(எம்.ஆர்.எம்.வஸீம்)
ராஜபக்ஷ குடும்பத்தினரை அரசாங்கத்துக்குள் இணைத்துக்கொண்டு நல்லாட்சியை கொண்டுச் செல்ல முடியாது. அவ்வாறு நடந்தால் வீதியில் இறங்கி போராடுவோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளித்தால் பாரிய பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
கோத்தபாய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரண்டாம் இடத்துக்கு கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு எந்த முயற்சியும் இடம்பெறவில்லையென கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச தலைவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கைவைத்து வருவதை பொறுத்துக்கொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இருக்கும் சிலர் ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். அதனால்தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.