Breaking
Mon. Nov 25th, 2024

(சுஐப். எம். காசிம்)

இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர் சூளுரைத்தார். புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியால வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிபர் லாபிர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது.

புத்தளம் அகதிமுகாமில் வாழ்ந்து வடமாகாணத்தில் மீளக்குடியேறிவரும் மக்களினது பிரச்சினைகளிலும் உள்கட்டுமானப்பணிகளிலும் கரிசனை செலுத்தும் அதேவேளை சமாந்தரமாக புத்தளத்தில் வாழும் பெரும்பாலான அகதிமக்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் புத்தளத்தில் வாழ்ந்துவரும் அகதி மக்களின் கட்டுமானப்பணிகளையும், வாழ்வியல் தேவைகளையும் மேற்கொள்ளும் போது எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தோமோ அதேயளவு சவால்களை வடக்கு மீள்குடியேற்றத்திலும் சந்திக்க வேண்டிய துர்ப்;பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனிபோடுகின்ற வேதனையான நிலையும் ஏற்பட்டுள்ளது.

எமது முழுநேரத்தையும், காலத்தையும் இப்படியே வீணடித்துவிட்டால் முஸ்லிம் சமுதாயத்துக்கு சேவை செய்யாமல் கால்கட்டுப் போட்டுவிடலாமென இவர்கள் கற்பனை பண்ணுகின்றனர். அவர்களின்  இந்தக் கற்பனையானது பகற் கனவாகவே இருக்கும்.

முஸ்லிம் சமூகத்திற்கு இன்று நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை தட்டிக் கேட்பதற்கோ பார்ப்பதற்கோ நமது சமூகத்தில் எவருமில்லாத ஒரு நிலையை நாம் காண்கின்றோம். அதுமட்டுமன்றி சில அரசியல்வாதிகள் மௌனம்காக்கின்றனர். இந்த நிலைகளைக் கடந்து நாங்கள் பணியாற்றும் போது எங்களை இனவாதிகளென சித்தரித்துக் காட்டுகின்றனர். காரட்;டூன்களிலும் எழுத்துக்களிலும் முஸ்லிம் சமூகத்தை ஒரு மோசமான சமூகமாக சில ஊடகங்கள் திட்டமிட்டு வெளிக்காட்டுகின்றன. முஸ்லிம் பெண்ணொருவர் கோடரி கொண்டு மரத்தை வெட்டுவது போன்று ஒரு காட்சியை வேண்டுமென்றே காரட்;டூனாக வரைந்து பத்திரிகைகளில் சித்தரிக்கின்றனர். இதுதான் இந்த சமூகத்தின் இன்றய கவலையான நிலையாக இருக்கின்றது.

வடக்கிலேயுள்ள கிட்டத்தட்ட 154 கிராமங்களிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும் வித்தியாசமான பிரச்சினைகள் உள்ளன. புதிதாக குடியேற்றப்பட்ட சில கிராமங்கள் தொடர்பில் இனவாதிகள் தொடர்ந்த வழக்குகளுக்கும் நாங்கள் முகங் கொடுக்கின்றோம். உதாரணமாக சன்னார், கங்காணிக்குளம் ஆகிய கிராமங்கள் தொடர்பில் எமக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுப்பதோடு இலவன்குளம் பாதை திறப்பு தொடர்பிலும் எமக்கு வழக்குண்டு.

மன்னார் மாவட்டத்தில் பூர்வீகக் கிராமமான காக்கையன் குளத்தின் மாதிரிக் கிராமமாக புத்தளத்தில் அமைந்துள்ள ஹிதாயத் நகருக்கும் கடந்த காலங்களில் நாங்கள் பணியாற்றியது போன்று, இன்னும் பல அபிவிருத்திகளை இந்த வருடத்திற்குள் நிறைவேற்றுவதற்கு எண்ணியிருக்கின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *