கொழும்பு நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்குதல், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தல், முகாம்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்பான உயர்மட்டக் கூட்டமொன்று இன்று காலை (22/05/2016) கொலொன்னாவை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, ஏ.எச்.எம். பௌசி, றிசாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான் எம்.பி, மரிக்கார் எம்.பி, மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், சுனில் ஹதுன்னெதி, பிரதேச சபைத் தலைவர், முல்லேரியா, கொடிகஹவத்த, வெல்லம்பிட்டிய பிரதேச செயலாளர்கள், கொலொன்னாவை மருத்துவ வைத்திய அதிகாரி, அனர்த்த முகாமைத்துவ உயரதிகாரிகள், பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, மதகுருமார்கள், இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள், பொதுச் சுகாதார வைத்தியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
அகதி மக்கள் எதிர்கொள்ளும் அத்தனைப் பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வுகளையும் அமைச்சர்கள் உடனுக்குடன் எடுத்தனர். இந்தப் பிரதேசத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை துப்புரவு செய்வது தொடர்பிலும், கொழும்பு மாநகர சபை மேயர், மாநாகர சபை ஆணையாளர் ஆகியோரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டு, இன்றே பணிகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் முடிவெடுக்கப்பட்டது.
அகதிகள் தற்காலிகமாகத் தங்குவதற்கு கூடாரங்களை வரவழைத்து, பாதுகாப்பான மேட்டுக் காணிகளில் அவர்களை தங்கவைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. அகதிகளுக்கான மருத்துவ வசதிகளை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள எம்.ஒ.எச் காரியாலயத்தில் ஒருங்கிணைத்து, அவற்றை மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு நிருவனங்களும் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, தான் விரும்பியவாறு மருந்துகளையும், குழியைகளையும் கொடுப்பதன் மூலம், அகதிகளை மேலும் நோய்க்கு உள்ளாக்க வேண்டிய நிலை இருப்பதாக, மாநாட்டில் பங்கேற்றிருந்த மருத்துவ வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டி இருந்தார். தற்போதைக்கு இந்தப் பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்புற்ற மக்களுக்கு ஆயுர்வேத வைத்தியம் அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.
முகாம்களில் தங்கியிருந்து சமைக்க வசதி உள்ளோருக்கு உலர் உணவுகளைத் தொடர்ந்து வழங்குவதெனவும், தெருவோரங்களிலும், முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கி இருப்போருக்கு தொடர்ந்தும் உணவுப் பொதிகளை வழங்குவதற்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் இருந்து, கொழும்பு மத்திய பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், மற்றும் சீருடைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக, அந்தஅந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு, அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி, உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.