சஜித் பிரேமதாசவின் அளவுக்கதிகமான பேச்சே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அவரது தோல்வி அனைத்திற்கும் காரணம் என இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர், சஜித்தா, ரணிலா அல்லது சுமந்திரனா என்பது குறித்து முதலில் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்து அதன் பின்னர் விவாதத்திற்கு வர வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவரின் கன்னியுரை இன்று சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி எழுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர் உள்ளனர். முதலில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தீர்மானித்து அதன் பின்னர் உரையாட வர வேண்டும்.
சஜித் பிரேமதாசவின் அதிகளவிலான பேச்சே அவர்களது தோல்வி உள்ளிட்ட அனைத்திற்கும் காரணமாக அமைந்தது. எனவே இன்னும் அதிகமாக பேசுங்கள். அப்போது தான் எமக்கு வாக்கு அதிகரிக்கும்.அதேபோல் இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் மோதல் வந்துள்ளது.
சுமந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? அனுரகுமார எதிர்க்கட்சி தலைவரா? ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவரா? அல்லது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவரா என்பது குறித்து முதலில் உங்களிடம் ஒரு கலந்துரையாடலை நடத்தி ஒருவரை நியமியுங்கள்.
இன்று எம்.சி.சி குறித்து, சிங்கபூர் உடன்படிக்கை குறித்து, விலை உயர்வு குறித்து எல்லாம் பேசும் எதிர்க்கட்சி தலைவர் அன்று ஆட்சியில் இருக்கும் போது ஏன் வாய் திறக்கவில்லை.
சிங்கபூர் உடன்படிக்கை, எம்.சி.சி உடன்படிக்கை அமைச்சரவைக்கு கொண்டுவந்த நேரம் நீங்கள் அமைச்சரவையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என அப்போதைய ஜனாதிபதி கூறினார்.
இராணுவ தண்டிப்பு குறித்து நடவடிக்கை எடுத்தபோது ஏன் வாய் திறக்கவில்லை. அப்போதெல்லாம் வாய் திறக்காது இன்று நீங்கள் நியாமம் பேச வந்துள்ளீர்கள். உங்களின் ஆட்சிக் காலத்தில் செய்த எதனையும் நாம் செய்ய மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.