நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை இல்லையென நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பில் அலரி மாளிகையில் நேற்றுமுன் தினம் (17) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரிசி, தேங்காய், பால்மா, மீன், இறைச்சி, முட்டை ,பருப்பு, வெங்காயம் , உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயுவிற்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட சுமார் 3,000 மெட்ரிக் தொன் அரிசியை சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையிலுள்ள கையிருப்பை சந்தைக்கு விநியோகித்தல், 25,000 மெட்ரிக் தொன் அரிசியை உள்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் காய்கறி விலை குறையும் எனவும் இதன்போது நம்பிக்கை வௌியிடப்பட்டது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கையின் பிரகாரம், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்க வழிவகுக்கும் என கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.