பிரதான செய்திகள்

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டுபோராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் இந்த மக்களை புரிந்து அவர்களுக்காக அவர்கள் கோரிக்கையின் பேரில் குரல் கொடுப்பது உத்தமமானது.

இல்லை என்றால் விலகி இருந்து சுமந்திரன் தாம் விரும்பும் சிங்கள மக்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது”
இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் “சுமந்திரனின் சிங்கள நேர்காணல்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியிருந்த நேர்காணலைக் கண்டேன். அதிர்ச்சி அடைந்தேன்.


இவ்வாறானவர்களின் இத்தகைய பேச்சுக்களினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.


அத்துடன் சிங்கள அரசுகள் தற்போது செல்லும் பாதை சரியென்று சிங்கள மக்கள் நினைக்கவும் வாய்ப்புண்டு. என் பழைய மாணவரான சுமந்திரன் பற்றி எந்தக் கருத்தும் கூறாது இருக்கவே நான் முயன்றேன். ஆனால் நண்பர்கள் பலரின் உந்துதலால் நான் என் கருத்துக்களை வெளியிடுகின்றேன்.


விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார்.


அப்படியென்றால் தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இதுகாறும் இருந்திருக்க முடியும்? தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் பிரவேசம் செய்திருக்கக் கூடாது.


தனது கருத்துக்களை வெளிப்படையாக வடமாகாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ மக்களுக்குக் கூறி சுயேச்சையாக வாக்குக் கேட்டிருக்கலாம்.
அல்லது சிங்களக் கட்சிகள் ஊடாக வாக்குக் கேட்டிருக்கலாம். யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் தோளில் ஏறி பயணம் செய்து கொண்டு பெரும்பான்மையினரின் அடிவருடி போல் வேஷம் ஆடுவது சகிக்க முடியாது இருக்கின்றது. எனது பழைய மாணவரா இவ்வாறு பேசுகின்றார் என்று வெட்கமாக இருக்கின்றது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லா மக்களும் அறிந்தது. தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களுக்கும் இது பற்றி தெரியும். ஆனால் சுமந்திரன் போன்றவர்கள்தான் உண்மையை அறியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றார்கள் போல் தெரிகின்றது.


இதனால் எதைச் சாதிக்கப் பார்க்கின்றார்? ஜனநாயக ரீதியாக தமிழர்களின் உரிமையை வெல்ல வேண்டும் என்ற வேணவாவால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமே இதனால் தடம்மாற்றிக் காட்டப்படுகின்றது.


இதனால் சிங்கள மக்கள் மத்தியில் உண்மை நிலைமையை மறைத்து தவறான புரிதல்களை ஏற்படுத்த சுமந்திரன் முயல்கின்றாரோ என்று எண்ண வேண்டியுள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு முந்தையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிறார்.

சுமந்திரனுக்கு வரலாறு தெரியவில்லையா அல்லது தெரியாததுபோல் நடிக்கின்றாரா? அப்படி நடிப்பதால் நல்லவர் என்ற பெயரை சிங்களவர்கள் மத்தியில் ஒருபோதும் அவர் பெற முடியாது. அவருக்குத் தமிழ் மக்களின் உணர்வுதான் புரியவில்லை என்றால் வரலாறுமா தெரியவில்லை.


1949இல் உருவாக்கப்பட்டது தமிழரசுக் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது 2001இல். 2001ல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில்தான் அவர் பேச்சாளராக இருக்கிறார் என்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.


சிங்களவர்கள் மத்தியில் சுமந்திரனைவிட அதிக காலம் நான் வாழ்ந்திருக்கின்றேன். அத்துடன் சிங்கள மக்களை உறவாகவும் கொண்டவன் நான்.
அவர்களுடன் உறவாக இருப்பது வேறு. எமது உரிமைகளை அவர்களிடம் எடுத்துக் கூறுவது வேறு. சிங்களவர்கள் மத்தியில் அதிக காலம் வாழ்ந்துவிட்டுத்தான் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு வந்திருக்கின்றேன்.


சுமந்திரன் கூறியவை ஏதோ தனிப்பட்ட செல்வாக்கை சிங்களவர் மத்தியில் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியது போல் தெரிகின்றது. தமிழ் மக்களின் வருங்கால நலம் பற்றி சிந்திக்காதுதான் அவர் அங்கு பேசியுள்ளார்.


மற்ற இனங்களை மதிப்பது வேறு. அவர்களின் அடிமையாக வாழ விரும்புவது வேறு. மற்ற இனங்களை திருப்திப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் அடிவருடியாகக் காட்டிக் கொள்வதை சுமந்திரன் பெருமையாக நினைக்கிறார் போல் தெரிகின்றது.


இது சிங்கள மக்களுக்கு எம் தொடர்பில் தவறான தோற்றப்பாட்டையே உருவாக்கும். தமிழர்கள் அடிமையாக இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும்.
சுமந்திரன் அவ்வாறு அடிமையாக இருப்பதை பெருமையாகக் கருதலாம். ஆனால் தமிழர்கள் சார்பில் பேசும் போது அவ்வாறு பேச அவருக்கு உரித்தில்லை.


அது மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தோல்வியை தழுவிய நிலையில், விரக்தி கொண்ட தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியது வரலாறு. அதனை நாம் எம் விருப்பு வெறுப்புக்களுக்காக மாற்றிச் சொல்ல முடியாது.
கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டு, இப்போது வந்து வடக்கு கிழக்கு மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.


வேண்டுமானால் இந்த மக்களை புரிந்து அவர்களுக்காக அவர்கள் கோரிக்கையின் பேரில் குரல் கொடுப்பது உத்தமமானது. இல்லை என்றால் விலகி இருந்து சுமந்திரன் அவர்கள் தாம் விரும்பும் சிங்கள மக்கள் மத்தியில் போட்டியிட்டு அரசியல் பதவிகளை வகிப்பது நல்லது.


சிங்களவர்களுக்கு எமது விடுதலைப் போராட்டம் தொடர்பில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். தம்பி பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்தினார் என்பதை நன்கு விளங்கிக்கொண்டுள்ள சிங்கள மக்கள் பலர் உள்ளனர்.


தமிழர் தம் போராட்டங்களை, நியாயங்களைப் பற்றிப் பேசுகின்ற சிங்களத் தலைவர்கள் தெற்கில் இருக்கின்றார்கள்.
அப்படியிருக்க தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.


அதே கேள்வி சிங்களத்தில் என்னிடம் கேட்டிருந்தால் பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் முற்றும் முழுதுமாக உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பேன்.

Related posts

பணத்துக்கும், பகட்டுக்கும், பதவிக்கும், நாங்கள் அடிமைப்பட்டு இருக்கும்வரைக்கும் தயாகமகே போன்ற பணக்கார இனவாதிகளுக்கு வாசிதான்.

wpengine

மார்புப்புற்று நோயும்,நவீன சிகிச்சை முறைகளும் எனும் தலைப்பில் பெண்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்வு

wpengine

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

wpengine