(சாஜஹான் முஹம்மட்)
போதைப்பொருள் பாவினையிலிருந்து கொலன்னாவை முற்றாக மீட்கப்பட்டு அடுத்த சில வருடங்களுக்குள் கல்விக் கேந்திரமாக மாற்றியமைக்கப்படும் என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரும் கொலன்னாவை ஐ.தே.க அமைப்பாளருமான எஸ்.எம்.மரிக்கார்.
கொலன்னாவைப் பிரதேச செயலாளர் பிரிவில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்;
கொலன்னாவையில் சகல இன, மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் இங்கு பிரச்சினைகள் இன்றி நல்லிணக்கத்துடன் வாழும் சூழல் கட்டியெழுப்பப்படும். அடுத்துவரும் ஐந்தாண்டுகளுக்குள் கொலன்னாவையில் கல்வியாளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அதிகளவில் உருவாக வேண்டும். இதற்கான அடித்தளத்தையே இப்போது இட்டுள்ளேன். எமக்கு கட்சி, இன, மத வேறுபாடுகள் தேவையில்லை. கல்வியறிவு, சிறந்த பண்பாடுகள், மத ஒழுக்க விழுமியங்கள் கொலன்னாவையில் கட்டியெழுப்பப்படும். சகல மக்களினதும், முக்கிய பிரமுகர்களினதும் ஒத்துழைப்பை இதற்காக எதிர்பார்க்கிறேன்.
கொலன்னாவையில் இந்த ஆண்டு 19 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். அடுத்த ஆண்டு குறைந்தது 30 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். 2020ஆகும் போது இங்கிருந்து 75 மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைய வேண்டும். அதற்கான பாரிய வேலைத்திட்டங்களை நான் வகுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.