Breaking
Sun. Nov 24th, 2024

முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை(16) இரவு தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அங்கு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், ஐக்கிய தேசிய கட்சி காலத்தில் நாங்கள் இருக்கின்ற போது நடைபெற்ற விடயங்கள் எங்களுக்கு தெரியும். நாங்கள் கொழும்பில் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியினால் கிழக்கிற்கு இடம்பெற்ற அநியாயங்கள் வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் எமக்கு தெரியும்.ரணில் விக்ரமசிங்கவிற்கு நாங்கள் கூட பல விடயங்களை இதற்காக முன்வைத்திருந்தோம். ஆனால் அவர் அதை ஊதாசீனம் செய்தமையினால் கிழக்கு மாகாணத்தில் கட்சிக்கு செல்வாக்கு இழந்துள்ளதை அவரே உருவாக்கினார். ஆனால் இன்று சஜீத் பிரேமதாச அவர்கள் ரணில் விக்ரமசிங்க நடந்து கொண்டதை போன்று சிந்திக்கவில்லை. வித்தியாசம் ஒன்று இருக்கின்றது.இதனால் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்காமல் உங்களுக்கான தலைமைகளை உருவாக்குவதற்காக வந்துள்ளோம். கட்சி மற்றும் சஜீத் பிரேமதாசவின் கருத்துக்கமையவே உங்களை சந்திக்க வந்துள்ளேன். இதனூடாக ஐக்கிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும்.

நாட்டில் பல முஸ்லீம் கட்சிகள் இருந்தாலும் நாங்கள் ஏன் தேசிய கட்சியில் இருக்கின்றோம். காரணம் நாட்டில் சமாதானம் இனநல்லுறவினை இலகுவாக இதனூடாக கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சகலவற்றையும் தேசிய கட்சி ஊடாகவே உருவாக்க முடியும். இதனால் தான் நாம் இதனை உருவாக்க முஸ்லீம் மக்களை தேசிய கட்சியில் இருக்க வேண்டும் என கூறி வருகின்றோம். இது சஜீத் பிரேமதாசவிற்கு தெரியும். கட்சியின் கொள்கையும் கூட. இதனால் கட்சி முஸ்லீம்களுக்கு முக்கியத்தவம் வழங்கும் நிலையில் உள்ளது. எங்களது பொறுப்பானது எதிர்வரும் காலங்களில் சிறுகட்சிகளுடன் பயணம் மேற்கொள்ளாது ஐக்கிய மக்கள் சக்தியை முன்னெடுத்த செல்வதாகும். இம்ரான் மஹ்ரூப் கூறியது போல் 2015 ஆண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அவரை விட மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவம் கொடுத்தார்.

இதன் போது நாங்கள் கூட ரணில் விக்ரமசிங்கவுடன் வாக்குவாதப்பட்டுள்ளோம். ஏன் இம்ரான் மஹ்ரூப்பிற்கு முக்கியத்தவம் வழங்குவதில்லை என கேட்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெற கூடாது என்பது தான் எமதும் உங்களதும் எதிர்பார்ப்பாகும். வீணாக நாம் வாக்குவாதங்களை செய்யாமல் படிப்பினைகளை நாம் படிக்க வேண்டும். ஏன் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு இல்லாமல் போனது என்பதை சஜீத் பிரேமதாசவும் படித்துள்ளார்கள். இவ்விடயங்களை பற்றி இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மற்றும் கபீர் காசீம் போன்றவர்கள் தொடர்ந்தும் தலைமைத்துவத்துடன் இணைந்து உரையாடிக்கொண்டு தான் இருக்கின்றனர். முன்னர் ரணில் விக்ரமசிங்கவுடன் எவரும் கதைக்க முடியாது.ரணில் விக்ரமசிங்க முடிவெடுக்கும் பாணி வேறு. அவரது ஒரு முடிவெடுக்கும் பாணி இருக்கின்றது. அது யாருக்கும் தெரியாது. ஆனால் சஜித் பிரேதமதாச வடக்கு கிழக்கில் கட்சியை பலப்படுத்தும் விடயத்தில் உறுதியாக உள்ளார்.

