முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
அம்பாந்தோட்டை – வீரகெட்டியப் பகுதியில், நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் சஜித் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உட்பட நாட்டின் சமகால பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காகவே சஜித்தால் மஹிந்தவுக்கு இவ்வாறு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சஜித் கருத்து தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் பொருளாதாரத்தை வழி நடத்த முடியாது, தெரியாது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தட்டுத்தடுமாறி மழுப்பல் போக்கில் பதில் வழங்கினார்.
அவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, ரூபாவின் பெறுமதி உட்பட பொருளாதாரம் தொடர்பில் என்னுடன் தேசிய மட்டத்திலான பகிரங்க விவாதத்துக்கு மஹிந்த தயாரா? ஆங்கிலம், சிங்களம் எந்தமொழியாக இருந்தாலும் நான் தயாராகவே இருக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.