கட்டுரைகள்பிரதான செய்திகள்

கோப்பாபிலவு முதல் கோப்பாவெளி வரை கையாலாகாத முஸ்லீம் அரசியல் – பாகம் 01

(ஜுனைட் நளீமி)

முல்லைத்திவு கோப்பாபிலவு எட்டு குடும்பங்களின் காணிகளை ஆக்கிரமித்திருந்த இலங்கை விமானப்படைடியினரை முகாம்களை விட்டும் வெளியேறி காணிகளை உரியவர்களிடம் கையளிக்குமாறு கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடாத்தப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல போராட்டங்கள் இடம்பெற்றது.

இதற்கு ஆதரவு தெரிவித்து எண்பதுகளுக்கு பிந்திய பகுதியில் முதன் முறையாக முஸ்லிம்களும் கண்டனப்பேரணியை நடாத்தினர். வடக்கில் முப்பது வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, பகுதி மீள்குடியேற மிகுதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், யாழ் உஸ்மானிய கல்லூரி மாணவர்களது போராட்டமும், கிழக்கில் மிலேச்சத்தனமான படுகொலைகளைச்சந்தித்த காத்தான்குடி சமூகமும் இதில் பங்கு கொண்டமை கடந்த கால கசப்புணர்வுகளை இரு சமூகங்களும் மறந்து செயற்பட வேண்டுமென்பதற்கான சமிக்கைகளே.

ஆனால், இதுவரை வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களை முழுமையாக மீள்குடியமர தடையாக அமைந்த, அதே போன்று கிழக்கில் முஸ்லிம்களது புலம்பெயர்ந்த பூர்விக நிலங்களுக்கு மீளக்குடியமர தடைகளை விதிப்பதும், முஸ்லிம்களது நிலங்களை கபளீகரம் செய்து, திட்டமிட்ட குடியேற்றங்களைச்செய்து வருவதுமான தமிழ் குறுந்தேசியவாத சக்திகளும், வங்குரோத்து அரசியல் தலைமைகளும் பினாமி அரச அதிகார வர்க்கமும் இருக்கின்ற போது, தமிழ் சகோதர இனத்தின் சிவில் சமூகம் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் மௌனித்திருப்பது வேதனைக்குரியதே.

முஸ்லிம்கள் மீள்குடியேற்ற விடயத்தில் இரட்டை வேடம் போடும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் வங்குரோத்துத் தனங்களை பட்டியல் போடுவதாயின், முடிவிலியில் சென்று முடியுமென்ற வாதம் யதார்த்தமானதே.

கோப்பாபிலவில் எட்டு குடும்பங்களின் காணிகளை இலங்கை விமானப்படையினர் ஆக்கிரமித்திருப்பதனை எதிர்த்து தமிழ் சிவில் அமைப்புக்கள் இணைந்து மக்கள் மையப்படுத்திய போராட்டத்தைக் கொண்டு சென்று வெற்றிக்கண்டது போன்று, முஸ்லிம் அரசியல் சமூகம் எதனையும் சாதிக்க முன்வராமை முஸ்லீம் அரசியலின் கையாலாகாத்தனத்தை எடுத்தியம்புகின்றது.

கோப்பாபிலவு விடயத்தில் அறிக்கை விட்டெறியும் மட்டக்களப்பு முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறைந்தது கோப்பாவெளி முஸ்லிம் மக்களது காணிக்கான தீர்வுகளையாவது பெற்றுக்கொடுக்க முன்வந்திருந்தால், பாராட்டத்தக்கதாக அமையும். வாழைச்சேனை-நாவலடிச் சந்தியில் குடியமர்ந்திருந்த முஸ்லிம் குடும்பங்களது பூர்வீக நிலங்கள் மிக நீண்ட காலமாக இராணுவ முகாம்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான தீர்வுகளைக்கூட முன்வைக்காத முஸ்லீம் கட்சி அரசியல்வாதிகள், கோப்பாபிலவு குறித்து விழுந்தடித்துக்கொண்டு அறிக்கை விடுவது வேடிக்கையாகவுள்ளது.

சிவில் சமூகத்தை வலி நடாத்த திராணியற்ற, அரசியல் சாணக்கியமற்ற, வெறுமனே பேரம் பேசும் சக்தி என்ற மாயாஜால வார்த்தைக்குள் முஸ்லிம் சமூகத்தை அடமானம் வைத்த, வெட்கம் கெட்ட அரசியல் பிழைப்பு குறித்து சிவில் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டியுள்ளது.

