ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ஹபீர் ஹாசிமின் இடத்தில் பேரினத்தை சேர்ந்த ஒருவர் இருந்திருந்தாலும் அவர் வாக்கை அடிப்படையாக கொண்டாவது இவரை விட சிறப்பாக செயற்பட்டிருப்பாரென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய பாறூக் ஏ.லதீப் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது..
தற்போதைய அரசை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து அமைத்துள்ளன. இவ்வரசாங்கத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கியமான அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான செயலாளர் பதவியை முஸ்லிம் ஒருவரே அலங்கரித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கையும் வாக்கையும் பெற்றதில் இவ்விடயம் அதிக தாக்கம் செலுத்தி இருந்தது.
இவ்வரசின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக முஸ்லிம் ஒருவர் இருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்க்கப்படும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இருந்த போதிலும் அமைச்சர் ஹபீர் ஹாசிம் செயலாளர் பதவியில் இருப்பதன் காரணமாக இலங்கை முஸ்லிமகள் சிறிதும் நன்மைகளை பெற்றதாக அறிய முடியவில்லை.
அமைச்சர் ஹபீர் ஹாசிம் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்கு அதிகம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த இடத்தில் பேரினத்தை சேர்ந்த ஒருவர் இருந்திருந்தாலும் இலங்கை முஸ்லிம் மக்களின் வாக்குகளை அடிப்படையாக கொண்டு அமைச்சர் ஹபீர் ஹாசிமை விட சிறப்பாக முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்திருப்பார். அமைச்சர் ஹபீர் ஹாசிம் முஸ்லிம்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது தனது பதவி பறி போய் விடும் என்ற அச்சமும் அவருக்கு முழு அதிகாரமிக்க செயலாளர் பதவி வழங்கப்படாமையும் காரணமாக இருக்கலாம்.
அண்மையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு ஒன்றிணைந்திருந்தார்கள். இதன் போது இவர் நழுவல் போக்கை கடைப்பிடித்ததாகவே அறிந்துகொள்ள முடிந்தது.
இவற்றின் காரணமாக கேகாலை மாவட்ட முஸ்லிம்கள் மாத்திரமன்றி முழு இலங்கை முஸ்லிம்களும் அமைச்சர் ஹபீர் ஹாசிம் மீது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தான் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியினூடாக தனக்குள்ள அதிகாரங்களை இயன்றவரை பயன்படுத்தி தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காலத்தின் தேவையாகும் என நாம் அவரிடம் கோரிக்கை முன் வைக்கின்றோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய பாறூக் ஏ.லதீப் குறிப்பிட்டார்.