இதனூடாக மாவட்ட அமைப்பாளர்களை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கும் முயற்சியும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டமை எல்லோருக்கும் தெரியும். அதில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அவர்கள் தேர்தல் கேட்டதனால் 3 ஆசனங்களை பெற முடிந்தது. இப்போது அவர்கள் அதனை மறந்து விட்டு வேறு வேறு விடயங்களை கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். 20 திருத்த சட்டம் பற்றி மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். 20 ஆவது திருத்த சட்டத்திற்கும் ஜனாசாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்கள் மன்னிப்பு கோரினாலும் அது வீண்.காரணம் வாக்குறுதி கொடுத்தால் மீள எடுக்க முடியாது. மன்னிப்பு கேட்பது எங்களிடம் அல்ல. கோட்டபாய ராஜபக்சவின் காலடியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவர்கள் 20 ஆவது சீர்த்திருத்தம் ஊடாக இந்த நாட்டில் உள்ள சுதந்திரமாக உள்ள அதிகாரத்தை வலுவிழக்க செய்துள்ளனர்.சுயாதீனமாக இயங்கிய ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற செயற்பாடகள் உள்ளிட்ட அதிகாரங்களை இல்லாமல் செய்துள்ளனர். ஜனநாயக ரீதியாக இயங்கக்கூடிய சூழ்நிலைகளை இயங்காமல் செய்துள்ளார்கள். இதனால் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு வாக்களித்தமைக்கு மன்னிப்பு கொடுக்க முடியாது.அவர்களது கட்சியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தார்களோ கொடுக்கவில்லையோ என்பது எமக்கு தெரியாது. எதிர்கால தேர்தல்களில் மக்கள் அவர்களை மன்னிப்பார்களா? என்பது தான் தற்போது இருக்கின்ற பிரச்சினையாகும். கட்சி காரியாலயங்களில் அவர்கள் கூடி மன்னிப்பு கேட்பதை விட கல்முனை சந்தியில் அவர்கள் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஏலுமா அப்படி கேட்ட ஏலாது தான். எனவே இதுவெல்லாம் அரசியல் ரீதியாக செய்கின்ற நாடகங்களாகும். இந்த நாடகங்களை ஒழிப்பதற்கு தான் இந்த பகுதியில் இருந்து தலைமைகள் உருவாக வேண்டும்.

நேர்மையாக மக்களின் தேவைகளை அறிந்த தெளிவான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அது வடகிழக்கு மற்றும் தெற்கிலாவது இது இடம்பெற வேண்டும். கடந்த 6 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக 2015 ஆண்டில் இருந்து நான் இருக்கின்றேன். அங்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.

20 சரத்திற்கு வாக்களிக்கும் நேரத்திற்கு முன்னர் எனக்கு பக்கத்தில் உள்ள இருவரை கேட்டேன். வாக்களிப்பீர்களா? என்று மச்சான் வாக்களிக்க மாட்டேன் என்றனர். அப்படி கதைத்துக்கொண்டு இருக்கின்ற போது பச்சை பட்டனை அழுத்தி விட்டார். ஒரு நிமிடம் கூட உரையாடி முடியவில்லை. அவ்வாறு தான் எனக்கு முன்னால் உள்ளவரும் அப்படி செய்தார். இந்த மாவட்டத்தில் 15 வருடம் பாராளுமன்றத்தில் இருக்கின்றவர். நான் அவரிடம் தட்டி கேட்டேன். வாக்களிக்கமாட்டீங்கள் தானே?என்று.இல்லவே இல்லை. அப்படி சொல்லி வாக்களித்தார்.இன்னுமொருவர் தற்போது பெரிதான பேசி திரிகின்றவர்(ஹாபீஸ் நசீர்) நான் இருக்கின்ற நிரலில் இருந்து நான்கு எம்பிகளுக்கு அருகில் தான் இருக்கின்றார். அவரிடம் வாக்களிக்கும் முடிவு நெருங்கும் பெல் அடிக்கின்ற சந்தர்ப்பத்தில் அவரிடம் சென்று கேட்டேன். ஹாபீஸ் என்ன நிலைமை. வாக்கு போட போறீங்களா என கேட்டேன். ஹரீஸ் இன்னும் வந்திருக்கின்றாரா? இல்லை தானே. அப்படி என்றால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றார்.

இதில் நான் கூறுவது உண்மையான விடயம்.ஹாபீஸ் நஸீர் அகமட்டிடம் கேட்டேன். ஏனெனில் அப்போது ஒரு பேச்சு எழுந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லீம் காங்கிரஸின் 4 பேர் வாக்களிப்பதாக வெளிவந்திருந்தது. இதனால் தான் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என நான் கேட்டேன். அவர் அவருக்கு முன்னால் உள்ள சிரேஸ்ட உறுப்பினர் ஹரீஸ் இருக்கின்றாரா என எழுந்து பார்க்கின்றார். முஜிபுல் ரஹ்மான் இன்னும் ஹரீஸ் வருகை தரவில்லை. எனவே அவர் வரவில்லையாயின் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றார். இறுதியில் ஹரீஸூம் ஹாபீஸூம் வாக்களித்தார்கள். அது மாத்திரமன்றி திருகோணமலையிலுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக கையில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தௌபீக்கும் வாக்களித்தார்கள். இது தான் உண்மையான நிலைமை. இந்த மாதிரியான அரசியல் வாதிகளால் முஸ்லீம் சமூகத்தினை வழிநடத்த முடியாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லீம் சமூகம் ஒரு மாற்றத்தை அரசியல் ரீதியாக உருவாக்க வேண்டும். புதிய தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும். இளைஞர்களை அதில் இணைத்து கொள்ள வேண்டும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *