–சுஐப் எம். காசிம்-
நாட்டில், அரைநூற்றாண்டு அனுபவம் உள்ள ஐக்கிய தேசிய கட்சி, பாராளுமன்றத்தில் இல்லாத குறையை ரணிலின் வருகை போக்கவுள்ளது. நாட்டின் முதற் பிரதமர் உட்பட பல பிரதமர்களையும், இரண்டு ஜனாதிபதிகளையும் ஆட்சியில் அமர்த்திய கட்சி இது. இன்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஆசனமும் இல்லாமல், தேசியப்பட்டியலில் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை வைத்துக்கொண்டு, ஆயுளை விடுமளவுக்கு வீழ்ந்து கிடக்கிறது.
கடந்த வருடம் ஓகஸ்ட்17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இக்கட்சிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு, ரணிலை ஒதுங்கிவிடுமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான். கட்சிக்கு அதிக செல்வாக்கைத் தேடித்தந்தவரின் மகனுக்கு வழிவிடுமாறு மக்கள் வழங்கிய தீர்ப்பால், ஒருகணம் திமித்துப்போன ரணில், எவ்வித தீர்மானத்துக்கும் வரமுடியாமல் சுமார் ஒருவருட த்தைக் கடத்தியும்விட்டார். இவருடனிருந்த சிலரது ஜே.ஆரின் மேட்டுக்குடிச் சித்தாந்தம்தான், ஐக்கிய தேசிய கட்சியை இப்படிக் கேவலப்படுத்தி உள்ளதாகவே சிலர் சிந்திக்கின்றனர்.
இதிலிருந்த இளந்தலைவர், 2019 ஜனாபதித் தேர்தலில் விட்டுக்கொடுத்திருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியும் தோன்றியிருக்காது. இது, தோன்றியதால்தானே ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்தளவு வீழ்ச்சி. ரணில் விசுவாசிகளின் விவாதம் இது. நல்லாட்சி அரசின் பிரதான பங்காளியாக இருந்த காலத்திலிருந்து, இந்தக் கீறல்கள், இடைவெளிகள் ஏற்படத் தொடங்கியதை மக்களும் அவதானித்து வந்தனர்.
முரண்பாட்டு அரசியலுக்குள்ளும் ரணிலும், மஹிந்தவும் மனவெளிகளில் உறவுடன்தான் உலவி வந்தனர். இந்த உறவின் உடன்பாடுகள், ஐக்கிய தேசிய கட்சி உடைவதற்கு உதிரிப்பங்களிப்புக்களையும் வழங்கியிருக்கலாம். ஏன், ரணிலின் மீள்வருகையும் இந்த உதவிகளுக்குத்தானா? இதுவும் இருந்துபார்க்க வேண்டிய கேள்விதான்.
எதிர்வரும் தேர்தல்களில், எதிர்க்கட்சி எழும்பாதிருக்கவும், ஆளும் கட்சிக்குள் உள்ள அதிருப்திகளை அச்சுறுத்தவும், ஐக்கிய மக்கள் சக்தியை நிலைதளரச் செய்வதுதான் ஆக,எளிய சமன்பாடு. இதுதான் பாராளுமன்றத்தில் ரணிலாற்றவுள்ள பணிகள். எதிர்க்கட்சியை உடைக்க முடியாதெனச் சிலரும், எதிர்க்கட்சித் தலைவாராகிறார் ரணிலென்ற ஆரூடங்களும்தான், இவற்றை எதிர்வுகூறுகின்றன. ராஜபக்ஷக்களின் குடும்பச் செல்வாக்கிலிருந்து, நாட்டின் அதிகாரத்தை அள்ளியெடுக்க ஆசைப்படும் பிரேமதாஸவின் குடும்பத்துக்கு, ஜே.ஆரின் மேட்டுக்குடிச் சிந்தனைவாதம் முட்டுக்கட்டையாகத்தான் போகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிறுபான்மைத் தலைமைகளை நம்பிக்கொண்டு காலத்தை எத்தனை நாட்களுக்கு ஓட்டுவது? தென்னிலங்கை வாசலுக்குள் நுழைந்து எதையாவாது தேடுவோம் என்றிருந்த சஜித்துக்கு, எதிர்வரும் 22 எரிச்சலுக்குரிய நாள்தான். ரணில் தவிர, இக்கட்சியிலிருந்து வேறு எவர் வந்தாலும் பொருட்டில்லைதான். ஆனால், வரப்போவது, இரண்டு தேர்தல்களிலும் இடைஞ்சல் தந்தவராயிற்றே! இதுமட்டுமா, மக்களுக்காகத்தான் பாராளுமன்றம் வரப்போவாதாகவும் இவர் கூறுகிறாரே. அவ்வாறு வந்தால், 1977 ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரேயொரு எம்.பி யென்ற சாதனையையும் ரணில் பெற்றுவிடுவார். எனினும் இவர் வருவதால், இனி வரவுள்ள பிரச்சினைகள் சஜித்துக்கு மட்டுமில்லையே!.
இருதரப்பிலும் பங்காளிக் கட்சிகளாக உள்ள சிறுபான்மைத் தலைமைகளின் சிதறல்களும் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவே செய்யும். இந்த நெருக்கடிகள், சிறுபான்மைத் தலைமைகளின் ஆளுமைகளையும் ஆட்டம்காணச் செய்யும். இருபதாவது திருத்தம், இரட்டைப் பிரஜாவுரிமை மேலும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலங்களின் வாக்களிப்புக்களில், எம்.பிக் களின் தீர்மானங்கள், இக்கட்சிகளின் ஆளுமை ஆணிவேர்களை உசுப்பியும் பார்த்திருக்கிறது. இனி யென்ன? பிராந்திய நலன்கள் எனச் சிலர் மொட்டுக்கட்சியிலும், பேரினவாதத்தை வீழ்த்துதலென்ற தோரணையில் சிலர், தொலைபேசியிலும் தொங்கத்தான் செய்வர். இதற்குள், யானை தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போலதா ன், 22இல் எம்.பி யாக உள்ளவரின் நிலையும் இருக்குமோ தெரியாது.
என்னவென்றாலும், இனி சஜித்துக்குப் பின்னர்தான் ராஜபக்ஷ யோகம் என்ற நிலைமாறி, இனியும் ராஜபக்ஷக்களின் ராஜ்யம்தான் என்ற நிலையைத்தான் யானை ஏற்படுத்துமோ தெரியாது.