தமது நூற்றுக்கணக்கான ஏக்கர் அத்துமீறிய காணிகள் பறி போகும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு நீதிமன்றம் வரை செல்ல முயலும் அரசியல் வியாபாரிகள், யுத்தத்தினால் உயிர், உடமையை இழந்து அகதி வாழ்க்கையில் ஆயுளின் அரைவாசியைக் கழித்து, மீள்குடியேறி சுயமரியாதையுடன் வாழ முற்படுகின்ற போது, அதற்கான எத்தகைய வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுக்காமல், அடுத்தவன் போராட்டத்திற்கு எக்காளமிடுவது விசனத்துக்குரியதாகும்.

கரிமலையூற்றில் 1827ம் ஆண்டு அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் உடைக்கப்பட்டு, 110 முஸ்லிம் குடும்பங்களும் வெளியேற்றப்பட்டு இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள போதும், மன்னார் கடற்படை முகாம் முஸ்லிம்கள் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பெற்றுள்ள போதும், தீகவாபி முஸ்லீம் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ள நிலைமையிலும், கள்ளிச்சை கிராமமே இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள போதும், உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் குடியேற்றம் தடுக்கப்படÊடும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையிலும், காயன்குடா கிராமம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும், மட்டக்களப்பு முஸ்லிம் காலனி என்ற கிராமமே இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டு பள்ளிவாசல் அமைந்த பூமியில் பள்ளியை இடித்து இந்து மடாலயம் கட்டப்பட்ட போதும், ஜப்பார்திடல் முஸ்லிம் பூர்வீகக்காணியில் அதிகாரிகளின் அத்துமீறலில் கோவில்கள் கட்டப்பட்டுள்ள போதும், வாழைச்சேனை ஹிஜ்ராபுரம் (ஜிந்தாபாத்) கிராமம் அழிக்கப்பட்டு, பள்ளிவாசல் பூமியில் பிரதேச செயலகங்களைக் கட்டியுள்ள போதும், மாற்றுத்தீர்வின்றி முஸ்லிம் சமூகம் அகதி வாழ்க்கையுடன் மூச்சுத்திணறும் குடிப்பரம்பலுக்குள் மரணப்படுக்கையில் இருக்கும் போது, முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களுக்குள்ளான காழ்ப்புணர்வுகளை பாராளுமன்றம் வரை காவிச்சென்று மேடையேற்றும் அசிங்கத்தை நாளுக்கு நாள் அவதானிக்க முடிகின்றது.

கடந்த முப்பது வருட கால எல்லைக்குள் வடகிழக்கில் வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதி ஒப்பங்களில் வெறும் 5 வீததத்திற்கும் குறைவானவையே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை நிறுவ சுயாதீன விசாரணையை அமைக்கக்கோரி எந்த முஸ்லிம் கட்சி அல்லது முஸ்லிம் அரசியல்வாதி முன்வந்திருக்கின்றார் என்ற கேள்விக்கு விடையேதும் கிடைக்கப்போவதில்லை.

அமைச்சர்களும் முதலமைச்சர்களும் நிரம்பி வழியும் முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பான சில கிராமங்களை குறித்த சுருக்க ஆய்வு அரசியல் வங்குரோத்துத்தன்மையின் வெளிப்பாட்டைக் குறித்து நிற்கும். இந்த வகையில், கோப்பாவெளி பற்றிய குறிப்பு சிறிய உதாரணமாகக் கொள்ள முடியும்.

செங்கலடி-பதுளை வீதியில் சுமார் பதினைந்து மைல்களுக்கப்பால் அமைந்துள்ள வளம் பொருத்திய கிராமமே கோப்பாவெளியாகும். 1940களிலே முஸ்லிம்கள் கோப்பாவெளியில் தமது குடியிருப்புக்களை அமைத்திருந்தனர் என குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிக்குறிப்பிடும் இஸ்மா லெப்பை அலியார் லெப்பை (56 வயது) தனது தந்தை அலியார் இஸ்மா லெப்பை என்பவர் 1940களில் காடு வெட்டி குடியிருப்பை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார்.

