அரச மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர், எனவே சட்ட நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்னர் அவர் வெளியேறினால் நல்லது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“முன்னாள் ஜனாதிபதிகள் மூவர், அரச வதிவிடங்களைக் கையளித்துவிட்டனர். இன்னும் மூவரே கையளிக்க வேண்டியுள்ளது. அவற்றைக் கையளிக்குமாறு அறிவித்துவிட்டோம்.
எனவே, மனச்சாட்சியின் பிரகாரம் கௌரவமாக வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முடிந்தால் வெளியேற்றுங்கள் என மகிந்த ராஜபக்ச சண்டித்தனம் காட்டிக்கொண்டிருக்கின்றார்.
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், பொது நிர்வாக அமைச்சிடம், அரச வீட்டை கையளித்துவிட்டு வெளியேறினால் சிறப்பு.
மகிந்த ராஜபக்ச வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்களும் விரும்புகின்றனர். கடிதம்தான் வேண்டுமெனில் அதுவும் அனுப்பிவைக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.