் கடந்த அவர்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் நான் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளகிறேன். எதிர்காலத்தில் கட்சிகளிடையே காணப்பட வேண்டிய அல்லது பேணப்பட வேண்டிய ஒற்றுமைக்கு இதுவொரு ஆரம்ப புள்ளியாகக் கூட அமையலாம். இது போல மக்களின் அபிலாசைகளை அடைவதற்கும் கட்சி பேதம் கடந்து நாம் ஒற்றுமையோடு செயற்பட வேண்டியுள்ளது.
கேள்வி:- கட்சித்தலைவர் மாவை.சேனாதிராஜாவுடன் இந்த விடயங்கள் பற்றி பேச்சுக்களை நடத்தினீர்களா அவர் உங்களுக்கு என்ன பதிலளித்தார்.
பதில்:- ஆம் விரிவாக பேசினேன். அவர் கவலை தெரிவித்தார்.
கேள்வி:- தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு அவருடைய தெரிவாக உங்களையே கொண்டிருந்ததாக கூறியுள்ளார். இப்போது அந்த ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டுள்ளது அது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- அது தொடர்ப்பாக நான் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.
கேள்வி:- மாமனிதரின் மறைவுக்கு பின்னர் சிலகால இடைவெளியில் அரசியலில் பிரவேசித்த உங்களுக்கு வடக்கு அரசியல் களத்தின் முதல் அனுபவம் எவ்வாறிருக்கின்றது?
பதில்:- கட்சிகளுக்கு உள்ளேயும் கட்சிக்களிடையேயும் ஒற்றுமை என்பது காணப்படவில்லை. அது வளர்க்கப்பட வேண்டும்.
கேள்வி:- உங்களுக்கு சில உறுப்பினர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே. அது உண்மையா?
பதில்:- எனக்கு நேரடியாக விடுக்கப்படவில்லை. ஆனால் எனது ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது.
கேள்வி:- விருப்பு வாக்குகள் விடயத்தில் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுக்க முனைகின்றீர்களா?
பதில்:- இல்லை. அதில் நம்பிக்கை இல்லை.
கேள்வி:- தொடர்ந்தும் தென்மராட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பாட்டு அரசியலில் இருக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?
பதில்:- செயற்பாட்டு அரசியலில் தொடர்ந்தும் இருக்கவே விரும்புகிறேன். ஆனாலும் பல சவால்கள் காணப்படுகின்றன அவற்றை மக்களினதும் இளைஞர்களினதும் பூரண ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் எதிர் கொள்வேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.