தான் 1960ம் ஆண்டு கோப்பாவெளியில் வைத்தே பிறந்ததாகவும், இன்று வரை தமது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மஹோய என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். எட்டுப்பிள்ளைகளின் தந்தையாகிய இவர், 1985ம் ஆண்டு வன்செயலினால் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, இடம்பெயரும் வரை சுற்றி இருந்த சிங்கள, தமிழ் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

அத்தோடு, 1978ம் ஆண்டு வரை (இரண்டாம் வகுப்பு வரை) கோப்பாவெளி 78ல் அமைந்த தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

75 வயதுடைய அசனார் செய்லத்தும்மா என்ற 12 பிள்ளைகளின் தாய் கருத்துத்தெரிவிக்கும் போது, தனது பதினைந்தாவது வயதில் உறுகாமத்திலிருந்து திருமணம் முடித்து கோப்பாவெளி சென்றதாகவும், அங்கு வைத்தே 12 பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார். மண்ணாலான வீட்டில் வசித்து வந்த இவர் 6 ஏக்கர் வயல் நிலத்தையும், 3 ஏக்கர் குடியிருப்பு நிலத்தையும் கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகின்றார். சுமார் 200க்கு மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் இருந்ததாகவும், 75 குடும்பங்களுக்கு மேல் நிலையாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றமை அவதானிக்கத்தக்கது.

தான் வாக்களிக்க புல்லுமலை 78 பாடசாலைக்கே செல்வதாகவும், சுமார் 50 பேரளவில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்றும் குறிப்பிடுகின்றார். வன்செயலினால் இடம்பெயர்ந்து வந்து ஏறாவூர் மக்காமடி பாடசாலையில் சுமார் இரண்டு மாதங்கள் அகதிகளாக வாழ்ந்ததாகவும், அக்காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற அகதி நிவாரணம் தவிர எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென கவலையோடு தெரிவித்தார்.

தமது வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்ட போது, உயிர் தப்பி காடுகளில் ஒழிந்திருந்ததாகவும், பின்னர் இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடும் முஹைதீன் பிச்சை கபீர் மொகமட் (வயது 80) என்பவர், தனது வீடு 1968ம் ஆண்டு அமைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு அண்மித்ததாக அமைந்திருந்தது எனக்குறிப்பிடுகின்றார். அத்தோடு, பல முஸ்லீம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்ட மையவாடியில் இன்று தமிழ் சகோதர இனத்தினை குடியமர்த்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

கடந்த முப்பது வருட யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மீளக்குடியமர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிடும் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் உறவினர்களது வீட்டிலும், சுயமாக சம்பாரித்துக்கொண்ட சிறு நிலங்களிலும் ஏறாவூரில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.

தமது காணிகளுக்குள் பிரவேசிக்க முடியாத கெடுபிடிகள், யுத்தத்தினால் இழந்த காணி உருத்துப்பத்திரங்களை மீளப்பெறுவதிலுள்ள சிக்கல்கள், திட்டமிட்ட காணி அபகரிப்புக்கள், மீள்குடியேற்றத்திற்கான எவ்வித ஊக்குவிப்புமற்ற நிலை எனப்பல்வேறு சிரமங்களை இவர்கள் சந்தித்துக் கொண்டு வருவது கோப்பாபிலவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடும் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கோ, சிவில் சமூக அமைப்புக்களுக்கோ தெரிவதாக இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்த விடயங்களையாவது அமுல் நடாத்த வேண்டுமென்ற சர்வதேச அழுத்தங்களுக்குளÊ இலங்கை அரசு சிக்கியுள்ள நிலையில், அச்சிபாரிசுகளின் ஒன்றான தமது இடங்களுக்கும் மீளச்செல்ல வகை செய்து கொடுத்தல் என்ற அம்சம் முஸ்லிம் சமூகத்துக்கு மற்றும் விதிவிலக்காக அமைந்து காணப்படுவது துரதிஸ்ட்டமே.
இத்தகைய அரசியல் வங்குரோத்து நிலையில், வாக்குப்பிச்சைப்பாத்திரம் ஏந்தியவர்கள் பேரினவாதக் கட்சிகளதும், வெளிநாட்டுச் சக்திகளதும் எச்சசொச்சங்களுக்கு அடிமைப்பட்டு முஸ்லிம் சமூகத்தை வெற்றுக்கோஷங்களால் அடகு வைக்க முனைவது முஸ்லிம் அரசியல் பயணத்தில் மாற்றுப்பாதையினை முன்வைக்க வழி வகை செய்யுமென்பது சந்தேகமில்லை.

-வளரும்-

Related posts

தலைவர் ரிஷாட் பதியுதீன் எவ்வித தவறுகளும் செய்யவில்லை; அவர் மீது அரசியல் பழிவாங்கல்

wpengine

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் முஜிபுர் ரஹ்மான்

wpengine

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் உசேன் போல்ட்!

wpengine